Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளியானதா வேதாளம் படக் காட்சி? இணையவாசிகளைக் கண்டு மிரளும் சினிமாக்காரர்கள்

 ஒரு பெரிய பட்ஜெட் படமோ, அல்லது பெரிய ஹீரோக்கள் படமோ எனில் இயக்குநர்களும் , படக்குழுவும் ரகசியங்களைக் காப்பது  இணைய உலகுக்கு பயந்தே. திடீரென இன்று அஜித்தின் வேதாளம் படக் காட்சிகள் இணையத்தில் வெளியானதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனையடுத்து படத்திற்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் அப்படி ஏதும் நடக்கவில்லை என உறுதியாகியுள்ளது.இதுமட்டுமின்றி புலி படத்தின் டீஸரும் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் பரவியது நாமறிந்ததே. இதை விஜய்யும் குழந்தை பிறக்கும் முன் கருவை அறுப்பதற்குச் சமம் என வருத்தப்பட்டார்.

இந்நிலையில் மலையாள இயக்குநர் , தயாரிப்பாளர், எழுத்தாளர், மற்றும் நடிகர் என பன்முகங்கள் கொண்ட பாலச்சந்திர மேனன் சமூகவலை வாசிகளை சாடியுள்ளார். சமீபகாலங்களாக சமூகவலை வாசிகள் சினிமாக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறார்கள். படம் குறித்து கருத்து சொல்வது சரி ஆனால் படத்தைப் பார்க்காமலேயே படம் குறித்து விமர்சனங்களும் , கருத்துகளும் பரப்புவது முறையா? ஒரு படத்திற்கான சரியான ரிசல்ட் இப்போதெல்லாம் சமூக வலைகளில் கிடைப்பதில்லை. மேலும் அடிப்படையான சினிமா தொழில் நுட்பங்கள் கூட தெரியாமல் ஒரு படத்தை விமர்சிப்பது எப்படி முறையாகும் எனக் கேட்டுள்ளார்.

இதேபோல் தான் ஒரு நாள் கூத்து படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் நம் சினிமா விகடன் எடுத்த பேட்டியின் போதும், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் ஃப்ரெஷராக அமரும் ஒரு இளைஞனால் எப்படி ஒரு படத்தை தொழில்நுட்ப ரீதியாக அலசி ஆராய்ந்து விமர்சனம் கொடுக்க முடியும். விமர்சனங்கள் எழுத ஒரு முறை இருக்கிறது. இலக்கியம் இருக்கிறது, நிறைய அனுபவங்கள் வேண்டும். சினிமா பார்ப்பதை ஒரு தவமாக நினைப்பவரால் மட்டுமே நல்ல விமர்சனங்கள் கொடுக்க முடியும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமா பிரச்னை ஒரு படத்தின் பெயர் என்பது அப்படத்தின் முதல் முகவரி. ஆனால் அந்தத் தலைப்பு வெளியானால் அதைக் கூட விமர்சித்து இணையத்தில் ட்ரெண்டாக்குகிறார்கள். ரசிகர்களின் சண்டைகளும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. நம்மூரின் விஜய் , அஜித்தின் ரசிகர்கள் ,ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான்  ரசிகர்கள் மோகன்லால் மம்மூட்டி, இப்படிச் சொல்லிக்கோண்டே போகலாம். இவர்களின் சண்டையை உண்மையில் வெளிநாடு வாழ் மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி இவர்கள் சண்டைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

மேலும் இவர்கள் சண்டை ஒரு தனி நபரின் சொந்த வாழ்க்கையில் இடையூறையல்லவா ஏற்படுத்தும். அதிலும் தகாத வார்த்தையில் சம்மந்தப்பட்ட நடிகர், நடிகரின் குடும்பம், ஏன் ரசிகர்களான அவர்களின் குடும்பம் என எதையும் விட்டு வைப்பதில்லை இந்தப் புண்ணியவான்கள்.திட்டுவதற்காக வார்த்தை என்றால் அவர்களின் அம்மாக்களை முறைகேடாக திட்டுவதே முதல் ஆரம்பம்.உண்மையில் இவர்கள் தங்களது தாயை மதிப்பவர்கள் தானா என்ற ஐயமே உருவாகிறது. 

உண்மையில் ஒரு நடிகரின் ரசிகர்கள் என்றால் மற்ற நடிகரின் நடிப்பை வேண்டுமானால் விமர்சிக்கலாம். ஆனால் சொந்த வாழ்க்கை குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை என அபிஷேக் பச்சனும் தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு பதிலடி கொடுத்தார்.

அதே போல் ஹீரோயின்களின் புகைப்படங்களுக்கு கீழே பணத்திற்காக உடலைக் காட்டுவோர் போன்ற வார்த்தைகளைப் பிரயோகித்து அவரும் ஒரு மனிதர் என்பதைத் தாண்டி இவர்களின் பேச்சுகள் உருவாகிவிட்டன.

ஒரு பிரபல நடிகை ஒருவரிடம் சமீபத்தில் இதுகுறித்து கேட்கையில் அவர் சொன்ன பதில்கள், ஏன் இவர்களது ஹீரோ சிக்ஸ் பேக் காண்பித்து நிற்கையில் அதே ஆபாசம் இல்லையா. அதென்ன பெண்கள் காட்டினால் ஆபாசம் , ஆண்கள் காட்டினால் கம்பீரம். சரி இவர்கள் பொய்யான கணக்கில் இருந்து இப்படி பேசினால் கூட ஒப்புக்கொள்ளலாம், ஆனால் தங்களது சொந்தக் கணக்கிலேயே இப்படி பேசுகையில் அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள். இல்லை அவர்களும் இப்படித்தான் தன் வீட்டு பெண்களையே இளக்காரமாக நினைப்பார்களா. உடனே எங்கள் வீட்டுப் பெண்களை இப்படி செய்ய விட மாட்டோம் என்பார்கள்.

திறமை இருக்கும் பெண்கள் அவரவருக்குத் தகுந்தபடி சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் தான் தெரியும் இவர்களது தங்கைகளே இவர்களது பேச்சைக் கேட்காமல் தான் இருப்பார்கள். ஏன் இவர்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே சரி என்று தானே சொல்லுவார்கள். சரி நான் கேட்கிறேன் இவர்கள் திட்டும் ஹீரோயின்கள் இல்லாமல் படங்கள் வெளியானால் முதலில் இவர்கள் பார்ப்பார்களா என்பதே ஒரே கேள்வி.யோசியுங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் சினிமா, சினிமாக்காரர்களின் வேலை குறித்து கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால் சொந்த வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தனி மனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் போக்கு என கொஞ்சம் காட்டமாகவே பேசினார்.இப்போது கூட என் பெயரை வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள் என்ன என்னையும் இதே பாணியில் தான் கழுவி ஊற்றுவார்கள். பழகிவிட்டது என வருத்தமும் அடைந்தார் அந்த சம்மந்தப்பட்ட நடிகை. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close