Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அவனாலதான் என் வாழ்க்கையே போச்சு..!” பெர்சனல் பேசும் சோனியா போஸ்

Chennai: 

“நான் வயித்துல இருக்கும்போதே என்னை ஒரு நடிகையா ஆக்கணும்னு எங்கம்மா முடிவெடுத்துட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கு நடிகையாகணும்னு ஆசை. வாய்ப்புத்தேடி சென்னைக்கு வந்தாங்க. நடிப்பு அவ்வளவு சுலபம் இல்லைனு இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. 'நடிக்கப்போறேன்னு ஊருல எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்துட்டேன். திரும்பிப் போய் நடிக்க வாய்ப்பு கிடைக்கலைனு ஊர்ல சொல்ல முடியாது. அதனால எனக்குப் பிறக்குற குழந்தையைக் கட்டாயம் நடிக்க அனுப்புவேன்'னு முடிவெடுத்துட்டாங்க. நான் சின்ன குழந்தையா இருக்கும்போதே என்னைத் தூக்கிட்டுப்போய் நிறைய இடங்கள்ல வாய்ப்பு கேட்டிருக்காங்க. அப்படி கஷ்டப்பட்டுதான் இந்த இண்டஸ்ட்ரிக்குள்ள என்னை எங்க அம்மா கொண்டுவந்தாங்க." - சோனியாவின் வார்த்தைகளில் வலியும் வேதனையும் தெரிகிறது. சீரியல், சினிமா என மாறிமாறி நடித்து வந்த சோனியா, தற்போது தேர்ந்தெடுத்தே நடிக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

“என்னதான் நம்ம சீரியல்ல உயிரைக் கொடுத்து நடிச்சாலும் இன்றைய எபிஸோட் இன்னையோட முடிஞ்சது. அடுத்து நாளைய எபிஸோட் பத்திதான் எல்லாரும் பேசுவாங்க. ஆனா, சினிமா அப்படியில்ல. ஒரு படம் காலம்காலமா பேசுறதுக்கான வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட தரமான சினிமா மக்கள் மனசுல நிலைச்சு நிக்கும்.”

சோனியா போஸ்

“நீங்க நடிச்சதுல ஹ்யூமர், சீரியஸ் ரோல்கள் இரண்டுமே இருக்கு. இரண்டையும் எப்படி கையாளுறீங்க?"

"ராதிகா, மனோரமா ஆச்சினு சினிமாவுல நான் பார்த்து வியந்த எல்லாருமே பலவிதமான ரோல்கள் பண்ணினவங்க. அதனாலதான் அவங்களால சினிமாவில் நிலைச்சு நிக்க முடிஞ்சது. 'நமக்கு இதுதான் வரும்; இதை தவிர்த்து வேற ரோல்கள் எதுவும் பண்ண முடியாது'னு நெனைச்சோம்னா நடிக்கவே முடியாது. 'எல்லாமே நடிப்புதான். நமக்கு  கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துல சிறப்பா நடிக்கணும்'ன்ற மனப்பான்மையை வளத்துக்கிட்டா போதும். 

நான் சீரியல்ல பிரபலமா இருந்த காலகட்டத்துல, ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கிதுக்கான வாய்ப்புகள் வந்துச்சு. அப்போ 'நான் சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர, ஒருபோதும் ஒரே மாதிரியான ரோல்கள்ல நடிக்க மாட்டேன்'னு முடிவெடுத்தேன். நடிப்புக்கு நாம எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்குறதுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்." 

"உங்களுக்கும் போஸ் வெங்கட்டுக்கும் அந்த 'லவ் மொமென்' எப்படி நடந்துச்சு?"

