Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிச்சுக்கிட்டே எம்.பி.ஏ! - 'டூரிங் டாக்கீஸ்' அபி சரவணன் சிறப்பு பேட்டி..

டூரிங் டாக்கீஸ் படம் ரிலீஸ் ஆயிடுச்சு. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்துல அவரே நடிச்சு ,தயாரிச்சுருக்கற படம். அந்தப் படத்தின் நாயகனான அபிசரவணனிடம் சில கேள்விகள்...

'கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்துக்கு முன்னயே, உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?

ஆமாங்க என்னோட முதல் படம் ‘அட்டக்கத்தி’. அதுல தினேஷோட ஃப்ரண்டா நடிச்சிருப்பேன். அதுக்கப்புறம், குட்டிப்புலி படத்துலயும் ஃப்ரண்ட் ரோல். ஹீரோவா நடிச்ச முதல் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ இப்போ ’டூரிங் டாக்கீஸ்’.

உங்களப்பத்தி சொல்லுங்களேன்...?
‘எனக்கு சொந்த ஊர் மதுரை. படிச்சது, பி.ஈ மெக்கானிக்கல். அதே வேகத்துல பெங்களூர்ல ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். நல்ல சம்பளம் பிரச்னை இல்லாம போயிட்டு இருந்துச்சு என் லைஃப். சின்னவயசுல இருந்தே மனசுக்குள்ள சம்மணம்போட்டு உட்கார்ந்திருக்கிற சினிமா மோகம் அப்போ தலைத்தூக்க ஆரம்பிச்சிடுச்சு. வீட்டுல யாருக்கும் நான் சினிமாவுல நடிக்கிறது பிடிக்கல. வெறும் 3,000 ரூபாய் பணத்தோடயும், டிரெஸ் அடங்கிய பேக்கோடயும் சென்னை,கோலிவுட்ல வந்து இறங்கிட்டேன். டீக்கடையில டீ, பன்னு இப்படியே நாட்கள் ஓட, கூடவே சிலரோட அறிமுகம் கிடைச்சு, சின்ன சின்ன ரோல்களுக்கான வாய்ப்பு கிடைச்சுது. நடிச்சுக்கிட்டே இந்த மூணு வருஷத்துல எம்.பி.ஏ, சினிமாப் பயிற்சிப் பட்டறைப் படிப்பும் முடிச்சாச்சு. ஆனாலும் என் வீட்ல இருக்கறவங்களுக்கு என்மேல இருக்கிற கோபம் தீரல. அவங்கள ரொம்பவே மிஸ் பண்றேன். கோபம் தீர்ந்து என்ன ஏத்துக்கற அளவுக்கு முன்னேறி காட்டணும்... இதுதான் என் லட்சியம்.

இதைத்தவிர வேற எதையெல்லாம் மிஸ் பண்றதா ஃபீல் பண்றீங்க?
நிச்சயமா.. ‘டூரிங் டாக்கீஸ்’ படத்துல சில படுக்கையறைக் காட்சிகள் இணையதளத்துல வெளியாகவும்... என்னோட ‘சோல்மெட்’ என்ன விட்டுப் பிரிஞ்சுட்டாங்க. சினிமாவுக்காக நிறைய இழந்தேன் நிறையபேரோட பேட்டியில படிச்சிருக்கேன். அப்போலாம் அது சாதாரணமா இருந்துச்சு. என்னோட வாழ்க்கையில வரும்போது ரொம்ப ரணமா தெரியுது. இன்னும் நிறைய கஷ்டம் நமக்காக காத்துட்டு இருக்குனு நினைச்சுப் போராட ஆரம்பிச்சிருக்கேன்.

சரி, டூரிங் டாக்கீஸ் பட அனுபவம் பத்தி சொல்லுங்க?
ஒரு பெரிய டைரக்டர்கிட்ட, அதுவும் அவரோடு இளமைக் காலத்தோற்றத்துல நான் நடிக்கிறேன்கிறதே பெருமையா இருக்கு. நிறைய கத்துக்கிட்டேன். டான்ஸ் பண்றது இவ்வளவு கஷ்டமானு இப்போதான் தெரியுது. படம் முடிச்ச பிறகு இப்போ நிறைய டான்ஸூக்காக மெனக்கெட்டுட்டு இருக்கேன். நல்ல கான்செப்ட் உள்ள படம் இது.சான்ஸே இல்லங்க. இந்த வயசுலயும் எவ்வளவு ஆக்டிவா இருக்காரு தெரியுமா சந்திரசேகர் சார்! அவரோட ஓட்டத்துக்கு என்னால ஈடுகொடுத்து ஓட முடியல. வொன்டர்ஃபுல் ஹார்டுவொர்க்கர். நீங்க சரியா வேலை பார்க்கிறீங்களா, இல்லையாங்கறது முக்கியம் இல்ல. சரியான டைமுக்கு ஷூட்டிங்ல இருக்கணும். ரொம்ப பன்ச்சுவாலிட்டியான பர்சன்.’’

டூரிங் டாக்கீஸ் படத்தப் பத்தி?
’இது வயதான ஒருத்தரோட லவ் சப்ஜெக்ட். முதல் பாதி சந்திரசேகர் சாரோட இளமைக்கால காதல் பத்தின கதை. இந்த வயசு ரோல்லதான் நான் ஹீரோவா நடிச்சிருக்கேன். இரண்டாம்பாதியில இன்னொரு கதாநாயகன்னு கதை நகரும். வயசானதுக்குப் பிறகு தன்னோட காதல், பாசம் இதெல்லாம் இல்லங்கற மாதிரி உள்ள ஒண்ணு வெச்சுட்டு, வெளியில வேற மாதிரி நடிச்சுட்டு இருப்பாங்க. அதை எல்லாம் தோலுரிச்சுக் காண்பிக்கிறப்படம்தான் இது. 75 வயசு இளைஞனா சந்திரசேகர் சார் நடிச்சுருக்கார்.உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? ஒரு சீன்ல எனக்கு ரொமான்ஸ் பண்ண வரல. சந்திரசேகர் சார்கிட்ட இதுக்காக அடிவாங்கினேன். நடிக்க வராம அழுதது இந்தப் படத்துலதாங்க (ரொமான்ஸ் வராமனு சொல்லுங்க). படத்தைப் பார்த்துட்டு, ‘அப்பா அசத்திட்டீங்க’னு சந்திரசேகர் சாரை விஜய் பாராட்டினார்’’

உங்களோட அடுத்த படம்?
பிரசாந்த் சாரோட ‘சாகசம்’ படத்துல நடிச்சிருக்கேன். அதுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தா மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன். சினிமாங்கறது பெரிய கடல். இங்க எவ்வளவோ பெரிய ஜாம்பவான்கள் இருக்காங்க. அவங்களுக்கு ஈடு கொடுக்கிறது அவ்வளவு ஈஸியில்ல. நிறைய தெரிஞ்சுகிட்டு வந்து உழைக்கணும்.

ஆல் தி பெஸ்ட் அபி!

- வே. கிருஷ்ணவேணி -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close