Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பிச்சைக்காரன்னு நினைச்சிட்டாய்ங்க!”

‘நானும் காமெடியன்தான்’ என்று காமெடி ஜீப்பில் ஏறி ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘டார்லிங்’ என்று வளர்ந்துகொண்டிருக்கும் பாலசரவணனிடம் ஒரு ஜாலி அரட்டை.

“ ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் என் கேரக்டர் பேர் பீடை. எப்பவுமே குளிக்காம, ஒழுங்கான டிரெஸ் போடாம பரட்டைத் தலையோட சுத்திக்கிட்டு இருக்கிற கேரக்டர். அதுக்காக தாடியெல்லாம் வளர்த்து அந்த கேரக்டராகவே மாறியிருந்தேன். அந்தப் பட ஷூட்டிங்கின் போது பக்கத்து கிராமத்தில் காதுகுத்துக்கு நட்புக்காக விஜய் சேதுபதியைக் கூப்பிட்டிருந்தாங்க. ‘கெடா வெட்டு வேற... வா பாலா போகலாம்’னு என்னைக் கூப்பிட்டார்.

போய் இறங்கினதும் கூட்டம் அவரை சுத்திக்கிட்டு உள்ளே கூட்டிட்டுப் போயிட்டாங்க. நான் நேரா பந்திக்குப் போய் சாப்பிட உட்கார்ந்தா,‘பிச்சைக்காரனுக்கெல்லாம் கடைசியாதான் சோறு போடுவோம்’னு என்னை விரட்டி விட்டுட்டாங்க. இன்னைக்கு நினைச்சாலும் சிரிப்புதான் பாஸ்’’ பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருக்கிறார் பாலசரவணன்.

‘‘நான் இன்ஜினீயரிங் படிச்சுக்கிட்டிருந்தேன். யாரையாவது ஒரண்டை இழுத்துக்கிட்டு திரியிறதுதான் பொழப்பே. அப்போ ஒரு நாள் எங்க கிரிக்கெட் டீம் கேப்டன், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘கனா கானும் காலங்கள்’ தொடருக்கு ஆள் எடுக்கிறாங்க. அங்கே போய் உன் சவடாலைக் காட்டுன்னாரு. அதுக்கு ட்ரை பண்ணலாம்னு பாத்தா, அந்தத் தொடரில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் எழுதிப் போடணும்னு சொன்னாங்க. ‘அந்தப் பொறுமையெல்லாம் நமக்கு கிடையாதே’னு நினைச்சுட்டு இருக்கும்போது என் கேர்ள் ஃப்ரெண்ட் எனக்காகப் பதில் எழுதிப்போட்டு சான்ஸ் வாங்கிக் கொடுத்தாங்க. ‘கனா காணும் காலங்கள்’ மூலமாதான் நடிப்பு உலகத்தில் வலதுகாலையும் இடதுகாலையும் சேர்த்து வெச்சு நுழைஞ்சேன். சீரியல் முடிச்ச பிறகு அதன் இயக்குநர் ஜெரால்ட்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்தேன். ‘ஈகோ’ என்ற படவாய்ப்பு வந்தது.

அப்புறம் ‘குட்டிப்புலி’ படத்தில் ஒரு சின்ன ரோல் இருக்குனு கூப்பிட்டாங்க. படம் வந்தபிறகுதான் அது ரொம்ப ஸ்ட்ராங்கான ரோல்னு தெரிஞ்சுது. அதுபோல குறும்பட வாய்ப்புகளும் தேடித் தேடி நடிச்சேன். அப்போ ‘பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படமாக எடுக்கப்பட்டது. படத்தில் விஜய் சேதுபதி நடிச்ச கேரக்டரில் குறும்படத்தில் நான்தான் நடிச்சேன். அதுக்கப்புறம் தொடர்ச்சியா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் முடிஞ்சதும் ‘கல்லூரியின் கதை’ சீரியலின் இயக்குநர் ரமணாகிட்ட உதவியாளராகச் சேர்ந்தேன். அப்போதான் ‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குநர் அருண் குறும்படங்கள் இயக்கத் தொடங்கினார். அவருடன் ஆறு குறும்படங்களுக்கு அசோஸியேட்டாக வேலை பார்த்தேன். இப்போ கையில் மூணு ஸ்கிரிப்ட் முடிச்சு வெச்சிருக்கேன். நல்ல தயாரிப்பாளர் கிடைச்சா, நடிப்போட இயக்கத்தையும் தொடங்க வேண்டியதுதான்.”

“வழக்கமா உங்களை மாதிரியான காமெடியன்கள் சில படங்களுக்குப் பிறகு ‘நடிச்சா ஹீரோதான்’னு இறங்கிடுவீங்களே?”

‘‘இப்போதான் என்ட்ரியே ஆகியிருக்கேன். இனிதான் எனக்கான இடத்தைத் தேர்வு செய்யணும். அதுக்கே இன்னும் நாளாகும். இன்னும் நல்ல பேரு வாங்கணும். அதை முடிச்சிட்டு டைரக்‌ஷன்தான்!”

‘‘உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’’

‘‘என் க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு ஒருநாள் கால் பண்ணினேன். போனை எடுத்தது அவ ஃப்ரெண்ட். ஆரம்பிச்ச பேச்சு கடைசியில  சண்டையில் முடிஞ்சுது. மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடிவதுதானே வரலாறு. அதை மாதிரியே ஆகிடுச்சு. ஆனா ஒரு வருஷம் போனில் மட்டும்தான் பேசிட்டு இருந்தோம்.  அன்னிக்கு போனில் சண்டை போட்டவங்ககிட்டதான் இப்போ தினம் குட்டு வாங்குறேன். எங்களுக்கு ஒரு குட்டிப் பாப்பா இருக்கு!”

- செந்தில்குமார் படங்கள் : ச.ஹர்ஷிணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close