Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்....

பெண்கள் பூப்பெய்தினால் செய்யப்படும் சடங்கான ‘மஞ்சள் நீராட்டு விழா’ குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும். ஒரு பெண் குழந்தையாக பிறந்து குறும்பு தனம் செய்து, சிறுமியாக வளர்ந்து பெண்ணாய்ப் பரிமாணம் அடைகிற இந்த அற்புத தருணத்தை நம்மிடம் பக்குவப்படுத்தி அழகுபடுத்தி சீர்படுத்தி நமக்கு கொடுக்கிற முதல் மரியாதை தான் இந்த மஞ்சள் நீராட்டு விழா என்கிறது நம் கலாச்சாரம்.

இன்றைய தலைமுறையினர் இந்த கலாச்சாரத்தை ஒதுக்கி வைத்தாலும் இதற்கான அறிவியல் ரீதியான காரணங்களும் இல்லாமல் இல்லை. இப்போதெல்லாம் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் பக்குவம் கூட சமயங்களில் பெற்றவர்களுக்கு இருப்பதில்லை.கலாச்சாரம் எப்படி முக்கியம் என்று நினைக்கிறோமோ அதே அளவுக்கு குழந்தைகளிடத்தில் எதையுமே திணிக்க கூடாது என்பதை கலாச்சாரத்தின் வழியில் இருந்தே அழகியலாய் பதிவு செய்கிறது ’மஞ்சள் நீராட்டுவிழா’என்னும் இந்த குறும்படம். சன் தொலைக்காட்சி தொடரான ’வாணிராணி’யில் நடிக்கும் குழந்தை நட்சத்திரமான ’நேஹா’ இந்த குறும்படத்தில் பள்ளி மாணவியாக மீனாட்சி என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மீனாட்சி படிப்பிலும் குறும்பிலும் படுசுட்டி. அப்பா அம்மா பாட்டி என அத்தனை பேரின் அரவணைப்பிலும் கிராமத்து சூழலில் வளருகிறாள் மீனாட்சி.ஆனாலும் மீனாட்சி படிப்பில் படு சுட்டி என்பதால் தனக்கு ஐபாட் வேண்டுமென்று அப்பாவிடம் கேட்கிறாள்.ஆனால் அம்மாவோ இதற்கு 2 பவுன் நகை வாங்கலாம் என்று சொல்லி மறுப்பதாக கதை நகர்கிறது.அப்பாவுக்கும் பாட்டிக்கும் செல்லமான மீனாட்சி ஒரு நாள் காலையில் எழுந்திருக்கும் போதே வயிற்று வலியுடன் எழுகிறாள்.

மீனாட்சியின் அம்மா அவள் புத்தகப்பையை எதார்த்தமாக திறக்க அதில் மீனாட்சி மறைத்து வைத்திருந்த நாப்கினைப் பார்த்து அதிர்ச்சி ஆகிறாள். ’’எல்லாம் நீங்க கொடுத்த செல்லம் தான்...வயசுக்கு வந்ததை கூட மறச்சிருக்கா பாரு ...’’என அம்மா மீனாட்சியின் அப்பாவிடம் முறையிட,’’ஆமா...இதைப் பத்தி சொன்னா படிப்பை நிறுத்திட்டு கல்யாணத்தைப் பண்ணிடுவேன்னு நீதானே சொன்னே..’’என்று பதிலுக்கு பாட்டி சொல்ல...அதை தொடர்ந்து சமூகத்தை கேள்விகளால் அறைகிறது வசனங்கள்.தனக்கு சடங்கு செய்யாமல் போனதால் ஊரார் தன்னை ராசியில்லாதவள் என சொன்னதை காரணம் காட்டி தன் மகளுக்கும் சடங்கு செய்ய வேண்டும் என அடம்பிடிக்கும் அம்மா, மகள் வேண்டாம் என்று மறுத்தும் கட்டாயமாக அவளை தென்னை ஓலை குடிசைக்குள் உட்கார வைக்கிறார்.சில நாட்களில் மீனாட்சிக்கு ஊரார் உறவினர் முன்னிலையில் ’மஞ்சள் நீராட்டு விழா’நடத்த ஏற்பாடு நடக்கிறது.ஆனால் அதே நாளில் பள்ளியில் கலை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.மீனாட்சி அன்று தன் பங்களிப்பாக பிரசண்டேஷன் செய்ய தயாராகிக் கொண்டிருந்தாள்.ஆனால் அம்மாவோ பள்ளிக்குப் போக கூடாது என தடை விதிக்க ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறாள் மீனாட்சி.ஆனால் மீனாட்சியின் பாட்டி சொல்லும் அறிவுரையால் மீனாட்சி கையாண்ட விதம் தான் யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸ். ஊரார் உறவினர்கள் சூழ மீனாட்சிக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்ய அவளை அழைத்து வருகிறார்கள்.எதிர்பாராத திருப்பமாக மீனாட்சியின் பள்ளி தலைமை ஆசிரியர் அந்த விழாவுக்கு வந்து மாணவியால் பள்ளிக்கு வர முடியாத காரணத்தால், தான் அந்த பிரசண்டேஷனை நேரில் வந்து பார்வையிட வந்ததாக சொல்கிறார்.மீனாட்சியின் தந்தை செய்த இந்த ஏற்பாட்டால் அத்தனை பேரின் மத்தியில் அவள் அழகாய் ’கோலம்’ குறித்து தனது தொகுப்பை பதிவு செய்கிறாள்.அதைப்பார்த்து எல்லோரும் மகிழும் தருணம் அவளோ இன்னொரு விஷயத்தை போட்டு உடைக்கிறாள்.’நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது..எனக்கு விருப்பமில்லாததை யாரும் திணிக்க முடியாது..அதே நேரத்துல என்னோட முதல் கூகுள் என் பாட்டி தான். எனக்கு இந்த அறிவை கொடுத்தது என் அம்மா தான்.அவங்க அறியாமை ஒவ்வொண்னும் தான் என்னை புத்திசாலியா மாத்துச்சு.அவங்களுக்கு நான் மரியாதை செய்ய விரும்புறேன்...இந்த விழா எனக்காக இல்ல..இது என் அம்மாவுக்காக’’ன்னு சொல்லி மீனாட்சி அம்மாவுக்கு இதுவரை நிறைவேறாத மஞ்சள் நீராட்டுவிழா சடங்கை செய்து வைப்பது கதைக்கு கூடுதல் பலம்.

