Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கில்லி’ விஜய் சிலருக்கு ஏன் ‘கிலி’ கொடுக்கிறார் தெரியுமா?

விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியாகி டிசம்பர் 4-ந் தேதியோடு 23 வருடங்களாகிறது. இப்போதைய டிரெண்டுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்... விஜய்! ஆக, இந்த வாரம் முழுக்க ‘விஜய்-23’ கொண்டாட்டம்.  #vijay23

விஜய் தனது இரண்டாவது படத்தில் நடித்த போது “இந்தப் பையனை எல்லாம் யார்யா நடிக்கக் கூட்டிட்டு வந்தது?” என ஒரு நடன இயக்குநர் பலர் முன்னிலையிலும் கோபத்தில் திட்டினாராம். இன்று விஜய்க்கும் நடனத்திற்கும் இருக்கும்கெமிஸ்ட்ரி பற்றி நாம் எதுவும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுதான் விஜய். அவரது கடின உழைப்பிற்கு இது ஒருசோறு பதம். கடந்த 23 வருடங்களில் ஒவ்வொரு படத்திலும் தன் உழைப்பின் அடர்த்தியை, அனுபவத்தை அடுத்தடுத்ததளத்துக்குக் கொண்டு செல்பவர் விஜய். அவருடைய 23 வருடப் பயணத்தில் சில மைல்கற்களைப் பார்ப்போமா…!?

அறிமுக நாயகன்

விஜயின் 58 படங்களை 5 வகையாகப் பிரிக்கலாம். முதலாவது தனக்கென ஒரு பாதை இல்லாது வெறும் நடிப்பு ஆசையை மட்டுமே வைத்துக்கொண்டு நடித்த ஆரம்பக்காலப் படங்கள்.அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார்.அதை விட்டுவிடலாம்.

சாப்ட் அன்ட் சிம்பிள் ஹீரோ

அவரது 9வது படம் பூவே உனக்காக இரண்டாம் வகை.குடும்பச் செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை,துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.

ரோம்-காம் ஹீரோ

அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றித் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல்,மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு எனத் தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள்.இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்குப் போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள். தனதுபாதையைச் சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி மூன்றாம் வகை. உடைகள், நடனம்,பாடி லேங்ஜுவேஜ் எனச் சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன் என ’ஏ’ செண்டர் படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பானஓப்பனிங் கண்ட அந்தத் திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா”. குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி ரோமான்டிக் காமெடி மற்றும் காதல் படங்களில் பட்டையைக் கிளப்பினார்.

திருமலை போட்ட அதிரடிப்பாதை 

மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாகத் தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன்,வசீகரா, புதிய கீதை எனத் தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்புப் பின்னர்ப் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் விஸ்வரூபமெடுத்து நிற்க,கூடவே நந்தா, மெளனம் பேசியது எனப் பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க எனச் சிக்சர் நொறுக்கி மஸ்து காட்டினார். 2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலீஸாக நடித்த ஆஞ்சநேயா,. தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா.இவர்கள் ஒரு பக்கம். தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குநரான ரமணாவை மட்டுமே நம்பி ’திருமலை’ எனக் களமிறங்கினார் விஜய்.  கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அடுத்தச் சூப்பர்ஸ்டார் போட்டிக்கு நாமினேட்ஆகியிருந்த நான்கு பேரும் மோதின நாள் அன்று. ஆனால் விஜயின் மாஸ் என்றால், என்னவென்று தமிழ் சினிமா உணர்ந்த தருணம் அது. ஏன்… விஜய்யும் கூட! ’பிதாமகன்’ க்ளாஸிக் அந்தஸ்துடன் தேசிய விருது பெற்றாலும், பல படங்களுக்குப்பிறகு விஜய்யின் ‘திருமலை’ திரைஅரங்குகளில் நின்று விளையாடியது. தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்குத்தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் விