Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“வயலின் நோட்ஸ் குறிப்பதில் திறமைசாலி!” அமரரான இசையமைப்பாளர் கோவர்தன் நினைவுப் பகிர்வு

மூத்த திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.கோவர்த்தனம் கடந்த 18ம் தேதி காலமானார். இவருக்கு 91-வயது மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். 

கோவர்த்தனம். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர். இவரது தந்தை ராமச்சந்திர செட்டியார். இவரது மூத்த சகோதரர் ஆர்.சுதர்சனம். தன் மகன்களுக்கு ராமச்சந்திரன்தான் முதல் ஆசிரியர். கோவர்த்தனம் தாய்மொழி என்பதால் தெலுங்கும், பெங்களூருவில் சில காலம் வசித்ததால் கன்னடமும், சென்னையில் தங்கியதால் தமிழும் இவருக்கு நல்ல பரிட்சயம். ஆச்சர்யம் என்னவென்றால், இவர் இசையமைத்த முதல்படம் ‘ஜாதக’த்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

பிரபல பின்னணிப் பாடகல் பி.பி.ஸ்ரீநிவாஸை இவர்தான் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். இப்படி பல  பாடகர்கள், பாடல்கள், படங்கள், பாராட்டுகள்... என கோவர்தனின் இசைப் பயணம் தொடர்ந்தது. தமிழில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவா தலையா’ படம் 1971-இல் தெலுங்கில் ‘பொம்மா பொருசா’ என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கும் ‘ராமு’ திரைப்படம் 1966-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியானது. அதற்கும் இசையமைத்தது கோவர்த்தனம்தான்.

பிரபல இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் கோவர்த்தனம். இவருடைய முத்த சகோதரரான ஆர்.சுதர்சனம் ஏவி.எம் நிறுவனத்தாரின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு சேலத்துக்கு குடிபெயர்ந்த கோவர்த்தனம், அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 18ம் தேதி காலமாகிவிட்டார். 

கோவர்த்தனம்

கோவர்தனம் குறித்து அவரின் மருமகனும் கோவையில் வக்கீலாக இருப்பவருமான விஜயகுமார் கூறுகையில், “சுப்பராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, சந்திரபோஸ், விஜயபாஸ்கர், தேவா... இப்படி பல இசையமைப்பாளர்களோடு பல படங்களில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தனியாக 'கைராசி' 'பொற்சிலை', 'அஞ்சல் பெட்டி 520',  ‘பட்டணத்தில் பூதம்', 'வரப்பிரசாதம்', 'ஒரே வழி', 'பூவும் பொட்டும்' என்று இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். 

திருச்சிக்கு அருகில் குளித்தலை இவரின் பூர்வீகம். முதலில் பெங்களூருவில் இருந்தார். ஆர்.சுதர்சனம் மாமா சென்னையில் சினிமாவுக்கு இசையமைத்து கொண்டிருந்தபோது அவரோடு சென்னையில் செட்டிலானார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்த வீட்டை விற்றுவிட்டு சேலத்தில் உள்ள குகை என்கிற ஊரில் குடியேறினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டிலில் படுத்துஇருந்தபோது தவறி விழுந்து அடிப்படு விட்டது. அப்போது இருந்தே அடிக்கடி உடல்நலமில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி காலை காலமாகி விட்டார். 

இளையராஜா சார் சென்னையில் இல்லை என்பதால் அவரது சார்பாக கிடாரிஸ்ட் சதானந்தம் வந்து துக்கம் விசாரித்தார். அதுபோல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மேயர் சவுண்டப்பன் நேரில்வந்து கலந்து கொண்டார். இசையமைப்பாளர்கள் வாசிக்கும் வயலினுக்கு நோட்ஸ் குறித்து கொடுப்பதில் கோவர்த்தனம் மாமா ரொம்பவும் திறமைசாலி. சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதா மேடம் இவருக்கு 10 லட்சரூபாய் நிதிஉதவி செய்து இருக்கிறார், பாடகி சுசிலா அம்மா 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி இருக்கிறார்” என்றார். 

கோவர்த்தனம் மறைந்தாலும் தான் உருவாக்கிய இசையின் மூலம் என்றும் நிலைத்திருப்பார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close