Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகுபலி சாதனைகள் படைத்தது எப்படி? விரிவான அலசல்

ன் பாகுபலி சாதனை படைத்தது? ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி நடிப்பில் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் , ரம்யா கிருஷ்ணன், நாசர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாகி இந்தியாவின் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது  ‘பாகுபலி’.  இந்தப்படத்திற்கு எல்லாத் தரப்பு மக்களிடமும் பாராட்டுகளும், நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. ஒரு படம் இந்த அளவிற்கு கொண்டாடப்பட காரணம் என்ன? இதே போல் ‘காக்கா முட்டை’ படத்தையும் மக்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட படங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன, சாதாரண மனித வாழ்வினை எதார்த்தமான கட்டமைப்பில் காட்டும் படங்களும் ஹிட்டடித்துதான் வருகின்றன.இதிலிருந்து மக்களின் ரசனை ஒன்று தான் என்பது புலப்படுகிறது. நல்ல படைப்புகளுக்கு கண்டிப்பாக தக்க மரியாதை கிடைக்கும். சரி பாகுபலியைக் காண்போம்.

இயக்குநரின் கதை சொல்லும் திறன்

நம் மனித இனத்தின் வழக்கம் தூங்கப்போகும் போது கதைகள் கேட்பது. மேலை நாடுகளில் ‘பெட் டைம் ஸ்டோரீஸ்’ எனில் நம்மூரில் பாட்டி சொல்லும் கதைகள். அப்படி இருக்கையில் முதலில் நல்ல கதை சொல்லும் இயக்குநர்கள் அதிக அளவில் கவுரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ராஜமௌலி நல்ல கதையை அழகாகச் சொல்லிவிட்டார்.

சரியான காட்சியமைப்பு, அதிலும் இந்தியர்களை கவரும் செண்டிமெண்ட், அதே சமயம் ஒரு கேரக்டருக்கு சரியான நடிகர்கள் தேர்வு. மகேஷ் பாபு, ராம் சரண் இவர்களெல்லாம் தமிழுக்கும் , இந்திக்கும் கூட அதிகம் பழக்கமானவர்கள். ராஜமௌலி நினைத்திருந்தால் அவர்களில் யாரையேனும் பயன்படுத்தி இருக்கலாம், ஆனால் இல்லை. காரணம் நடிகருக்காக கதையில்லை, கதைக்காகவே நடிகன் என்பதில் ராஜமௌலி மிக தெளிவாக இருந்திருக்கிறார். மேலும் தனது படம் மூலம் தற்போது பிரபாஸ், ராணா ஆகியோரையும் மற்ற மொழிகளுக்கு நெருக்கமாக்கியதில் அவருக்கு தனி வெற்றி என்றே கூற வேண்டும்.

உருவாக்கம்:

சரியான தொழில்நுட்பகலைஞர்கள். எந்த காட்சியிலும் இதற்கு ஏன் இவ்வளவு செலவு, எனக் காரணம் கேட்க முடியாத அளவிற்கு காட்சியமைப்பு. ஒவ்வொரு காட்சியின் அமைப்பிலும் அதன் செலவும், காரணமும் கண்கூடாக தெரியச் செய்தவிதம். மேலும் இந்தப் படத்தின் வேலைகளை சாதாரண அமெரிக்க படங்களோடு ஒப்பிடுவதைக் காட்டிலும், இயக்குநர் டேவிட் லீனுடன் ஒப்பிடலாம். இவரது லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்தின் படப்பிடிப்பை 18 மாதங்கள் நடத்தியுள்ளார். கொஞ்சம் சிந்தித்தால் அந்தப் படத்திற்கு எடுத்துக்கொண்ட கால அளவைக் காட்டிலும் இது இன்னும் அதிகமே.

  • ஒரு முழு வருட தயாரிப்புமுன்னோட்டம்
  • 25 ஓவியர்கள் வரைந்த 15,000 கதைக்கள வரைபடங்கள்
  • 380 நாட்கள் படப்பிடிப்பு 3 வருடங்கள் உருவாக்கம்.
  • ஆயிரங்களில் உடைகள், மற்றும் ஆயுதங்கள்.

