Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமா இசைக்கு? ... ஒரு ஆய்வு!

மிழ் சினிமாவின் உயிர் இசை.ஒரு படத்தை கடைக்கோடி ரசிகன் வரை கொண்டு செல்ல முதல் முகவரி தமிழ் சினிமாவின் பாடல்கள்தான். ஆனால் அந்த நிலை இன்று அப்படியே தலைகீழ். பாடல்களே இல்லாமல் கூட படங்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்தாலே எழுந்து போகும் அளவிற்கு மாற்றம் உண்டாகிவிட்டது.

அப்படியென்றால் இனி பாடல்கள் இல்லாத காலம் கூட வந்துவிடுமா? வரலாம். ஆனால் இப்போதும் தமிழ் சினிமாவில் இசை பெரும் ஆட்சி செய்தவண்ணம் தான் இருக்கிறது. ஆனால் அதன் காலம் தான் மிகக் குறைவு. மெகா ஹிட் ரகம் பாடல்களுக்கு கூட வாழ்நாள் ஓரிரு மாதங்களே. எனினும் பாடல்கள் மூலம் இப்போதும் ஹிட்டடிக்கும் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏன் ஒய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலில் இந்திய அளவில் பெரும் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உயர்ந்த தனுஷ் அனிருத்தே இதற்கு தக்க சான்று எனலாம். எனினும் முன்பெல்லாம் 10க்கு 9 படங்கள் அப்படி வரும். இப்போது 10க்கு ஒன்று வருவதே பெரிய விஷயமாகிப் போயுள்ளது. ஏனோ 60 முதல் 80களின் பாடல்களை போல், தற்போதைய பாடல்களுக்கு ரசிகர்களின் மனதில் நிற்பதில்லை என்றால் இதற்கு காரணம் இசையமைப்பாளர்கள் இல்லை கேட்கும் நாம் தான் என்றால் ஏற்றுக் கொள்வோமா மாட்டோம். சரி எப்படி? அவசரம் எல்லாத்துக்கும் அவசரம். இதுதான் நம் செய்யும் தவறு. அப்படியே எம்.எஸ்.வி, இளையராஜா என 60 முதல் 80களை பாராட்டினாலும் இளையராஜா இன்றும் இசையமைத்துக் கொண்டுதானே இருக்கிறார். இப்போது ஏன் அவரது பாடல்கள் மனதில் நிற்பதில்லை.

ஏனெனில் ஒரு பாடல் எப்படி இருக்கிறது என்ற மன நிலை போய் எதுமாதிரி இருக்கிறது என்பதில் தான் மனம் அதிகம் யோசிக்கிறது. ஏன் இதை எழுதும் நான் கூட அந்த ரகம் தான். மாரி பாடல்கள் வெளியான உடன் டானு டானு பாடல் ‘காதலன்’ படத்தின் ’காதலின் சங்கீதமே’ பாடல் போல் உள்ளதே என்பதை யோசிக்க மட்டும் மூன்று நாட்கள் வெட்டியானது வேறு கதை.

சரி இந்த கேள்விகளை சில இசை ஞானம் தெரிந்தவர்கள் முன்பு வைத்தோம்.

’பண்ணையாரும் பத்மினியும்’, ’ரம்மி’ , ’ஆரஞ்சு மிட்டாய்’ படங்களின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பேசுகையில்: இசை ஒன்றுதான் கேட்கும் நாம் மாறிவிட்டோம் என ஆரம்பித்தவர், முன்பெல்லாம் பிடித்த பாடலை நோக்கி பல நிகழ்ச்சிகள் ரேடியோ, டிவிக்களில் இருந்தன. இப்போது அவர்களும் இதுபோன்ற பாடல் கேட்கும் நிகழ்ச்சியையே எக்ஸ்ளூசிவ் ஆக்கிவிட்டனர். ஆரோக்கியமான பாடல் ப்ரோமோஷன் வகைதான் இவையெல்லாம். இதுபோன்ற மக்கள் முன்பு உருவாக்கப்படும் இசை விளம்பரங்கள் குறைந்துவிட்டன. விரும்பும் பாடல் என்றே ஒன்று இல்லை. ஏதோ டெம்ப்ளேட்டில் போட அந்த பாடல்கள் ப்ளே ஆகிவிடுகின்றன. இதில் பிசி வாழ்க்கை வேறு. இசை கேட்கும்

