Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

வெளியூருக்குப் பேருந்து ஏறும் விஷால், அந்த ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களைச் சந்திப்பாரோ இல்லையோ, ஊரின் பிரபல ரவுடிகளுடன் மோதும், 'அருவா எடு... அப்படிப் போடு’ கதை. இந்த சீரியலில் கல்யாணச் சமையல்காரர் சந்தானத்துடன் பஸ் ஏறியிருப்பதே... 'பட்டத்து யானை’!  

சந்தானத்துடன் சேர்ந்து ஹோட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு வரும் விஷாலுக்கு, ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் மனதில் பூப் பூக்கிறது. ஆனால், திருச்சி தாதா ஒருவருக்கும் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் அதே பூ. ஐஸ்வர்யாவைப் பாதுகாக்க விஷால் ஆக்ஷன் அவதாரம் எடுக்க, முன் பகை, முன் முன் பகை என, ஏரியாவாரியாக விஷாலால் பாதிக்கப்பட்ட அத்தனை ரவுடிகளும் கண் சிவந்து, திருச்சி மண் சிவக்கவைக்கிறார்கள். ஏகப்பட்ட அபுஹாய்கள், பற்பல அரிவாள் கிளிங்குகள், பொளேர், பளேர்களுக்குப் பிறகு க்ளைமாக்ஸ்!  

இப்படியான 'முந்தைய’ படங்களில் நடித்தது போலவே இதிலும் நடித்துவிடலாம் என்று விஷால் முடிவு செய்துவிட்டார் போல. கொஞ்சும் சிரிப்போ, கொப்பளிக்கும் கோபமா.... அனைத்தும் 'எங்கேயோ பார்த்த ஞாபகம்’தான்! ரைமிங், டைமிங் காமெடி யில் ஆயாசப் படங்களை அநாயசமாகத் தூக்கி நிறுத் தும் 'காமெடி பில்லர்’ வேலை சந்தானத்துக்கு. 'என்னை அடிச்சா எனக்குத்தாண்டா வலிக் கும் மொட்டை மூதேவி!’, 'கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி இருக்கான்’ என்று பன்ச் அடித்தபடி அவர் செய்யும் அலப்பறைகள்தான் படத்தின் ஒரே ஆறுதல். ஹீரோயினாக அறிமுகம் ஆகும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு, ஒரு ஸ்மைலி.  இன்னும் மைல்ஸ் டு கோ ஐஸ்!  கால்டாக்ஸி டிரைவரிடம், ஜான் விஜய் மொக்கை வாங்கும் இடம் 'ஏ’ கிளாஸ். மற்ற வில்லன்கள் உறுமுவதும், அடி வாங்கி இருமுவதும்... மிடியலை சார்!

இந்த மாதிரியான படங்களுக்கு என்று சாதகமும் பாதகமும் செய்யாத ஒரு பழகிய ஃபார்மட் இருக்குமே... அதன்படி தத்தமது கடமையை முடித்துக்கொள்கிறது இசை, ஒளிப்பதிவு, கலை உள்ளிட்ட துறைகள்.

எல்லாம் சரி... படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் பாஸ்? அது சரி, இங்கே அது மட்டும்தான் பிரச்னையா?    

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close