Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஜாதியால் பிரிந்திருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்!” - இயக்குநர் பா.இரஞ்சித்

அனிதாவுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி, ‘தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள்' ஒருங்கிணைப்பில் நேற்று நடைபெற்றது.

பா.ரஞ்சித்

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, அனிதாவின் படத்துக்கு மலர்கள் தூவி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். சீனுராமசாமி, அமீர், ராம், பா.இரஞ்சித், பிரம்மா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், மீராகதிரவன், மிஷ்கின் உள்ளிட்ட பல இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் தங்களது கருத்துகளை அங்கு பதிவுசெய்தனர். 

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், சாதியப் பாகுபாடுகளைக் களைய வேண்டியதன் அவசியம், தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயம் எனச் சமுதாயக் கருத்துகளைத் தூசுதட்டிய உணர்வுபூர்வமான விழாவாகவும் இருந்தது. 

விழாவில் மிஷ்கின், “எங்களோடு கமலும் ரஜினியும் வந்து போராடினால்தான், யார் எங்களை ஆள வேண்டும் என்பதைச் சொல்ல முடியும். தெருவுக்கு வந்து போராடும்போதுதான் உங்களின் நேர்மை தெரியும். மக்கள் இனி மயங்க மாட்டார்கள். அனிதாவுக்காக நான் ஒரு டாக்குமென்டரி எடுப்பேன். இங்கே இருக்கும் எல்லோரும் அதில் பணியாற்றுவார்கள். அனிதாவின் ஊரில் அவருக்குச் சிலை வைப்போம்!'' என்றதோடு, ``சகமனிதனைப் போற்றும் இனம் எங்கள் இனம். எங்கள் இனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடாதீர்கள்!'' என உள்ளக் குமுறல்களைக் குரல் வழியே வெளிப்படுத்தினார்.

இயக்குநர் ரஞ்சித் - அனிதா நினைவேந்தல்

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திய வேலூர் சி.எம்.சி கல்லூரி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசினார் இயக்குநர் அமீர். தொடர்ந்து, “சாதிகள் தற்போது ஒழிந்துவருகின்றன. இதனால், சாதிகள் இல்லாத சமூகத்தை நாம் அடைந்துவருகிறோம். சாதிகளைக் கலைந்து தமிழராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழன் என்பதில் பெருமிதம்கொள்வோம்'' என்ற அவருடைய கருத்துக்கு, மேடையில் இருந்த இயக்குநர் பா.இரஞ்சித் மறுத்தார்.

“சாதிகள் அற்ற சமூகம் இன்னும் உருவாகவில்லை. தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் சாதி இருக்கிறது. சாதி ஒழிந்திருக்கிறது என்பது தவறு. இதை ஏற்றுக்கொள்ளாமல், இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பூச்சாண்டி காட்டுவீர்கள். தமிழ் தமிழ்... என இன்னும் எவ்வளவு நாள்களுக்குப் பேசிக்கொண்டிருப்பீர்கள்? தமிழன் சாதியால் பிரிந்திருக்கிறான். சேரியும் காலனியும் இன்றும் இருக்கின்றன. சாதி இருக்கிறது என்பதை, முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்!'' எனக் கொந்தளித்தார் பா.இரஞ்சித்.

Directo

அமீருக்கும் பா.இரஞ்சித்துக்குமான இந்தக் கருத்துவேறுபாட்டை இயக்குநர் ராம் குறுக்கிட்டுத் தடுத்தார். “அமீர் சொன்னது பாசிட்டிவான ஒரு கருத்துதான். அதேசமயம் ரஞ்சித்தின் கோபமும் நியாயமானதுதான். சினிமாவிலும் சாதி இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவோம்'' என்றார் ராம். மீண்டும் மைக்கை எடுத்த இயக்குநர் பா.இரஞ்சித், “சாதியால் பிரிந்திருக்கிறது சமூகம். அதை நாம் சாதியற்றச் சமூகமாக மாற்ற வேண்டும்” என, தனது கருத்தைத் தெளிவுபடுத்திவிட்டுச் சென்றார். இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் தவிர, வழக்குரைஞர்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலரும் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

மாணவி அனிதா விவகாரத்தில், தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் தொடர் செயல்பாடுகள், பாராட்டப்பட வேண்டியவை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close