 முறைகள் என்பதை விட வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன. அதேபோல் அந்த காலத்தில் டியூனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தோம், இப்போது ஐபோன், ஐபாட், சரௌண்டிங் என சப்தங்களை மிகைப்படுத்தும் தொழில்நுட்பமே அதிகமாகிவிட்டது. டியூனை விட பாடல்களில் ஒளிக்கும் சின்ன சின்ன சவுண்டுகளுக்கு அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. பாடல்களுக்கு உயிர் டியூன் தான். இதுல அந்த காலம் இந்த காலம் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. இசை ஒண்ணுதான். மேலும் தமிழ் சினிமா மக்கள் முன்பெல்லாம் அதிக பட்சம் இந்தி பாடல்கள் கேட்பர், இப்போதோ, அமெரிக்க பாடல்கள் முதல் அம்ஞ்சிக்கரை பாடல்கள் வரை நம் கைகளில் கொட்டுகிறது. இதற்கிடையில் தமிழ் பாடல்கள் ஜெயிக்கிறது என்பது கொஞ்சம் சிரமம் தான். ஏன் படங்களே முன்பு ஒருவருடம் ஓடிய அதே தமிழ் சினிமாவில் இப்போது ஒருவாரம் தாக்குபிடித்தால் நல்ல படம் என்ற அதே நிலைதான் பாடல்களுக்கும். என்கிறார் இந்த இளம் இசையமைப்பாளர்.


பாடகர் உன்னிகிருஷ்ணன்: அப்போதைய தமிழ் சினிமா இசையை எம்.எஸ்.வி சார் காலம் இளையராஜா சார் காலம் என இரண்டாக பிரித்தே விடலாம், அந்த அளவிற்கு போட்டிகளே கிடையாது. ராஜா சார் இன்னும் ஓரிருவர் அவ்வளவுதான். பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் வாந்தார். ஆனால் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது. இன்றும் நல்ல இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன், என பல நல்ல இசையமைப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும் இப்போது கணிணி சார்ந்த தாக்கம் அதிகரித்து விட்டது. அதிகம் லூப்ஸ் என்ற சாஃப்ட்வேர்களின் ஒலியைப் பயன்படுத்தும் போக்கு உருவாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற மனநிலை வேறு. கணிணி மூலம் யார் வேண்டுமானாலும் தனது குரலை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அதே சமயம் இதை மட்டுமே காரணமாகவும் சொல்ல முடியாது. மக்களின் ரசனையும் மாறி வருகிறது. காலத்தின் கட்டாயம் என்ற நிலைதான். பல பாடல்கள், பல மொழி இசைகள் என பட்டனை தட்டியவும் கிடைக்கிறது. பொறுமை குறைந்து இன்று இந்த பாடல் நாளை வேறு பாடல் என்ற மனம் தேட ஆரம்பித்து விட்டது. புத்தகம் படிக்கும் போக்கே இல்லாமல் போன காலத்தில் ஒரு பாடலை எப்படி பொறுமையாக கேட்போம். ஏன் நீங்களே யோசித்து பாருங்கள் சமீப காலங்களில் ஒரு பாடலை ஒரே நாளில் உங்களால் ஒரு 10 முறை கேட்க முடியுமா காரணம் அடுத்தடுத்து என்ற எண்ணம் தான். 

கருநாடக இசை ஆசிரியை வசந்தி கோபால்: முதலில் ராகங்களுக்கும், பாடல் பாடும் பாடகர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் இருந்தது. இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஒன்றிரண்டு சமீபத்தில் கூட ‘அழகே அழகே’ பாடல் (சைவம்) மனதில் நிற்கவில்லையா என்ன?. அவ்வப்போது டியூன், பாடல் பாடும் குரல் என முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் இருக்கிறதுதான். என்றாலும் இப்போதெல்லாம் கருநாடக இசை , அல்லது ராகங்களைக் கொண்டு பாடல்கள் அமைப்பதே குறைந்துவிட்டது. இதில் ஃபியூஷன் , மிக்ஸிங், தொழில்நுட்ப கலவை வேறு விளம்பர யுக்திக்காக குத்து பாடல்கள் மேல் அதீத கவனம் செலுத்தி கடைசியில் பாட்டின் அர்த்தம் போனதுதான் மிச்சம். அர்த்தமுள்ள பாடல்கள் காலம் தாண்டி நிற்கும் என்பது என் கருத்து.

