Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி, யாரைக் காப்பாற்றுகிறார்? - ‘தொண்டன்’ விமர்சனம்

உயிரைக் காக்க நினைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், உயிரை எடுக்க நினைக்கும் மந்திரியின் மகனுக்குமான நீதி-அநீதி போராட்டம்தான் ‘ தொண்டன் ’. 

தொண்டன்

ஆம்புலன்ஸ் ஓட்டும் பைலட் (ஓட்டுநர்) சமுத்திரகனி. மந்திரி ஞானசம்பந்தனின் மகன் நமோ நாரயணன். நமோவின் அடியாட்கள் நடுரோட்டில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள். வெட்டுபட்டவரை நமோவின் அடியாட்களையும் மீறி தன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று காப்பாற்றுகிறார் கனி. ‘உயிரை காக்குறதுதான் என் தொழில். நாளைக்கு நீங்களே உயிருக்கு போராடிட்டு இருந்தாலும் இப்படித்தான் காப்பாத்தி இருப்பேன்’ என்கிறார் கனி. ஆனால் நமோவின் பார்வையிலே கனி எதிரியாகத் தெரிகிறார். ஒரு கட்டத்தில் நமோவின் தம்பி செளந்தரபாண்டியனை கனி தன் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லவேண்டிய சூழல். சௌந்தரபாண்டிக்கு நிகழும் சோகம், நமோவுக்கு கனி மீது இருந்த கோவத்தை அதிகமாக்குகிறது. அதனால் நமோ எடுக்கும் முடிவுகளும் அதை கனி எப்படி எதிர்கொண்டார் என்பதும்தான் ‘தொண்டன்’ கதை. 

ஆம்புலன்ஸ் ஓட்டுனராக சமுத்திரக்கனி கச்சிதம். வசனங்கள் கதைக்கு வெளியில் இருப்பதாக தோன்றினாலும் அது கனி பேசும்போது நடிப்பாக இல்லாமல் நம்பும்படி இருக்கிறது. வழக்கமாக கனி பேசும் சமூக சீர்திருத்தம், புரட்சி, சென்ட்டிமென்ட் உடன் இதில் கூடுதலாக நகைச்சுவையும் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். ஆக்ஷன் அடிதடி இல்லாமலேயே தன் நடிப்பால் காட்சிகளில் பரபரப்பைக் கூட்டுகிறார். 

ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அரசியல்வாதிவாதி இருவருக்குமான மோதலுக்கு நடுவே விக்ராந்த். எதிலும் பிடிப்பில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சுற்றிக்கொண்டிருப்பவர், சமுத்திரக்கனியின் அறிவுரையால் திருந்தி அவரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகிறார். கூடவே கனியின் தங்கையான அர்த்தனாவையும் விரும்புகிறார். தனக்கு கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். கனியின் காதல் மனைவியாக சுனைனா. ஆரம்பகட்ட நகைச்சுவை காட்சியில் சிரிக்கவைப்பவர், வீட்டில் சிலிண்டர் வெடித்து மயங்கி சரியும்போது அனுதாபம் அள்ளுகிறார். அர்த்தனா நல்ல அறிமுகம். 

தொண்டன்

நமோ நாராயணனாவுக்கு வழக்கமான அரசியல்வாதி கேரக்டர். இவரின் அப்பாவாக வரும் அமைச்சர் ஞானசம்பந்தம் தன் வசனங்களால் ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார். ஆனால் இவ்வளவு அப்பாவியான அமைச்சர் எங்கேயாவது இருக்கிறார்களா? ஆனால் கஞ்சா கருப்பு, சிறுவன் நாசத் இருவரும் கிடைக்கும் கேப்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள். சூரி-தம்பி ராமைய்யா இணை சில காட்சிகளே வந்தாலும் 20-20 இறுதி ஓவர்களைப்போல கலாய் காமெடிகளால் சிக்சர்களைப் பறக்கவிடுகிறார்கள். 

ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும், ஒவ்வொரு உயிரையும் எப்படி நினைக்கிறார்கள் என்றும் சொன்ன இடத்திலும் சமூக பிரச்னையை பேசிய இடத்திலும் இயக்குநராக சமுத்திரகனியை பாராட்டலாம். மிலிட்டரி வேலையை சமுத்திரகனி ராஜினாமா செய்ததற்குச் சொல்லப்படும் காரணம், ஜாதி மறுப்புத் திருமணம், கல்லூரியில் ஏற்படும் பிரச்னைக்கு பெண்களை முன் நிறுத்தி போராடியது, உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் பற்றிய விழிப்புஉணர்வு, இல்லாதவருக்கு இலவசம் என்ற வசனத்துடன் வரும் அந்த ஆட்டோ ஓட்டுநர் என ஓவ்வொரு சீன்களும் தனித்தனியாக எனர்ஜி பூஸ்டர்கள்தான். 

