Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் இனிய கதைநாயகிகள்! - இயக்குநர் கே.பாலசந்தர் அவள் விகடனுக்கு அளித்த கடைசி பேட்டி..

 

மறைந்த கே.பி. அவர்கள் தான் இயக்கிய திரைப்படங்களின் கதை நாயகிகள் குறித்து அவள் விகடனுக்கு கடைசியாக அளித்த சிறப்பு பேட்டி கட்டுரை

'என் கதைநாயகிகள் ஒவ்வொருவரையும் கதைக்காக நான் உருவாக்கியிருந்தாலும், அவர்கள் அனைவரும் அழுத்தமான சிந்தனைகளை சமூகத்தில் பதித்தவர்கள்.

'அச்சமில்லை அச்சமில்லை’ - 'தேன்மொழி’, என் மரியாதைக்குரியவள். அச்சம், கோபம், வெறுப்பு, ஆக்ரோஷம் என்று 'தேன்மொழியி’ன் அத்தனை உணர்ச்சிகளையும் திரையில் கொண்டுவந்தவர், சரிதா.

தேன்மொழி, தைரியமான பெண். நேர்மையும், சத்தியமும் முக்கியம் என்று நினைப்பவள். அப்படி ஒருவனான 'உலகநாதனை’ (ராஜேஷ்) விரும்பி திருமணம் செய்துகொள்வாள். காலப்போக்கில் கட்சியில் வளரும் அவன், கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை இழந்து, நேர்மையில்லாதவனாக மாறிவிடுவான். இதைத் தாங்க இயலாதவளாக கணவனை கண்டித்துக்கொண்டே இருப்பாள்.ஒரு கட்டத்தில் கணவன் செய்யும் அட்டூழியங்கள் எல்லை மீற, 'உம்மட அழகப் பாத்தும் உம்மட பல்லு வரிசையைப் பாத்தும் கட்டிக்கிறலைய்யா... உம்மட சொல்லுக்கும் உண்மைக்கும்தான் உமக்கு பொஞ்சாதியா ஆனேன்யா...’ என்பாள். 'பொஞ்சாதிங்கிறவ அடுப்பங்கறையிலதான் இருக்கோணும். இன்னும் பச்சையா சொல்லணும்னா, நான் படுன்னா படுக்கணும்’ என்பான். இறுதியாக கணவனைப் பிரிந்துவிடுவாள் தேன்மொழி. அதன் பிறகும் அவனுடைய அட்டூழியங்கள் தொடரும். ஒரு விழாவில், கணவனுக்கு மேடையில் மாலை போட்டு, மாலைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவனைக் குத்தி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவாள். படத்தின் கடைசிக் காட்சியில் காந்தி சிலைக்கு கீழ் 'சுதந்திரம்’ என்ற பெயர் கொண்ட ஒருவன் அழுதுகொண்டிருப்பான். 'சுதந்திரம் அழுதுகொண்டிருக்கிறது’ என்று படத்தை முடித்திருப்பேன்.

கணவனாகவே இருந்தாலும், அவனால் பிறர் பாதிக்கப்படக் கூடாது என முடிவெடுத்து அந்தக் குற்றவாளியைக் களையெடுக்கும் தேன்மொழி, நேர்மைக்கும் துணிவுக்கும் முன்னோடி. இன்று பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கு, ஆண் பிள்ளைகளை வீட்டில் கண்டித்து வளர்க்க வேண்டியது பற்றி வலியுறுத்தப்படுகிறது. அதைத்தான் அன்றே சொன்னாள் என் 'தேன்மொழி’!'அரங்கேற்றம்’ படத்தின் நாயகி 'லலிதா’, என்னால் மறக்க முடியாதவள். லலிதா பாத்திரத்தை பிரமீளா, ஏற்றிருப்பார். 'நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற பிரசாரத்தை அரசாங்கம் முன்வைத்த தருணத்தில் எடுத்த இப்படத்தில், அதிகப் பிள்ளைகள் பெறும் குடும்பங்கள் படும்பாட்டை முன்வைத்திருப்பேன். ஒரு பிராமண புரோகிதருக்கு 8 பிள்ளைகள். லலிதா, மூத்தவள். அடுத்த தம்பி, கமல்ஹாசன். குடும்பத்தின் பசியைக்கூட முழுமையாக போக்க இயலாத புரோகிதரின் பிள்ளைகளுக்கு டாக்டராக வேண்டும், பாடகியாக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. தம்பி, தங்கைகளின் ஆசைகளை நிறைவேற்றத் தவிப்பாள் லலிதா. தம்பிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதற்காக சென்னைக்கு வருபவள், அரசியல்வாதி ஒருவனின் காமப்பசிக்கு பலியாகிவிடுவாள். நியாயம் கேட்க முடியாமல் அழுது தீர்த்து, ஒருவழியாக போராடி தம்பிக்கு இடம் வாங்கித் தந்துவிடுவாள். ஆனால், வீட்டினரை சந்திக்கும் தைரியம் இல்லாதவளாக, ஹைதராபாத்தில் வேலை கிடைத்துவிட்டதாகச் சொல்லி, குடும்பத்தைப் பிரிவாள்.

