Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

``தயாரிப்பாளர் சங்கம் செய்வது தர்மமே இல்லை!'' - கொதிக்கும் ஃபெப்சி

`ஃபெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம்' என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஒப்புக்கொண்ட சம்பளத்தைக் குறைக்கக் கூடாது, பொது விதிகளை மதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். இதனால், ரஜினியின் `காலா' உள்ளிட்ட சில படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஃபெப்சி

``தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி அமைப்புக்கும் திடீரென பிரச்னை  ஏற்பட என்ன காரணம்?'' என, ஃபெப்சி அமைப்பின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகத்திடம் கேட்டோம்.

``தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி அமைப்புக்கும் சுமுகமான உறவு இருந்துள்ளது. இந்த 50 ஆண்டுகால உறவு, தற்போது சிலபல பிரச்னைகளால் சின்ன விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 1992 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சி அமைப்புக்கும் சம்பளப் பிரச்னை ஏற்பட்டபோது பேசித் தீர்க்கப்பட்டது. இந்த முறை பேசிக்கொண்டே இருக்கிறோம், பிரச்னை தீர்ந்தபாடில்லை'' என விரக்தியான வார்த்தைகள் மூலம் தன் வலிகளை வெளிப்படுத்தினார்.

``இதற்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தாணு அண்ணன் இருந்தபோது, இயக்குநர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம் மற்றும் எழுத்தாளர்களைத் தவிர மற்ற 20 சங்கங்களுக்கும் பொதுவிதி பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், ஒரு தொழிலாளியின் ஒருநாள் சம்பளம், கால்ஷீட், பேட்டா மற்றும் சலுகைகள் என்னென்ன போன்ற அனைத்தும் இந்தப் பொதுவிதியில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் இருக்கக்கூடிய இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் வகையில், தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தினர்  செயல்பாடு இருக்கிறது. `பழைய நிர்வாகம் கொடுத்த சம்பளத்தையும் சலுகைகளையும் நாங்கள் கொடுக்க முடியாது' என்றவர்கள், `சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சில சலுகைகளை ஃபெப்சி கொடுக்க வேண்டும்' என்றார்கள். அதனால், ஆர்.கே.செல்வமணி தலைமையில் கூடி விவாதித்து, சில நிபந்தனைகளுக்கு நாங்களும் உட்பட்டோம். 40 முதல் 45 சதவிகிதம் சம்பளத்தைக் குறைப்பதற்கு உண்டான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதுதான் `பில்லா பாண்டி' படப்பிடிப்புத் தளத்தில் சின்னப் பிரச்னை ஏற்பட்டது. அன்று தொழிலாளர்களுக்கு பேட்டாவைக் குறைத்துக் கொடுத்ததால் வந்த பிரச்னை அது. அதுவும் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. அதற்குள் டெக்னீஷியன் யூனியன் தலைவர் தனபால், `விஷாலைத் திட்டியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர். உடனே எங்களின் ஃபெப்சி சம்மேளனம் கூடி, `விஷாலைத் தவறுதலாகத் திட்டிவிட்டேன். 23,000 தொழிலாளர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்' என அவரை மன்னிப்பு கேட்கவைத்தோம். அதன் பிறகும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தயாரிப்பாளர் சங்கம் முன்வரவில்லை.

தயாரிப்பாளர் மற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்தப்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொதுவிதிகளை எழுதி புத்தகம் போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறதோ, அதைத்தான்  நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தச் சம்பளத்தைத்தான் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், 2008 முதல் 2011-ம் ஆண்டு வரை போடப்பட்ட புத்தகத்தின் பொதுவிதி நடைமுறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதில் போடப்பட்ட பொதுவிதியின்படிதான் இன்றும் சம்பளம் உள்ளிட்ட சில சலுகைகளை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆறு வருடகாலமாக அந்தப் புத்தகத்தைப் போடாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தவர்கள், தற்போது `இந்தப் பொதுவிதிகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' எனத் தயாரிப்பாளர் சங்கத்தினர் சொல்லிவருகிறார்கள். `நாங்கள் கொடுப்பதைத்தான் நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்' என, தனிச்சையான முடிவுகளை அறிவிக்கிறார்கள். இது நியாயமா... தர்மமா? கடந்த 50 வருடங்களாக நடைமுறையில் இருப்பதையே ஒப்புக்கொள்ளவில்லை என்கிறபோது, எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கம், சில தினங்களுக்கு முன் `ஃபெப்சி தொழிலாளர்களுடனும் வேலை செய்வோம். தேவைப்பட்டால் வெளி ஆள்களை வைத்தும் வேலை செய்வோம்' என்கிறார்கள். இது தொழிலாளர்களின் மனதைப் புண்படுத்தியது. அடுத்து `வெளி ஆள்களை வைத்து மட்டுமே வேலை செய்வோம். ஃபெப்சி தொழிலாளர்கள் தேவையில்லை' என்றார்கள். மீண்டும் `வெளி ஆள்களை வைத்து வேலைசெய்வோம். தேவைப்பட்டால் ஃபெப்சி தொழிலாளர்களையும் சேர்த்துக்கொள்வோம்' என்கிறார்கள். இது நியாயமே இல்லை. இதை எப்படி எதிர்கொள்வது என எங்களுக்குத் தெரியவில்லை.

கிட்டத்தட்ட 30,000 தொழிலாளர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். எங்களுக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஒரு மாதத்தில் 10 நாள்கள் ஷூட்டிங் நடக்கிறது என்றால், அதில் வரும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடந்த வேண்டும். மாதத்தில் அந்த 10 நாள்களை நம்பிதான் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, தயாரிப்பாளர் சங்கம் இப்படிச் செய்வது தர்மமே இல்லை.

கடந்த நான்கு மாதங்களாகவே நாங்கள் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம். `ஜி.எஸ்.டி வந்திடுச்சு... அப்புறம் பேசிக்கலாம்'னு தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்கள். இறுதியாக வேறு வழியில்லாமல், `இனி தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை' என்று நாங்கள் அறிவித்தோம். அறிவிப்புக்குப் பிறகும் அவர்கள் கவனிக்கவே இல்லை. 

`தயாரிப்பாளர் சங்கம், இனி ஃபெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை செய்யும்' என்ற வாக்குறுதி வேண்டும். கடந்த 50 வருடங்களாக நடைமுறையில் இருக்கக்கூடிய பொதுவிதிகளை அப்படியே அமல்படுத்த வேண்டும். சம்பளத்தைக் குறைக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' என்றார் அங்கமுத்து சண்முகம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close