Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மா மூவி ரிலீஸ் கமிட்டி ஆரம்பிங்க!

லொடலொடவெனப் பேசியே ரசிக்க, சிரிக்க வைப்பவர் 'நண்டு’ ஜெகன். சின்னத்திரை டு  சினிமாவுக்கு என்ட்ரி ஆகி, இப்போது இரண்டிலும் சவாரி செய்யும் அவரிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை.

''காமெடியனா பெரிய லெவலுக்கு வருவீங்கனு எதிர்பார்த்தா... ஆளையே காணோமே பாஸ்?''

''என்ன பண்றது என் கையில எதுவும் இல்லையே பிரதர்? ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமாத்தான் நடிச்சேன். வாய்ப்பு கொடுக்க வேண்டியது டைரக்டர்ஸ்தான். ரோட்டுக் கடையில ரெண்டு ரூபாய்க்கு கிடைக்கிற இட்லியை, லைட்டிங் செட்டோட வெயிட் பண்ணவெச்சு, பெரிய கடையில் ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டா அதுக்கு பில் ஜாஸ்தி பிரதர். அதனால, நம்ம டைரக்டர்ஸும் வெட்டியா வீட்டில் உட்கார்ந்திருக்கிற என்னை மாதிரி ஆட்களைக் கூப்பிடாம, எப்பவும் பிஸியா இருக்கிறவங்களைக் கூப்பிடுறாங்களோ என்னவோ? பட் ஒன் திங்... எங்களுக்கும் காலம் வரும்.''

''கனெக்ஷன்’னு புரோகிராம் பண்றது ஒகே... இதுவரைக்கும் நீங்க ட்ரை பண்ண கனெக்ஷன் கணக்குகளைச் சொல்லுங்க...''

''இந்த ஷோவை இவ்வளவு பிரமாதமாப் பண்றேன்னா, அதுக்குக் காரணமே, காலம் பூராவும் பல கனெக்ஷனுக்கு ட்ரை பண்ணி, எதுவுமே எரியாம புஸ் ஆனதினால்தான். சோதனையில் பல முயற்சிகள் தாண்டி வந்தவனுக்கு, ஹிட் ஃபார்முலா எதுனு ஈஸியா தெரியும்னு சொல்வாங்க. நமக்கு கடைசி வரைக்கும் ஹிட் ஃபார்முலாவும் தெரியலை, ஏன் ஃபெய்லியர் ஆகுதுனும் புரியலை. ஸோ... எனக்கு செட் ப்ளஸ் ஹிட் ஆன ஒரே கனெக்ஷன், என் மனைவி வான்மதி மட்டும்தான்.''

''கேம் ஷோவுல போட்டோவைக் காட்டி, 'என்ன தெரிகிறது?’னு மொக்கை போடுறீங்கல்ல... ஒரு கடற்கரை, அதுக்குப் பக்கத்துல ஒரு துப்பாக்கி. இதில் இருந்து என்ன தெரியுது?''

''கடற்கரையில் விற்கிற மட்டமான, பழைய சுண்டலை வாங்கிச் சாப்பிட்டா, இந்தத் துப்பாக்கியால் சுட்டுக்கிட்டு சாகணும்னு தோணும். தவிர, அங்கே மசாலா பூரி, பேல் பூரி, மீன் வறுவல் வறுத்துக் கொடுப்பாங்க பாருங்க, சத்தியமா சொல்றேன். அதையெல்லாம் சாப்பிடுறதைவிட துப்பாக்கியால் சாகிறது எவ்வளவோ பெஸ்ட். ஆமா, இந்தக் கேள்வியில் இருக்கிற குறியீடு என்ன?''

''ஓவராப் பேசிக்கிட்டே இருக்கிற உங்களை நம்ம முதல்வர்கிட்ட கொண்டுபோய் நிப்பாட்டினா, என்ன பேசுவீங்க?''

''நிகழ்ச்சிகள்லதாங்க நான் இவ்ளோ பேசுறேன். வீட்ல நான் ரொம்ப சைலன்ட். கல்யாணத்துக்கு முன்னாடி தனி ரூம்லதான் தங்கியிருந்தேன். அப்போவெல்லாம் போன் வந்தாக்கூட எடுத்துப் பேச மாட்டேன்னா பார்த்துக்கோங்க. அதனால, நம்ம முதல்வரைப் பார்த்தா, பவ்யமா ஒரு வணக்கம் வெச்சுட்டு, வழக்கம்போல எல்லோரும் சொல்ற மாதிரி 'நான் உங்களுடைய தீவிர ரசிகன்’னு சொல்லிட்டு, அப்படியே எங்க ஏரியாவில் 'அம்மா உணவகம் திறந்ததுக்கு ஒரு தாங்க்ஸும் சொல்லிட்டு வந்துடுவேன். ஏன்னா அம்மா உணவகத்தோட ரெகுலர் கஸ்டமர் நான்.''

''அப்படின்னா நரேந்திரமோடியோட 'நமோ டீ’யையும் குடிச் சிருப்பீங்களே?''

''சென்னையில் எங்கே டீ சாப்பிட்டாலும் ரொம்ம்ம்ப சுமாரா இருக்கும். இவர் வெளியூர்க்காரர் வேற. எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க. முதல் ரெண்டு நாளைக்கு நல்லாக் கொடுத்திருப்பாங்க. அதை மிஸ் பண்ணிட்டேன். தவிர, சென்னையில் ஒரு இடத்தில்தானே திறந்திருக்காங்க. அதனால, டேஸ்ட் பண்ண முடியலை.''

'' 'அம்மா உணவகம்’, 'அம்மா திரையரங்கம்’, 'அம்மா குடிநீர்’ மாதிரி இன்னும் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரலாம்?''

''அம்மா திரையரங்கம்’கூட அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல 'அம்மா மூவி ரிலீஸ் கமிட்டி’னு ஒண்ணு ஆரம்பிக்கணுங்க. நான் நடிச்ச பல படங்களை ரிலீஸ் பண்ணாமலே வெச்சிருக்காங்க. 'அம்மா’வே படத்தை ரிலீஸ் பண்றாங்கனா, தியேட்டர் கிடைக்காமலா போயிடும்?''

''எதிர்காலத் திட்டம்?''

''இந்தக் கேள்விக்காகத்தாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். எழுதிக்கோங்க. 'நான்தான் தமிழ் சினிமாவின் வருங்கால நாகேஷ்’ இதை காமெடியா சொல்லலைங்க, உண்மையிலேயே சீரியஸா சொல்றேன். ஏன்னா, வில்லன், காமெடி, சென்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலேயும் கலக்குறவர் நாகேஷ் சார். அவருக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் அந்த இடம் காலியாவே இருக்கு. அதை நான்தான் நிரப்பணும்னு ஆசைப்படுறேன்!''

- கே.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close