ஆனால் அந்தக் கதைக்குள்ளே, எல்லா சமூகப் பிரச்னையையும் பேசி, தனது சமூகப் பொறுப்பை காட்டிவிட வேண்டும் என நினைத்துச் செய்திருக்கும் சில கூடுதல் வேலைகள்தான் நெருடுகிறது. ‘ஜாதி, ஜாதின்னு பேசி அப்பாவி மக்களை இலவசத்துக்கு கை ஏந்த வச்சிட்டீங்க”, போன தலைமுறைக் கொடுத்த பொக்கிஷத்தை விட்டுட்டோம்” என்று ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சாட்டையடி வசனம் வருவது சிறப்பு. ஆனால் அது காட்சிக்குக் காட்சி வருவதுதான் அலுப்பு. 

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ எனச்சொல்லி அமைச்சரின் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள சமுத்திரக்கனியை அழைக்கிறார். ‘ஆமா நீ நம்ம ஆளுக தானே. என்னுடன் சேர்ந்துகொள்கிறாயா’ என்கிறார். அதுவரை ஓகே. பிறகு காந்தி, நேரு, மெரினாப் போராட்டம், காளைகளின் வகைகளை மனப்படமாக ஒப்பிப்பது... என்று நீளும் அந்தக் காட்சி கைதட்டல் வாங்குகிறதுதான். ஆனால் தமிழ் கலாசார வகுப்பெடுப்பது அந்த காட்சிக்கு, கதைக்கு தேவையா? 

தொண்டன்

நெய்வேலியில் உள்ள அமைச்சரின் மகனுக்கும் அதே பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருக்குமான பிரச்னை. அதை தன் புத்திசாலித்தனத்தால் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது திரைக்கதை. இந்த ஸ்கோரிங் ஏரியாவில் கனி கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஓர் அரசியல்வாதி, அதுவும் அமைச்சர் அளவுக்கதிகமான சொத்துக்களை சேர்க்க காரணமாக இருப்பவர்கள் விஏஓ, ஆர்ஐ, தாசில்தார், ஓர் இன்ஸ்பெக்டர்... இந்த நால்வரும்தான் என்று காட்டுவது நெருடுகிறது. அதேபோல சாதாரண கொலையையே ஐ.ஜி., டிஐஜி.. டீல் பண்ணும் இந்தக் காலத்தில் அமைச்சருடைய மகனின் கொலையை ஒரு இன்ஸ்பெக்டரே டீல் செய்து முடிக்கிறார் என்பது அதிகார துஷ்பிரயோகம்! 

பின்னணி இசையிலும், ‘போய் வரவா’ பாடலிலும் பளிச்சென அடையாளம் தெரிகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். பரபர பாய்ச்சலில் பாயும் ஆம்புலன்ஸ், தள்ளிக்கொண்டு ஓடும் வீல் படுக்கை... என டாப், லோ ஆங்கிள்களில் பறக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்கள் ஏகாம்பரம், ரிச்சர்ட் எம்.நாதன் இருவரின் உழைப்பு தெரிகிறது. ரமேஷின் படத்தொகுப்பு பரபரப்பைக் கூட்டுகிறது. ஆனால் ‘அப்பா’வை படம்பிடித்த நெய்வேலி, பண்ரூட்டி பகுதியிலேயே தொண்டனையும் தொடர்ந்திருப்பது ‘அப்பா’வின் நீட்சி போல உணரவைக்கிறது. அடுத்த படத்துக்கு லொக்கேஷன் சேஞ்ச் அவசியம் கனி.

ஒரு உயிரைக் காப்பாற்றும்போது ஏற்படும் உணர்வை நமக்குக் கடத்துவது, ‘நாளைக்கு உங்களுக்கே ஆபத்துனாலும் கண்டிப்பா நான் காப்பாத்துவேன்’ என்ற ஆரம்ப காட்சியை க்ளைமாக்ஸில் கனெக்ட் செய்யும் புத்திசாலித்தனத்தை படம் முழுக்க தெளித்திருந்தால் தொண்டன் இன்னும் கவர்ந்திருப்பான். பிரசார நொடி சற்றே தூக்கலாக இருந்தாலும் சமூக பொறுப்பும், அக்கறையும் கொண்ட இந்தத் தொண்டன் நம் தோழன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close