Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராக்கெட் நாயகனுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்!

அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா என நடிகர் விவேக் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர்  வலைத்தளத்தில், "இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு. என்னுடைய துக்கத்தை வார்த்தைகளால் எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.

அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்; எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! 

மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து, மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம் அய்யாவின் பிறந்த தினத்தை 'இந்திய மாணவர் தினம்' அறிவித்தால் என்ன?'' எனக் கூறியுள்ளார்.

அப்துல் கலாம் மறைவு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை.

இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது.

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்டபோது வல்லரசுகளெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழிவழி கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல் கலாம்.

அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை.  நாற்பது பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்றும் அதைத் தன் தலையில் சூடிக்கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர். தூங்கிக் காண்பதல்லை கனவு; உங்களைத் தூங்க விடாததே கனவு என்று லட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர்.

தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர்.
அவர் பிரம்மச்சாரிதான், ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச் செல்வம்தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து.

தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதிவைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.
அப்துல் கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டேயிருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்.
கண்ணீரோடு வணங்குகிறான் அய்யா உங்கள் வைரமுத்து.

பாரதி ராஜா கூறியதாவது;

இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம். ஆழ்ந்த வருத்தங்களுடன் பாரதிராஜா.

கவி நடையில் சிவகுமாரின் இரங்கல் செய்தி:

உண்மை, நேர்மை, திறமை,
கடும் உழைப்பு , நாட்டுப்பற்று
இருந்தால்
ஒருவன் எந்த குக்கிராமத்தில்
பிறந்தாலும்
எவ்வளவு ஏழையாகப்
பிறந்தாலும்
எந்த மதத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும்
நாட்டில் உயர்ந்த பதவியைப்
பெற முடியும்.
உன்னத நிலையை
அடைய முடியும்
என்பதற்கு உதாரணமாக
வாழ்ந்தவர்
டாக்டர் அப்துல்கலாம்.
பதவியில் இருந்த போதும்
பதவியில் இல்லாத போதும்
உலக மக்களால் ஒன்றுபோல்
நேசிக்கப் பட்ட மகான் !
இளைஞர்களின் உந்து சக்தியாக
இறுதி மூச்சு வரை வாழ்ந்த
அற்புத மனிதர்!

டி.ராஜேந்தரின் இரங்கல் செய்தி:

இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று வேரறுந்து வீழ்ந்து விட்டது...
இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்டிய ஒளி விளக்கொன்று உடைந்து விட்டது...
அறிவு பெட்டகத்தை சுமந்த அப்துல்கலாம் எனும்
அற்புதக் கலம் காலக் கடலில் தன் பயணத்தை நிறுத்திவிட்டது...
நம்மையெல்லாம் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டது..
மேகாலயாவில் மாணவர்களிடையே பேசும்போது...
மேல்வானின் கேக ஆலயா அவரை அழைத்து விட்டது..
நம்மையெல்லாம் சோக ஆலயாவில் நுழைத்துவிட்டது
சொல்லால் வேண்டுமானால் அவர் முன்னாள் ஜனாதிபதி
செயலால் இந்தியர்கள் இதயத்தில் என்றுமே அவர் அழியா அதிபதி
அவரது மறைவு இந்திய நாட்டுக்கே ஈடு கட்ட முடியாத இழப்பு
குடியரசு தலைவராய் அவர் ஆற்றிய தொண்டு நம் நெஞ்சை விட்டு நீங்காது
காலம் உள்ள வரை அவர் புகழ் மங்காது
என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close