Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநர் ஷங்கர், மன்னிப்பு கேட்க வேண்டும்... கொந்தளிக்கும் திருநங்கைகள்!

‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன என்று கொதித்தெழுந்திருக்கும் திருநங்கைகள், சமூக வளைதளங்கள் மூலம் தங்களின் பலமான எதிர்ப்பைக் காட்டி வந்தனர். இந்நிலையில்,  நேற்று (ஜனவரி 19, 2015) படத்தின் இயக்குநர் ஷங்கர் வீட்டுக்கு முன்பாக மறியல் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், அந்தப் பக்கமே யாரும் நுழைய முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவே... தணிக்கை குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய திருநங்கைகள், தணிக்கைக் குழுத் தலைவர் பக்ரிசாமியிடம் தங்களின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். போராட்டத்தில் கலந்துகொண்ட திருநங்கைகள் சிலரிடம் பேசியதிலிருந்து...
 
லிவிங் ஸ்மைல் வித்யா: காஞ்சனா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாதிரியான நிறைய படங்கள் திருநங்கைகளை பெருமைப்படுத்துற அதேவேளையில, ஐ படம் மூலமா ஷங்கர் கேவலப்படுத்தியிருக்கிறது வேதனையா இருக்கு. வக்கிர சிந்தனையை விதைச்சிருக்கிற ஷங்கரை வன்மையா கண்டிக்கிறோம். இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஷ் என திருநங்கையை காட்டும்போது, நடிகர் விக்ரம் முகம் சுளிக்கிறது... 'ஊரோரம் புளியமரம் 'பாடலை பாடுறதெல்லாம் அறுவருப்போட உச்சம். 
பருத்தி வீரன் படம் வந்த புதுசுல என்னைப் பாத்து ஒரு சின்னப்பையன், 'ஊரோரம் புளியமரம்' பாடலை பாடிட்டு, தண்ணி பாக்கெட்டை தூங்கி எரிஞ்சப்ப என் மனசு துடியா துடிச்சது. அந்த பையனுக்கு இந்த மாதிரி திருநங்கைகளை இழிவுப்படுத்தச் சொல்லி அவனோட கல்வித் திட்டம் சொல்லிக் கொடுத்துச்சா... பெத்தவங்க சொல்லிக் கொடுத்தாங்களா... இல்லையே. திரைப்பட காட்சிதானே காரணம். இன்னிக்கு திருநங்கைகள் எவ்வளவோ துறைகள்ல சாதிச்சிட்டு வர்றாங்க. பெரும்பாலான திருநங்கைகள், பெத்தவங்களால வீட்டைவிட்டு துரத்தப்பட்ட நிலையில, ரோடு ரோடா அநாதையா சுத்தி, எப்படியாவது உழைச்சு முன்னுக்கு வரணும்னு நினைக்கிறாங்க... வந்துட்டும் இருக்கிறாங்க. இந்த நிலையில, திரைப்படங்கள் மூலமா மேலும் மேலும் அசிங்கப்படுத்துறீங்களே நியாயமா? 
இந்தக் கேள்வி ஷங்கருக்கு மட்டுமில்ல... இதே எண்ணத்தோட திரைப்படத்துறையில இருக்கிற எல்லாருக்குமேதான். இனி எதிர்காலத்துல யாருமே இந்த மாதிரியான காட்சிகளை திரைப்படத்துல வைக்ககூடாதுனுதான் இந்தப் போராட்டம்.
 
நான் இந்த படத்தை தியேட்டர்ல பாத்தப்ப, ஆடியன்ஸ் எல்லாரும் கைகொட்டி சிரிச்சப்ப, என்னோட மனசு எவ்ளோ வலிச்சிருக்கும்னு ஷங்கருக்கு தெரியுமா? தியேட்டரைவிட்டு வெளியில வரும்போது யாராவது கை கொட்டி சிரிச்சுருவாங்களோனு எவ்வளவு பயந்தேன்னு அவருக்கு தெரியுமா? என்னைப் போல பெத்தவங்களே ஏத்துக்கிட்ட  திருநங்கைகள் நிறைய பேர் இருக்காங்க.அப்படியிருக்க அவங்களோட  பெத்தவங்க இந்த படத்தைப் பாத்தா அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு  தெரியுமா? 
 
'ஐ' படத்துல நாய் இருக்குறதால, 'இந்தப் படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை'னு டைட்டில் கார்டு போடுறாங்க. எங்கள துன்புறுத்துறது மட்டும் சரியா ஷங்கர் சார்? 'பேராண்மை' படத்துல ஒரு சாதிப் பேரை குறிக்குற இடத்துல பீப் சத்தம் கொடுத்து, அதை தடை பண்ணின தணிக்கைத்துறை, ஒரு சாதியின் மேல் காட்டுகிற அக்கறையை, ஏன் எங்களைப் போன்ற மனிதர்கள் மேல காட்டல? 
நிறைவா சொல்லிக்கிறது... ஷங்கர்  எங்ககிட்ட பொதுமன்னிப்பு கேட்கணும். எதிர்காலத்துல இந்த மாதிரி நிகழாம இருக்க, தணிக்கை துறை மீது வழக்கு தொடர முடிவெடுத்திருக்கோம்.

கிரேஸ்பானு: அரக்கோணத்துல இன்ஜினீயரிங் காலேஜுல படிக்கிறேன். ஐ படத்துல திருநங்கைகளை காமப் பிசாசுகளா காட்டியிருக்குறது மனசுக்கு வேதனையை கொடுக்குது. நாங்களும் மனிதர்கள்தானே எங்களுக்கு காதல் வரவே கூடாதா? இந்த படத்தைப் பாத்துட்டு வெளிய வந்த பிறகு, 'ஏய் காமப்பிசாசு'னு யாராவது காரித்துப்புறதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கே. எங்களுக்கு எந்த வகையில பாதுகாப்பு கொடுக்கப் போறீங்க. மக்கள் பலரும் கொஞ்சம் கொஞ்சமா எங்களை ஏத்துக்கிட்டு வர்ற இந்தச் சூழல்ல, ஒரு சினிமா எங்களை திரும்பவும் துவைச்சு காயப்போடறத எப்படி ஏத்துக்க முடியும்? 

எங்களை தூக்கி வெச்சு கொண்டாடுங்கனு கேட்கல. எங்கள கேவலப்படுத்தாதீங்கனுதான் கேக்குறோம். கொஞ்சம் கொஞ்சமா நாங்க முன்னுக்கு வந்துட்டு இருக்கோம். இந்த முன்னேற்றத்தை தொடரவிடுங்க. லஞ்சம், ஊழல், பெண் கொடுமைகளுக்கு எதிர்ப்புனு சினிமா எடுக்கிறதுல மட்டும் முற்போக்கு காட்டுற நீங்க... எங்க விஷயத்துல மட்டும் பிற்போக்காவே இருக்கீங்களே! உங்களோட கீழ்த்தரமான இந்த சிந்தனைகளால மறுபடியும் எங்களை பின்னுக்குத் தள்ளிவிடாதீங்க... ப்ளீஸ்!
 
-பொன்.விமலா -
 
’ஐ’ பட பத்திரிகையாளர் சந்திப்பு ஆல்பம் : http://cinema.vikatan.com/articles/news/24/8340

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close