Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எக்ஸோடஸ் - விடுதலையின் பயணம்!

மதநம்பிக்கை, நாத்திகர், கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களுக்குள் செல்லாமல் பொதுவாக அதில் என்ன இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள படித்தால் கூட பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அத்தனை சுவாரஸ்யமாக நம்மை ஈர்க்கும். இதற்கு முன்பும் ஹாலிவுட்டில் பல படங்கள் பைபிளை மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான 'எக்ஸோடஸ் - காட்ஸ் அண்டு கிங்ஸ்' படமும் பைபிளில் வரும் மோசேவின் கதை தான்.

எக்ஸோடஸ் என்பதற்கு விடுதலைப் பயணம் என்று பொருள் கொள்ளலாம். முன்பு இருந்த வசதிகளில் ஒரு 'பைபிகல்' திரைப்படத்தை எடுப்பதில் இருக்கும் சவாலே தொழிநுட்பம் தான். இப்போது அந்த சிக்கல் இல்லாததால் நினைத்த காட்சியை நினைத்தபடி படமாக்க முடியும். இந்த வார்த்தைகள் எல்லாம் படத்தை பார்க்கும் போது தான் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.


சரி இப்போது படத்தின் கதைக்கு வருவோம். பைபிளின் படி மோசே அல்லது மோயிசன் என்றழைக்கப்படும் மோசஸ் பிறக்கும் காலகட்டத்தில் இஸ்ரேயலர்கள் (கடவுளின் மக்கள் எனக் கூறப்படுகிறவர்கள்) பாரபோன் மன்னனிடம் எகிப்தில் அடிமைப்பட்டிருக்கின்றனர். பாரபோன் மன்னனின் உத்தரவுப்படி அந்த நாட்டில் இரண்டு வயதிற்குக் கீழ் இருக்கும் குழந்தைகள் எல்லோரையும் கொல்ல வேண்டும்.

மோசே இறப்பதை விரும்பாத அவனின் தாய், கைக் குழந்தையான மோசேவை ஒரு துணியில் சுற்றி கூடையில் வைத்து நைல் நதியில் விடுகிறாள். அந்த குழந்தை எகிப்து இளவரசியின் (பாரபோனின் தங்கை) கைகளில் சேர்கிறது. அவள் மோசேவை தத்துப்பிள்ளையாக் வளர்க்கிறாள். மோசே வளர்ந்து பெரியவனாகிறான். அங்கு அடிமைகளாய் இருக்கும் தன் மக்களுக்கு கொடுமை நடப்பதையும் பார்க்கிறான். அதை எதிர்த்து குரலும் கொடுக்கிறான். மோசேயும் இஸ்ரேலை சேர்ந்தவன் தான் என்ற தகவல் வெகு சீக்கிரத்திலேயே மன்னனுக்குத் தெரிகிறது. அங்கிருந்து தப்பி தன் மாமாவின் வீட்டிற்குச் செல்கிறான் மோசே.

பின்னர் ஒரு நாள் மலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பச்சை முட்செடி தீப்பற்றி எரிகிறது. அதன் மூலம் கடவுள் அவனுடன் பேசுகிறார். "எகிப்திலே அடிமைப்பட்டிருக்கும் உன் மக்களை நீ தான் காப்பாற்ற வேண்டும்" எனக் கூறுகிறார் கடவுள். முதலில் மறுக்கும் மோசே பின்னர் ஏற்றுக் கொள்கிறார். மன்னனிடம் நடந்ததைக் கூற அவர் மோசேயை கேலி செய்கிறார். பாம்பு, தவளை, ஈ, வெட்டுக்கிளி என தொடர்ந்து அந்த நாட்டு மக்களை தாக்குகிறது. இதைக் கண்டு பயப்படாத மன்னன், விடுதலை தர மறுக்கிறார்.

பின்னர் கடவுள் சொன்னது போல தண்ணீர் எல்லாம் ரத்தமாக மாறுகிறது. ஆனால் அதுவும் கடவுள் தரும் எச்சரிக்கை என நம்ப மறுக்கும் மன்னன் விடுதலை தர மறுக்கிறார். மோசே சோர்ந்து போய் கடவுளிடம் கூறுகிறான். பின் இஸ்ரேயல் மக்கள் அனைவரின் வீட்டில் இருக்கும் ஆட்டுக்குட்டியை பலி கொடுத்து அதன் ரத்தத்தை அவர்கள் வீட்டின் கதவுகளில் பூசும்படி மோசேயிடம் கூறுகிறார் கடவுள். அதன்படியே அவர்களும் செய்கின்றனர். அந்த ரத்தக்கரை இல்லாத வீட்டில் இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த மகன் இறந்து போகிறார்கள், மன்னனின் மகனும் இதில் அடக்கம். இதனால் விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளும் மன்னன் இஸ்ரேயல் மக்களை விடுவிக்கிறார். அவர்கள் கிளம்பிய பின், அடிமைகள் இல்லை என்றால் இங்கு இருக்கும் வேலைகளை யார் செய்வது என்ற எண்ணம் வர அவர்களை மீண்டும் சிறைபிடிக்க துரத்திச் செல்கிறான் மன்னன். இஸ்ரேயல் மக்களுடன் கானான் தேசத்திற்குப் போக வழியில் இருக்கும் செங்கடலை கடந்து தான் செல்ல வேண்டும். என்ன செய்வது எனத் திகைக்கும் மோசே கடவுளிடம் கேட்க கடல் இரண்டாக பிரிந்து அவர்களுக்கு வழி தருகிறது. அவர்கள் கடந்து சென்றதும் கடல் மீண்டும் மூடிக் கொள்கிறது. இவ்வாராக இஸ்ரேயல் மக்களை மோசே மீட்டு வந்த கதை தான் எக்ஸோடஸாக திரையில் விரிகிறது.

வழக்கமானதை விட இந்தக் கதையில் தொழிநுட்பத்தை பயன்படுத்த நிறையவே வாய்ப்பு இருக்கிறது என்ற காரணமே இந்தப் படம் உருவாக காரணம் எனத் தோன்றுகிறது. தவளை, பாம்பு என மன்னனை அச்சுறுத்தும் காட்சிகளாகட்டும், கடல் இரண்டாகப் பிளந்து வழி தரும் காட்சியாகட்டும் அனைத்தும் தொழிநுட்பத்தின் உச்சம்.

மோசே தன் நாட்டு மக்களை காப்பாற்றி சென்றான் என்றதோடு படம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர், தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, ஒருவருக்கொருவர் சண்டையிடுவது என மக்கள் வாழ, பிறகு மோசே வழியாக பத்துக் கட்டளைகளை மக்களுக்கு கடவுள் அளிப்பது என இன்னும் சுவாரஸ்ய அத்தியாயங்கள்தான்.

கடவுள் நம்பிக்கை, மதம் இவற்றைக் கடந்து ஒரு விஷுவல் ட்ரீட்டாக இந்தப் படம் நிச்சயமாக உங்களைக் கவரும்!

- பா.ஜான்ஸன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close