"நான் 'உறவுகள் தொடர்கதை' என்ற சீரியல்ல நடிச்சிட்டு இருந்தேன். அப்ப அவர் வேறொரு சீரியல்ல நடிச்சுட்டு இருந்தார். எங்க ரெண்டு பேரோட சீரியலையும் ஒரே செட்டுலதான் ஷூட் பண்ணினாங்க. அப்ப என்கூட அசிஸ்டன்ட் பையன் ஒருத்தன் இருந்தான். என்  வாழ்க்கையே அவனாலதான் போச்சு. (சிரிக்கிறார்) என்னை யார் பாத்தாலும், என்கூட யார் பேசுனாலும் அவனுக்குப் பிடிக்காது. ஆனா, போஸ் பேசுனா மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டான். சும்மா இருந்த என்னை,  ‘அவர்ல உங்க்ளை விரும்புறார்னு நினைக்கிறேன்’ என்று லவ் பண்ண சொல்லி உசுப்பேத்திக்கிட்டே  இருந்தான். ஆனா, நான் போஸ்கூட  நல்ல பிரண்ட்டா மட்டும்தான் பழகிட்டு இருந்தேன். 

திடீர்னு ஒருநாள், 'உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்'னு போஸ் வந்து சொன்னார். எங்க வீட்டுலயும் பேசி அவருதான் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினார். நாங்க பழகி ஆறு மாசத்துலயே கல்யாணமும் நடந்துருச்சு. இப்போ கல்யாண வாழ்க்கையில நிறைய ஏற்ற இறக்கங்கள். சில நேரம் நம்ம வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு? பேசாம பிரிஞ்சுறலாமானுகூட தோணும். ஆனா அப்போ நினைவுக்கு வர்றது குடும்பமும் பிள்ளைகளும்தான்."

Soniya Bose

"போஸின் முயற்சியும் வளர்ச்சியும் முக்கியமான விஷயம். சென்னைக்கு நடிக்கணும் என்ற கனவோட வந்திருக்கார். ஆசை மட்டும் இருந்தா போதுமா? வேலைதேட காசு, பணம் வேணும்ல. அதனால ஆட்டோ ஓட்டியிருக்கார். அந்த விஷயமே எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரியும். கஷ்டப்பட்ட அந்த நாள்களைப் பற்றிக் கேட்டா, ‘அதுல என்ன இருக்கு. அதைவிட கஷ்டப்படுறவங்கல்லாம் இருக்காங்க. நாம ஏதோ கொஞ்சம் பரவால்ல. வாழ்க்கையில சீக்கிரம் செட்டில் ஆகிட்டோம்'னு பாசிட்டிவ்வா பேசுவார்."

"சமூகம் சார்ந்த போராட்டங்கள்ல அதிகமா கலந்துக்குறீங்களே?”

"ஆமா. அது ஜல்லிக்கட்டுல இருந்துதான் தொடங்குச்சு. அதுக்கு முன்னவரை, 'ஜல்லிக்கட்டு பத்தி நீங்க என்ன நினைக்குறீங்கன்னு?' கேட்டாங்க. 'அதெலாம் ஒரு விளையாட்டா...? மாடு முட்டி ஒவ்வொருத்தனும் செத்துட்டு இருக்கான். பேசாம இந்த விளையாட்டை நிறுத்திரலாம்'னு  சொல்லிட்டு இருந்தேன். அப்ப என் நண்பர் ஒருத்தர்தான், அதுக்குப் பின்னால இருக்குற அரசியலை விளக்கினார். பிறகுதான் நான் ஜல்லிக்கட்டு போராட்டத்துல கலந்துக்கிட்டேன். காலையில் போயிட்டு நடுராத்திரியில்தான் வீட்டுக்கு வருவேன். பிறகு ஜல்லிக்கட்டு பற்றி ஃபேஸ்புக்ல வீடியோஸ் அப்லோட் பண்ண ஆரம்பிச்சேன். 'நீங்க தேர்தல்ல நில்லுங்க. உங்களுக்கு நான் ஓட்டு போடுறேன்’னு கமென்ட்லாம் வரும். கொஞ்சம் காமெடியாதான் இருக்கும். பிறகு நெடுவாசல் பிரச்னைக்காகவும் அந்தப் போராட்டத்துல கலந்துக்கிட்டேன். அங்க இருந்த ஒரே மீடியா பர்சனாலிட்டி நான்தான்."

"ரஜினி-கமல் இருவரும் அரசியலுக்கு வர தயாராகிட்டு இருக்கிறதா சொல்றாங்க. அதைப்பற்றி என்ன நினைக்குறீங்க?”