'இனி, இந்த உடல் எனக்குத் தேவையில்லை’ என்பவள், ஒரு கட்டத்தில் விலை மாது என்று மாறி நிற்பாள். முன்பு தான் காதலித்த 'தங்கவேலு’ (சிவகுமார்) எதிர்பாராதவிதமாக, இவள் இருக்கும் இடத்துக்கு வந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்பான். ''இது தப்புனு தெரியும். ஆனா, நீயும் என்னைத்தானே விலை பேச வந்திருக்கே?'' என்று லலிதா கேட்க, கூனிப்போவான் தங்கவேலு.

இடையில் தங்கையின் திருமணத்துக்காக வீட்டுக்கு வரும் லலிதா, அவள் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாவாள். கோபம் வந்தவளாய் சுவரில் வரைந்த முக்கோண சின்னத்தை காட்டும் இடத்தில், சமூகத்துக்குப் பாடம் சொல்லும் லலிதா, அந்த விழிப்பு உணர்வு இல்லாததால்தான் தனக்கு இந்நிலை என்பதை பரிதாபமாக உணர்த்துவாள். தன் மாராப்பு விலகியதைக்கூட கவனிக்காமல் இருப்பவளிடம், தங்கை அதை சுட்டிக்காட்ட, 'ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு!’ என்பாள். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது வாய்க்கு வந்தபடி பேசி விரட்டி அடிப்பார்கள். தங்கவேலு அவளைத் திருமணம் செய்துகொள்ள, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கடைசியாக கடலை நோக்கி ஓடுவாள்.

சூழ்நிலையாலும் சமூகத்தாலும் அணைந்துபோன மெழுகுவத்தியாக இருந்தாலும், நாம் வாழும் சமூகம் குறித்து நம்மை யோசிக்க வைத்தவள் லலிதா.


நான் நேசிக்கும் சமகாலத்து கதாபாத்திரம், 'கல்கி’. இதில் ஸ்ருதி நடித்திருப்பார். தன்னைத் தானே செதுக்கிக்கொள்வது போல் படத்தில் வரும் சிலைதான், 'கல்கி’யின் இயல்பும். தான் சிந்திப்பதுதான் சரி என்று நினைப்பவள். அதேநேரத்தில், அவள் சிந்தனை புதுமையானதாகவும் தைரியமானதாகவும் இருக்கும். கற்பு என்பது உடம்பு சம்பந்தப்பட்டது அல்ல... மனதில் இருப்பது என்பாள். இப்போது பரவலாக இருக்கும் ரெடிமேடு இட்லி மாவு தொழிலை அப்போதே அறிமுகப்படுத்திய அறிவுக்குரியவள்.

படத்தில் நடித்த கீதா, ரேணுகா என்று இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் 'பிரகாஷ்' (பிரகாஷ்ராஜ்), இரு வரையுமே கொடுமைப்படுத்துவான். கீதாவுக்கு குழந்தையில்லாத குறையை மனதில் வைத்து, பிரகாஷை திருமணம் செய்துகொள்ளும் கல்கி, அவன் பாணியிலேயே அவனை பாடாய்ப் படுத்துவாள். அவனால் கர்ப்பமாகி குழந்தையை யும் பெற்று, கீதாவிடம் தருவாள். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பெண்ணுக்கு, இன்னொரு பெண் எப்படி வாடகைத் தாயாக இருக்கிறாளோ, கிட்டத்தட்ட அதேமாதிரிதான் கல்கியும் தன் செயலால் நிரூபித்திருப்பாள். ஏற் கெனவே கல்கியைக் காதலித்த ரஹ்மான், அவள் ஒருவனுக்கு மனைவியாகி, ஒரு குழந்தைக்குத் தாயாகி திரும்பிவரும்போதும் புரிந்துகொண்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நேசமுடைய பாத்திரம். முற்போக்கு சிந்தனைகள் குறைவாக இருந்த காலத்தில் வந்த படம். சமூகக் கட்டுப் பாடு அவசியம்தான். அதேநேரத்தில் தனிமனித சுதந்திரம் தேவையானதும்கூட. கல்கி, சமூகத் துக்கு புதிய சாட்டையடி தந்தவள். நான் எடுத்த படங்களை 'பார்ட் 2’ எடுக்கச் சொன் னால், 'கல்கி’தான் என் சாய்ஸ்!

எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்!''

நிறைவடைந்தது

சந்திப்பு: பொன்.விமலா
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஞானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close