மேலும் இதில் படத்தின் 45 நிமிட போர்க்   காட்சி, முடிந்து அடுத்த பாகத்திற்கு கொடுத்த சஸ்பென்ஸ். கண்டிப்பாக மக்களை ‘ஹைய்யோ! ஏன்? எதுக்கு?...என கேள்விகளுடன் அடுத்த பாகம் எப்போது என கேட்க செய்த புத்திசாலித்தனம் என்றே கூற வேண்டும்.

காட்சியமைப்பு:

பல நல்ல கதைகள் மக்களிடம் வரவேற்பு பெறாமல் போவதற்கு சரியான காட்சியமைப்பு இல்லாமையும்  ஒரு காரணம். பாகுபலியில் முதலில் இடங்களின் தேர்வு, கர்னூல் , அதிரப்பில்லி அருவி, ரமோஜி ஃபிலிம் ஸ்டூடியோவில் போடப்பட்ட பிரம்மாண்ட செட்டுகள். இதைத் தாண்டி ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமார் அவரது குழுவின் ஒளியமைப்பு. கடைசி வரை படத்தை கவித்துவமாகவும், கதைத்துவமாகவும் காட்டிய விதம்.உதாரணத்திற்கு சில இடங்களில் உண்மையான இடங்களையும் சில இடங்களில் நம்மையும் மயக்கும் மாயத் தோற்றத்தையும் கலந்து காண்பித்த விதம். அருவியை எடுத்துக் கொள்வோம், சில இடங்களில் கண்ணாடி பிம்பம் கொடுத்து மிகைப்படுத்திக் காட்டிய அதே அருவியை , சில இடங்களில் அப்படியே காட்சிப்படுத்தி நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டனர் என்றே சொல்லவேண்டும். மேலும் படம் குறித்து ராஜமௌலி பேசுகையில் மாகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டதாகக் கூறினார். ஆனால் சில இடங்களில் ஹெர்குல்ஸ், ஜான்சி ராணி, போன்ற பாத்திரங்களை இன்ஸிபிரேஷனாக ராஜமௌலி எடுத்துக்கொண்டதும் கண்கூடாகவே தெரிகிறது.

கதை கேட்டு கதை சொல்லும் பழக்கம் உடைய மனித இனத்தில் ஒரு படம் வெற்றியடைய ஒரு இயக்குநருக்கு முதலில் கதையை சரியாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். நம்மில் பலருக்கும் ஒரு கதையைக் கேட்கும் போதே அதைக் காட்சியாக சித்தரித்துப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பார்வையாளனின் காட்சியமைப்பை மிஞ்சி கதையைக் காட்சியாக காட்டும் இயக்குநர்களால் மட்டுமே ஒரு நல்ல சினிமாவைத் தர முடியும். அந்த வகையில் பாகுபலி பார்வையாளனின் அறிவையும் மிஞ்சி வெற்றி பெற்றுள்ளது. ஒரு இளவரசனை கையில் கொண்டு வரும் பெண், இதுதான் ‘பாகுபலியின்’ துவக்கம். இது சாதாரண கதைத் துவக்கம், ஆனால் அந்தப் பெண் சாகும் தருவாயிலும் அந்த இளவரசனைக் காப்பாற்றிக் கொண்டுவந்த பெண் என்பதே இயக்குநர் சொல்லும் கதை. அந்தப் பெண்ணாக வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு துவக்கத்தில் கொடுத்த காட்சிதான் அழகான இரு நாயகிகளான அனுஷ்கா , தமன்னா கேரக்டர்களைத் தாண்டி இவர் யார் என்ற கேள்வியை நம்மில் புகுத்தியது. இந்த வித்யாசம் தான் ராஜமௌலிக்கு கிடைத்த வெற்றி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close