Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபெப்சி இல்லாமல் ஷூட்டிங் நடத்த முடியும்'' - தயாரிப்பாளர் கே.ராஜன்

விஷாலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் சண்டை மூண்டபோதெல்லாம் அவரின் தோளோடு தோள் நின்றவர் ஆர்.கே.செல்வமணி. மதுரையில் நடந்த `பில்லா பாண்டி' படப்பிடிப்பு திடீரென நின்றுபோனதால், இப்போது இருவருக்கும் ஏழாம் பொருத்தம் ஸ்டார்ட். `தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி அமைக்கும் இடையிலான ஒப்பந்தம் ரத்து' என, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பகிரங்கமாக அறிவித்தார். இதற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ``விஷால் எங்களைப்  பழிவாங்கிவிட்டார்'' என்று கொந்தளித்தார். என்னதான் நடக்கிறது என்பதுகுறித்து  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த கே.ராஜன் அவர்களைத் தொடர்பு கொண்டு  கேட்டோம். 

தயாரிப்பாளர் ராஜன்

``ஏற்கெனவே தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணனுக்கும் பெப்சி அமைக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது நாராயணன்  பெப்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் `பெப்சி தொழிலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தயாரிப்பாளர் விருப்பப்படி எந்தத் தொழிலாளரை வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தலாம்' என  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து  மன்சூர் அலிகான் நடத்திய படப்பிடிப்பில் அவருக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் பிரச்னை எழுந்தது. நீதிமன்றத்துக்குப் போனார் மன்சூர் அலிகான்.  முன்பு நாராயணனுக்கு அளித்த தீர்ப்பையே மீண்டும் மன்சூருக்கும்  வாசித்துக்காட்டியது நீதிமன்றம். இதற்கு முன்பு, பயணப்படியாக ஒரு பேட்டா பணம் 1,500 ரூபாய், 500 கி.மீ பயணத் தொலைவுக்கு டபுள் பேட்டா 3,000 ரூபாய் வாங்கிவந்தனர். அதாவது சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இரவு உணவு, ரயில் டிக்கெட் செலவு எல்லாம் தயாரிப்பாளரின் பணம்.  வேலையே செய்யாமல் இரவு தூங்கிக்கொண்டு வரும் இவர்களுக்கு டபுள் பேட்டா. அதாவது 3,000 ரூபாய் என பெப்சி விதித்த கட்டணத்தை, தயாரிப்பாளர்கள் கொடுத்துவந்தனர். ஒருகட்டத்தில் இந்தப்  பயணப்படி டபுள் பேட்டா குறித்து சர்ச்சை ஏற்பட்டது. 

அப்போது  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது.  `பயணப்படி விவகாரத்தில் 500 கி.மீ வரை  12 மணி நேரம் பயணம் செய்தால் அரை பேட்டா  750 ரூபாய்  என்றும்,  24 மணி நேரம் பயணம் செய்தால் முழு பேட்டா தொகையான 1,500 வழங்கப்படும்' என அதில் கூறப்பட்டு, இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டன. கேமராமேன் உதவியாளர்கள் மொத்தம் நான்கு பேர் வேலை செய்வார்கள். கேமராமேன் பேட்டா தவிர்த்து, உதவியாளர்களின் பேட்டா தொகை மட்டும் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் தரப்படுகிறது. சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் `பில்லா பாண்டி' படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் நடந்தது. அங்கே பெப்சியில் அமைப்பில் உள்ள கேமரா டெக்னீஷியன்கள் திடீரென  `எங்களுக்கு பயணப்படியாக டபுள் பேட்டா உடனே கொடுக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் வேலை செய்ய மாட்டோம்' எனப் போர்க்கொடி தூக்கினர். அதனால் படப்பிடிப்பு இரண்டு நாள்கள் நின்றுபோனது. மதுரையிலிருந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு  சுரேஷ் போன் செய்ய, `மதுரை 500 கி.மீ மேல் தொலைவு கிடையாது. கவுன்சில் 500 கி.மீ வரை அரை பேட்டாதான் தர வேண்டும் என்பது ஒப்பந்தம்' என அவருக்கு எச்சரிக்கை விடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். 