 

கருநாடக இசை பாடகி மாலா தியாகராஜன் : நெறைய குத்துப் பாடல்கள். முன்பெல்லாம் ராகத்துக்கும் அர்த்தத்துக்கும் நெறையா முக்கியத்துவம் கொடுத்தாங்க. இப்போது சத்தமான ஒலி தான் இருக்கு. அர்த்தம், பாடும் குரல் முக்கியத்துவமே இப்போது இல்லை. இப்பவும் கொஞ்சம் அர்த்தமான பாடல்கள் வருது ஹிட்டும் ஆகுதே. ஓ காதல் கண்மணி ‘மலர்கள் கேட்டேன்’ பாடல் நன்றாக இருக்கிறதே. ஆனால் இசை கேட்கும் வாய்ப்பு அதிகமாயிடுச்சு. எனக்கு தெரிந்து கொஞ்சம் அர்த்தமான வரிகள், ரகங்களுக்கு முக்கியத்துவம், முக்கியமாக நல்ல டியூன்களை பயன்படுத்தினாலே பாடல் கண்டிப்பாக வெற்றிபெறும். 

கருநாடக இசை பயிலும் மாணவி ப்ரஷாந்தி: எனக்கே இப்போதெல்லாம் சில பாடல்கள் மூன்றாவது முறை கேட்கும் போதே தலைவலி வருகிறது. இதற்கு காரணம் அதீத சப்தம். பாடல்களின் ராகங்கள் குறைந்து சப்தக் கலவை அதிகரித்து விட்டது. இந்த போட்டியிலும் மரியான் படத்தின் இன்னுக் கொஞ்ச நேரம் , மற்றும் சுந்தரபாண்டியன்’ படத்தின் நெஞ்சுக்குள்ள பாடல்கள் போல் மனதில் நிற்கும்படியான பாடல்கள் வரத்தான் செய்கின்றன. நமக்கும் கொஞ்சம் அவசர வாழ்க்கை, நெறையா இசை, ரேப், ஜாஸ் , இப்படி மேலை நாட்டு கலாச்சார இசைகள் வேறு. ஆனாலும் இசைக்கு மொழி இல்லைன்னு கேட்கறது நல்ல விஷயம் தான். ஆனால் அதுக்காக நம்ம இசையை விட்டுவிட முடியாது. கண்டிப்பா இசைக்கு ஒரு புரட்சி தேவைதான். என்கிறார் இந்த இளம் கருநாடக இசை பயிலும் ப்ரஷாந்தி.

 

இங்கே பொதுவாகவே தற்போது ஒலிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு டியூன்களுக்கும், ராகங்களுக்கும் முக்கியத்துவம் இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது. ஒருவகையில் பார்த்தால் இசையமைப்பாளர்களுக்கும் விளம்பரத் திணிப்பு, குழந்தைகளை கவர வேண்டும் என்ற தர்ம சங்கடமான நிலை. இதைத் தாண்டி ரசிக்கும் நாம் என காரணங்கள் பல இன்று ஒரு பாடல் கேட்கும் நாம் ஓரிரு நாட்கள் கழித்து அந்த பாடலை திரும்ப கேட்கும் எண்ணம் கூட இல்லாது வேறு இசைக்கு தாவி விடுவது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம். என இது போன்ற காரணங்களினாலேயே இப்போதைய தமிழ் சினிமாவின் பாடல்கள் காலம் தாண்டி நிற்காமல் போய் விடுகிறது எனலாம். இணையத்தின் ஆதிகத்தில் சிக்கிய நாமும், விளம்பரத்தின் திணிப்பில் சிக்கிய இசை ஜாம்பவான்களும் மீண்டு வரும் வரை இன்னும் தமிழ் சினிமாவின் இசைக்கு அங்கீகாரம் குறையத்தான் செய்யும். 

- ஷாலினி நியூட்டன் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close