Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சஞ்சய் தத் என்ற மாபெரும் கலைஞன் நடிப்பை தொலைத்த கதை!

டந்த 1993-ம் ஆண்டு 'கல்நாயக்' என்ற இந்தி திரைப்படம் வெளியான போது, இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த படத்தில் தீவிரவாதி வேடமேற்றுதான் நடிகர் சஞ்சய் தத் நடித்திருப்பார். ஆனால் பின்னாளில் தானும் ஒரு தீவிரவாதி என்ற அடையாளத்துடன் சிறைகளில் காலத்தை கழிக்க வேண்டியது இருக்கும் என்பதை சஞ்சய் தத் அப்போது   நிச்சயம்  நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

சுனில் தத் என்ற இந்து தந்தைக்கும் நர்கீஸ் தத் என்ற முஸ்லிம் தாயுக்கும் பிறந்தவர் சஞ்சய் தத். இவரது தந்தை எம்.பியாகவும் இருந்தார். கடந்த  1981-ம் ஆண்டு 'ராக்கி ' என்ற சினிமா மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் சஞ்சய் தத்.

ஆஜானுபாகுவான தோற்றம், கதைக்கு ஏற்ற வகையில் நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சஞ்சய் தத்தை,  இந்தி திரைப்பட உலகின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தது. கடந்த  1991-ம் ஆண்டு வெளியான 'சாஜன்' திரைப்படம், சஞ்சய் தத்த்தின்  சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல். அந்தளவுக்கு அந்த திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்தினார். பட்டி தொட்டியெல்லாம் ஓடிய இந்தி திரைப்படம் அது. 

'சாஜன்' வெளியான பிறகு கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி,  மும்பையே குண்டு வெடிப்பால் அல்லலோப்பட்டது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள், கதறல்கள், ஓலங்கள் கேட்க, நகரமே இந்து -முஸ்லிம் மோதலால் பற்றி எரிந்தது. மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து  சஞ்சய் தத் நடிப்பில் அதே ஆண்டு மே மாதம் 'கல்நாயக்' திரைப்படமும் வெளியானது. இந்த படத்தில் சஞ்சய்தத் தீவிரவாதியாகத்தான் நடித்திருந்தார்.

இந்தி திரைப்படத்தை பொறுத்த வரை, சஞ்சய் தத் வேடமிட்டு நடிக்காத கதையே கிடையாது. கேங்ஸ்டரில் இருந்து காமெடி ரோல் வரை சஞ்சய்தத் கை வைக்காத ரோல்களும் கிடையாது. முன்னாபாய் எம்.பி.பி.எஸ். சில் காமெடி ரோலில் சஞ்சய் தத் வெளுத்து வாங்கியிருப்பார். சஞ்சய் தத் மட்டும் இதே போன்று சர்ச்சைகளில் சிக்கியிருக்கா விட்டால், மூன்று கான் நடிகர்களும் கூட  இந்தி திரையுலகில் சஞ்சய் தத்துக்கு பின்னால்தான் இருந்திருக்க முடியும். 

ஆனால் விதி  யாரை விட்டது. மும்பையில் ஏற்பட்ட கலவரம் சஞ்சய் தத்துக்கு தனது குடும்பத்தினரை பற்றிய பயத்தை ஏற்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால்,மும்பை குண்டுவெடிப்புக்கு பின்புலமாக இருந்த தாவூத் இப்ராஹிம் கூட்டத்திடம் இருந்து ஏ.கே.56 என்ற நவீன ரக துப்பாக்கியை வாங்குகிறார். தாவூத்தின் சகோதரர்தான் தாவூத்துக்கே தெரியாமல் இந்த ஏ.கே. 56 ரக துப்பாக்கியை சஞ்சய் தத்துக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தாக கடந்த 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்சஞ்சய் தத் கைது செய்யப்படுகிறார். ஜுன்  மாதம் தீவிரவாதியாக சஞ்சய் தத் நடித்த' கல்நாயக் 'வெளியாக ,அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. தீவிரவாதியாக வேடமேற்று நடித்தவர் அதற்காக கைது செய்யப்படும் போது, அதன் விளைவுகளும் வேறு மாதிரியாக அமையுமல்லவா? அது போலவே சஞ்சய் தத் திரையைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகவே தோன்ற ஆரம்பித்து விட்டார். 

இந்த வழக்கில் தொடர்ந்து 18 மாதங்கள் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  1995ஆம் ஆண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. வெளி வந்த பிறகும் சில படங்களில் நடித்தார். அப்படி வெளிவந்த படம்தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் . ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சஞ்சய் தத்துக்கு மற்றுமொரு ஹிட்டாக அமைந்தது. 

இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு மும்பை தடா நீதிமன்றம்  சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் மேல்முறையீடு செய்ய, தடா நீதிமன்றம் விதித்த தண்டனையில் ஒரு ஆண்டினை குறைத்து 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தண்டனை உறுதி செய்யப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் புனே எரவாடா  சிறைப்பறவையாகவே இருந்தார் சஞ்சய் தத் . நல்லொழுக்கம் காரணமாக தண்டனை காலம் முடிவடையும் முன்னரே சிறையில் இருந்து இன்று சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டார். 

காலை 10 மணியளவில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த தலை  தாழ்த்தி மண்ணைத் தொட்டு வணங்கினார். பின்னர் சிறை வாயிலில் காவலுக்கு நின்றிருந்த காவலர்களை நோக்கி 'சல்யூட்' அடித்தார். 

சிறை வாசலில் சஞ்சய் தத்தை வரவேற்க அவரது மனைவி மான்யா தத்தும் குழந்தைகள் இக்ரா மற்றும் ஷகரன் ஆகியோரும் வந்திருந்தனர்.முன்னாபாய் எம்.பி.பி.எஸ். பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்ட சினிமாத்துறை பிரபலங்களும்  சிறைவாயிலில் சஞ்சய் தத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட சஞ்சய் தத், பின்னர்  தனி விமானம் மூலம் மும்பை திரும்பினார்.

புனேவில் இருந்து விடை பெறும் போது , சஞ்சய் தத்தின் வாய் உதிர்த்த வார்த்தைகள்  ''இனிமேல் சுதந்திரமாக நடப்பது கடினமான விஷயம்' 'என்பதுதான்'. தவறான சேர்க்கையால் சஞ்சய் தத் என்ற மாபெரும் கலைஞன் தனது நடிப்பை மட்டும் தொலைக்கவில்லை... தொலைத்தது  சுதந்திரத்தையும்தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close