"எனக்கு தெரிஞ்சு ரஜினி சார் பயங்கர புத்திசாலி. அவரு பேச்சு, நடவடிக்கை எல்லாமே அப்படித்தான் இருக்கும். கமல் சார் லிவிங் ரிலேஷப்ன்ஷிப், பிரேக்-அப்...னு எல்லாத்தயும் வெளிபடையா சொல்லக்கூடியவர். இப்போ மக்களும் சுயமா சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க. முன்னமாதிரி நடிகர்களை ரோல்மாடலா எடுத்துக்கிட்டு, அவங்க சொல்றதுதான் வேதவாக்குனு யாரும் நினைக்குறதில்ல. தவிர  ரஜினி சார் அரசியலுக்கு வருவாருன்னு எனக்குத் தோணலை. நான் ஒருகாலத்துல ரஜினி சாரோட பரம விசிறி. ஆனா, என்னைக்கு 'நடிகர் சங்க'த்துல பரபரப்பா இயங்க ஆரம்பிச்சேனோ அன்னையில இருந்து கமல் சாரோட ரசிகையா மாறிட்டேன். கமல் சார் என்ன செஞ்சாலும் மக்களுக்கு நல்லது பண்ற விதத்துலதான் போய் முடியும்."

"பிக் பாஸ் பிரபலங்கள்ல பலர் உங்களின் நண்பர்கள். அங்க இருந்துட்டு வெளியில வந்தவங்க என்ன சொல்றாங்க?”

"எனக்கு ஓவியா, ஆர்த்தி, காயத்திரினு அங்க இருந்த பலர், நல்ல நண்பர்கள். பிக் பாஸ் மக்கள் மனநிலையை அப்படியே பிரதிபலிக்குறதுனாலதான் இந்தளவு ஹிட் ஆகியிருக்கு. ஓவியாவோட அந்தக் குணங்கள்ல நான் என்னையே பார்க்குறேன். ஓவியாவை சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். அவங்களைப் பார்த்து நான் பிரமிச்சுப் போயிருக்கேன். நான்லாம் சின்ன வயசுல இவ்வளவு பக்குவமா நடந்துக்கலை. ஒவ்வொரு தடவை ஓவியாவை ஸ்க்ரீன்ல பார்க்கும்போதும் கிளாப்ஸ் அள்ளுது. இந்தக் காலத்துல ஓவியா  மாதிரியான உண்மையா, பாசிட்டிவா, தன்னலமில்லாத கேரக்டர்ஸ் ரொம்பக் கம்மி. அதனாலத்தான் அவங்களை எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. ஓவியாவுக்கு அவங்க அம்மான்னா அவ்வளோ பிடிக்கும். ரெண்டு பெரும் கிட்டத்தட்ட நண்பர்கள் மாதிரித்தான் இருந்தாங்க. அவங்களை விட்டு பிரிஞ்சதுக்கு அப்பறம்கூட அந்தப் பொண்ணு இவளோ தைரியமா, திடமா இருக்கறதை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நம்ம வீடும் பிக் பாஸ் வீடும் ஒன்னுதான். அதுல என்ன மாதிரியான சண்டைகள் நடக்குதோ அதே மாதிரியான சண்டைகள் நம்ம வீட்டுலயும்நடக்குது.

Soniya

"அடுத்ததா என்னமாதிரியான திட்டங்கள் வெச்சிருக்கீங்க?”

"சமூகத்துக்கு தொடர்ந்து குரல் கொடுக்கணும் என்பதுதான் என் பிளான்.  'நான் புகழுக்காக இந்த மாதிரியான போராட்டங்கள்ல கலந்துக்கிறேன். சமூக அக்கறை காரணமா இல்லை'னு எனக்கு நிறைய விமர்சனங்களும் வந்துச்சு. இவங்க இப்படி பேசிட்டு இருக்கும் போது, நான் சமூக செயல்கள்ல ஈடுபடுறதை நிறுத்தினா, மறுபடியும் என்னை தப்பாவே நினைப்பாங்க. அதனால தொடர்ந்து சமூகத்துக்கு குரல் கொடுக்குறதுதான் என் விருப்பம்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close