Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்! - ஸ்பைடர் விமர்சனம்

Chennai: 

தனது சூப்பர் டூப்பர் அறிவுத்திறனைக் கொண்டு மக்களை பாதுகாக்கும் ஒரு சூப்பர் ஹீரோ.  அவனுக்கு சவாலாக உருவெடுக்கும் ஒரு சூப்பர் வில்லன். அவனை பிடிக்க  ஹீரோ பின்னும் டெக்னிகல் வலைகள்தான் இந்த‌ ‘ஸ்பை’டர்.

ஸ்பைடர்

சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூகவிரோதிகளின் சதி திட்டங்களை கண்காணிக்க, தொலைதொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கும் `மொபைல் டேப்பிங்' வேலை பார்க்கிறார் சிவா ( மகேஷ் பாபு ). இடையே, பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு வரும் பிரச்னைகளையும் கண்டுபிடித்து தடுக்கிறார். ஒருவர்  பயந்தாலோ, அழுதாலோ, மிரட்டப்பட்டாலோ, மகேஷ் பாபு உருவாக்கியிருக்கும் மென்பொருள் காட்டிக் கொடுத்துவிடும். உடனே மகேஷ் பாபுவும் "பூம் பூம் பேம் பேம்.... தூம் தூம் பேம் பேம்... ஒற்றா வா... கீற்றாய் வா" என பாடலைப் போட்டு ஆக்ஷனுக்கு  கிளம்பிவிடுவார். அப்படி ஒருநாள் மகேஷ் உதவ நினைக்கும் ஒரு பெண்ணும், மகேஷின் தோழியும் மர்ம நபரால் உடல்கள் துண்டாக்கப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள். இந்த‌ கொலைகளைச் செய்தது யார், எதற்காக இந்த கொலைகள், மகேஷ் அந்தக் கொலையாளியைப் பிடித்தாரா என்பதை பொறுமையாக சொல்லியிருக்கிறது `ஸ்பைடர் - த டார்க் நைட் ரைசஸ்'

அக்கட தேசத்து ஹீரோ மகேஷை பக்காவாக தமிழ் பேச வைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வார்ம் வெல்கம் ப்ரோ. தமிழ் உச்சரிப்பில் சில இடங்களில் தெலுங்கு வாடை எட்டிப் பார்த்தாலும் லிப் ஸின்க் கச்சிதமாக இருக்கிறது. மற்றபடி அக்கடதேசத்தில் அவரை எப்படி  பார்த்தோமோ, எப்படி பேசிக் கேட்டோமோ, அதை அப்படியே இங்கேயும்... பாடல்களில் கலர் கலர் காஸ்ட்யூமில் வந்து மாடலிங் செய்வது, சீரியஸாக கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தே  திட்டங்களைப் போடுவது என மகேஷ் ரியாக்‌ஷன் காட்டுவதை எப்படியெல்லாம் குறைக்க முடியுமோ, அதை தெளிவாக செய்திருக்கிறார்கள். ஹீரோவின் வேடத்துக்கு சமமான வில்லன் வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. பின்னிப்பெடலெடுத்திருக்கிறார் மனிதர். அதிலும் மகேஷ்பாபு-எஸ்.ஜே.சூர்யா விசாரணைக் காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவின் மாடுலேஷன்கள் ரகளையோ ரகளை. ஆனாலும், சில‌ இடங்களில் ஹெத் லெட்ஜரின் ஜோக்கர் கதாபாத்திரத்தை நினைவுபடுத்திருகிறார்.  `பரத், ரகுல் ப்ரீத் சிங், ஷாஜி, ஜெயப்பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி, ப்ரியதர்ஷி ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்குக் தேவைதானா?' எனக் கேட்கத் தோன்றுகிறது. ஹீரோ, வில்லனைத் தவிர மற்ற அனைத்து  கதாபாத்திரங்களும்  சாபூத்ரியில் வரும்  ஒப்புக்குச் சப்பானியாகவே இருக்கிறார்கள்.

SPYder

விறுவிறு கதை இடையில் காதல், காதலுக்குப் பிறகு பாடல், பாடலுக்குப் பிறகு  மீண்டும் கதைக்குள் செல்வதென‌ அதே `துப்பாக்கி' பட டெம்ப்ளேட் திரைக்கதை. ஆனால்,  `துப்பாக்கி'யின் கதைக்குள் இருந்த அழுத்தம்,  திரைக்கதை பயணிக்கும் பாதை,  அதன் முடிவில் உள்ள‌ நேர்த்தி ‘ஸ்பைடரி’ல் கொஞ்சம் மிஸ்ஸிங். படத்தின் கதை ஹைதராபாத்திலும், ஆந்திர தேசத்தின் மற்ற‌ சில பகுதிகளிலும் நடப்பதாகக் காட்டுகிறார்கள். ஆனால், அங்கு அதிகம் பார்க்கப்படும் சீரியல் `சரவணன் மீனாட்சி' என்பதில் ஆரம்பித்து பல இடங்களில், `மல்டிலிங்வல்' மேக்கிங்கில் பல குழப்பங்கள். எஸ்.ஜே.சூர்யாவின் பின்னணி குறித்துச் சொன்னது மட்டும் போதுமா, ஒற்றை ஆளாக அவர் எப்படி இத்தனை விஷயங்களைச் செய்கிறார், அவருக்கு இதற்கெல்லாம் தேவையான பணம் எங்கிருந்து வருகிறது போன்ற கேள்விகள் அந்தக் கதாபாத்திரத்தையே கொஞ்சம் பலவீனமாக்குகின்றன. மேலும், ஒரு பாதிக் கட்டடத்தில் உக்காந்துகொண்டு ஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.வி பண்ணும் எல்லா வேலைகளையும் பண்ணுகிறார் மகேஷ். விட்டால் நாசாவுக்கே சவால் விடுவார்போல! இப்படி விறுவிறுப்பில்லாமல், எந்தத் திருப்பமும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் முருகதாஸின் திரைக்கதை படத்துக்கு மைனஸ்.

 

 

விஷுவலாக பல விஷயங்களை நம்பும்படி காட்டியாகவேண்டிய களம். ஆனால், அதில் பாதிக் கிணறுதான் தாண்டியிருக்கிறார்கள். ஹாரிஸின் பின்னணி இசையில் ‘துப்பாக்கி’யின் சாயல். பூம் பூம் ரோபோ துவங்கி மாயநதி எனப் பல பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன பாடல்கள் அனைத்தும். பெரும்பாலான‌ காட்சிகள் செட்டுக்குள்ளேயே படம் பிடித்திருந்தும், அதை ஸ்டைலிஷாக‌  சமாளிக்கிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. முதல் பாதியை விறுவிறுவெனக் கொண்டு சென்ற ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, படத்தை முழுக்க முழுக்க‌ என்கேஜாக வைத்திருக்க உதவுகிறது.

 

 

மகேஷ் பாபு போன்ற பக்கா மாஸ் ஹீரோ,  ஸ்டைலிஷான களம், நச் டெக்னிக்கல் டீம், பைலிங்குவல் கான்செப்ட் எனப் பல விஷயங்களுடன் சுவாரஸ்யமான கதை, திரைக்கதையும் இருந்திருந்தால் மிரட்டியிருப்பான் இந்த ஸ்பைடர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close