Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கே செல்லும் இந்தப் பாதை..?

‘அதுக்கும் மேலே... அதுக்கும் மேலே’னு நம்ம தமிழ் சினிமா டைரக்டருங்க ரொம்ம்ம்ம்ம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா. அவங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சில ‘அதுக்கும் மேலே...’

ஷங்கர்: செவ்வாய் கிரகத்தில் ஒரு பாட்டை ரிச்சாக ஷூட் செய்ய நாஸாவில் விசா அப்ளிகேஷன் போடலாம். வில்லனாய் ஏலியனைப் பிடித்துப்போட முயற்சி செய்யலாம். அடுத்த படத்தில் எபோலா வைரஸை ஏவிவிட்டு வில்லனைக் கொல்வதாய் சீன் வைக்கலாம். காலையில் எழுந்து குடிக்கும் காபியில் ஸ்பூனை விட்டு ஆட்டும்போது ஸ்பூன் காஸ்ட்யூமிலும் பாத்ரூமுக்குள் பக்கெட் காஸ்ட்யூமிலும் அவ்வளவு ஏன் டூத் பிரஸ் காஸ்ட்யூம், நாத்தம் பிடிச்ச சாக்ஸ் காஸ்ட்யூமிலும் நாயகி வருவதாய் கற்பனை செய்து குலை நடுங்க வைக்கலாம். துபாய் எண்ணைய்க் கிணற்றுக்குள் இறங்கித் தூர்வாரிக்கொண்டே குத்து டான்ஸ் போடவிடலாம்.

மணிரத்னம்: இதிகாசங்களை மிக்ஸியில் போட்டு அடித்து படம் எடுப்பதைவிட்டு அடுத்து சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணியிலிருந்து ஒன்லைன் பிடிக்கலாம்.  கிராமத்துக் கருப்பாயி கேரக்டருக்கு கேட் வின்ஸ்லெட்டை டப்பிங் கொடுக்க வைக்கலாம். கடல் எடுத்ததால் அடுத்து ‘காடு’ என படம் எடுக்கலாம். ரஹ்மானுக்குப் பதில் ஸ்னூப் டாக்கையோ ஹன்ஸ் ஜிம்மரையோ இசையமைப்பாளராக்கி நேட்டிவிட்டியோடு பின்னி எடுத்து மென்னியைக் கடிக்கலாம். படம் முழுக்க ஹீரோவும் ஹீரோயினும் நேரில் பேசிக்கொள்ளாமல் ட்விட்டரில் பேசிக்கொள்ள வைத்து யூத் பல்ஸ் பிடித்து படம் எடுக்கலாம்.

கௌதம் வாசுதேவ் மேனன்: ஹீரோவும் ஹீரோயினும் ஃப்ளைட்டிலேயே காதலித்து ஃப்ளைட்டிலேயே கல்யாணம் செய்ய வைக்கலாம். படம் முழுக்க  டீ மாஸ்டர் உட்பட எல்லா கேரக்டர்களும் இங்கிலீஷில் பேசவிட்டு ஹாலிவுட்டுக்கே சவால் விடலாம். ஒரு சேஞ்சுக்கு தமிழில் சப்டைட்டில் போட்டு டெரர் கிளப்பலாம். ‘உனக்கு 80 வயசு ஆகுறப்போ எனக்கு 40 வயசுதான் ஆகும் ஜெஸி. அப்பவும் உன்னை வெறித்தனமா லவ் பண்ணுவேன்’ என பேரிளம் பெண்ணைப் பார்த்து ஹீரோ லவ் டயலாக் பேச வைக்கலாம். நிஜ சீரியல் கில்லர்களையே ஜாமீனில் எடுத்து இயல்பான வில்லன்களாக நடிக்க வைத்து உலகின் முதல் ரியல் கிரிமினல் சினிமாவாக உருவாக்கலாம். 

கே.எஸ்.ரவிக்குமார்: பலூனுக்குப் பதில் ராக்கெட்டுக்கு ரஜினி தாவி விண்வெளியில் இருந்துகொண்டே எரிகல்லைத் தடுத்து எறிபந்து விளையாட வைக்கலாம். இந்தியாவின் கடனுக்காக தன் சொத்துகளை இழந்து நடுத்தெருவுக்கு வருவது போல காட்டலாம். கங்கையையும் காவிரியையும் ஒரே பாடலில் இணைத்துவிட்டு அதைச் செய்தது நான் அல்ல என பெருந்தன்மையாய் சொல்லிவிட்டு பொட்டிக்கடையில் பர்பி விற்க வைத்து மிரட்டலாம். ரஜினியை ஏஞ்சலீனா ஜோலியும், மிலா குனீஸும் ஒன்ஸைடு லவ் பண்ணுவதாய் காட்டி டூயட் பாட வைக்கலாம்.

பாலா: கெட்-அப்புக்காக ரொம்ம்ம்ப மெனக்கெட வைக்கலாம். உதாரணத்துக்கு தலைவாசல் விஜய், தம்பி ராமய்யா, கிட்டி போன்றோர்களைப் படத்துக்காக முடி வளர்க்கச் சொல்லி டார்ச்சர் கொடுக்கலாம். சண்டைக் காட்சிகளின் மேக்கிங்கை அப்படியே படம் முடிந்ததும் போட்டு எல்லோரையும் அலற வைக்கலாம். ஃபீல்டு அவுட்டான பெருசுகளை வில்லனாகவோ குணச்சித்திரமாகவோ காட்டி நிஜமாய் அடித்து தோலை உரிக்கலாம்.
 

மிஷ்கின்: நேரடியாக சியோல் நகரின் சப்வேக்களை காட்டலாம். கதையும் கதை மாந்தர்களும் கொரியர்களாகவோ ஜப்பானியர்களாகவோ காட்டி நேட்டிவிட்டியில் மெரசலாக்கலாம்.

சுந்தர்சி, ஹரி: பறக்கும் சுமோவின் டாப்பில் ஊரை உட்கார வைத்து பஞ்சாயத்து சீன் வைக்கலாம். சரக்குக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயை வைத்தே பிரிந்த குடும்பத்தைச் சேர்த்து வைக்கலாம். ஹீரோவையும் ஹீரோயினையும் சேர்த்து வைக்க 143 சுமோக்களை குறுக்கும் நெடுக்குமாக பறக்கவிடலாம். புளியமரத்தைப் பிடுங்கி அடிக்கவரும் வில்லன் ஆட்களைத் தண்டவாளத்தைப் பெயர்த்து எடுத்து ஹீரோ போட்டுப் பொளக்கலாம். ‘ஃபாஸ்ட் ஃபார்வேர்டு’ மோடில் எடுக்கப்பட்ட உலகின் முதல் சினிமா என கின்னஸுக்கு அனுப்பி வைக்கலாம்!

- ஆர்.சரண் ஓவியங்கள்: கண்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close