முத்தாய்ப்பாய் மீனாட்சிக்கு அவள் ஆசைப்பட்ட ஐபாடை வாங்கி மீனாட்சியின் அம்மா அன்பளிப்பாய் கொடுக்கும் போது தாய்க்கும் மகளுக்குமான உறவுச்சங்கிலி மேலும் இறுக்கமாகிறது.கலாச்சாரங்கள் உறவை எப்போதும் ஒருங்கிணைப்பதற்காகவே..அதை வேண்டும் என்று திணிக்கவோ வேண்டாமென்று அவமதித்து கேலி பேசுவதோ தேவையில்லாதது.இரு வேறு கருத்துக்களையும் மனப்பூர்வமாய் யாரையும் காயப்படுத்தாமல் ஏற்றுக் கொள்வது நம் பொறுப்பு என அழகாய் பதிவு செய்கிறது இந்த குறும்படம். இதன் இயக்குநர் கமல்சேது பேசும் போது, ’’ வயதுக்கு வந்ததை வெளியில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்கள்...தனக்கு கொஞ்சமும் பிடிக்காத தாவணியை உடுத்திக் கொள்ள சொல்வார்கள் என வயதுக்கு வந்ததையே பெண்கள் சிலர் வீட்டில் சொல்லாமல் மறைப்பதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.இன்று கிராமங்களில் கூட இந்த மஞ்சள் நீராட்டு விழா சடங்கை பலரும் புறக்கணிக்க தொடங்கியிருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இந்த விழா எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விட பெண்களுக்கு அந்த நேரத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிகமிக முக்கியம்.அதே நேரத்தில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு பெண்களிடத்தில் இருக்கிறதோ அதே அளவுக்கு அதை முதன்முதலாக பார்த்த போது பயந்து அழுத பெண்களும் இருக்கிறார்கள்.அவர்கள் மீனாட்சியை பார்க்கும் போது நிச்சயம் தைரியம் அடைவார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் மீனாட்சி பச்சை ஓலை எதுக்கு என்று கேட்க குளிர்ச்சி தேவைப்படும்...அதுக்குதான் என பாட்டி சொல்ல...அதுக்கு தான் எசி இருக்கே என மீனாட்சி சொல்வாள்...இது போல பால் முட்டை நல்லெண்ணெய் இதெல்லாம் எதுக்கு என்று கேட்க உடம்புக்கு வலு சேக்க தான்னு பாட்டி சொல்ல அப்ப சைவம் சாப்பிடறவங்க சத்தில்லாம இருப்பாங்களான்னு இவ சொல்லுவா...இப்படி பல கேள்விகளை அடுக்கும் இந்த குறும்படம் பெண்களுக்கு பிரியமான வகையில் இருக்கும்.இந்த படத்தில் நானாக எந்த மெசேஜையும் திணித்திருக்க மாட்டேன்..அது பார்ப்பவர்களின் மனநிலையைப் பொறுத்தது’’என்னும் கமல்சேது இதற்கு முன் இயக்கி இருக்கும் ‘ரோட் சைட் அம்பானீஸ்’என்னும் குறும்படம் நார்வே திரைப்படவிழாவில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த குறும்படம் யூடியூபில் வெளியான சில தினங்களில்....பார்வையாளர்கள் பலரை ஈர்த்துள்ளது.

 -பொன்.விமலா -

மஞ்சள் நீராட்டுவிழா குறும்படத்தைக் காண: 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close