மதுரையில் ஒழுங்காக வேலை பார்த்துக்கொண்டிருந்த டெக்னீஷியன்களை டபுள் பேட்டா கேட்கச் சொல்லி தூண்டிவிட்டது சவுத் இந்தியன் சினி டெக்னீஷியன் யூனியனின் பொறுப்பில் உள்ள தனபால் என்பவர்தான். இவர், ஏற்கெனவே ஒருவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்தவர். அதுமட்டுமல்ல, படப்பிடிப்பில் கொஞ்சம் தாமதமாக பேட்டா கொடுக்க வந்த அந்தப் படத் தயாரிப்பாளரைப் பார்த்து `ஷூட்டிங் ஸ்பாட்டுல பேட்டா கொடுக்கவே வக்கில்லை. நீ எதுக்குய்யா சினிமா தயாரிக்க வந்த?' என்று ஏளனமாகப் பேசியவர். பெப்சி  அமைப்பில் எப்போதும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பது புரொடக்‌ஷன், லைட்மேன், டெக்னீஷியன் இந்த மூன்று சங்கங்கள் மட்டுமே. புரொடக்‌ஷன் யூனியனில் உறுப்பினராகச் சேர்வதற்கு மூன்று லட்சம் ரூபாய் கட்டவேண்டும். தினசரி படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் உணவு, டிபன், ஸ்நாக்ஸ், காபி  அனைத்தும் வாங்கிப் பயன்படுத்தும் பொறுப்பை புரொடக்‌ஷன் பார்த்துக்கொள்ளும். அதற்கான பணத்தை அவர்களிடம் தயாரிப்பாளர் முன்கூட்டியே கொடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு  ஒரு லட்சம் ரூபாய் செலவானால், அதிலிருந்து புரொடக்‌ஷன்  குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கமிஷன் அடித்துவிடுவார்கள். இதுதான் காலங்காலமாக படப்பிடிப்பில் நடந்துவரும்  சங்கடமான சங்கதி. இதற்காகவே புரொடக்‌ஷன் சங்கத்தில் சேர்வதற்கு கட்டணத் தொகையாக  மூன்று லட்சம் ரூபாய் நிர்ணயித்திருக்கிறார்கள். அதுபோல டிரைவர் யூனியனிலும் லைட்மேன் யூனியனிலும்  உறுப்பினராகச் சேர்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயித்திருக்கின்றனர்.

இப்போது பெப்சி-யில் உள்ள 24 அமைப்புகளுக்கும் தனித்தனியாகச் சம்பளத்தொகை, பேட்டாதொகை எவ்வளவு வழங்குவது என்பதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்து ஆலோசித்து, திட்டமிட்டு வரையறுத்து, தொகை  அளவை நிர்ணயித்து, பெப்சி அமைப்புக்கு மெயில் அனுப்பியிருக்கிறது. புதிதாக விதித்துள்ள சம்பள, பேட்டா தொகைக்கு ஒப்புக்கொண்டால், பெப்சியோடு இணைந்து படப்பிடிப்பு நடக்கும்.  `பெப்சி  இல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் படப்பிடிப்பை நடத்த முடியுமா?' என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். பெப்சியில் உள்ள 24 அமைப்புகளிலும் சேர்த்து 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர்  மட்டுமே படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு திரும்பத் திரும்ப  வேலை செய்து வந்துள்ளனர். பெரும்பாலான தொழிலாளிகள்  வேலையே இல்லாமல் தவித்துவருகின்றனர். அப்படிப்பட்ட அப்பாவி தொழிலாளர்கள், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிக்கும் தொகையை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக உழைப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றனர்'' என்றார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close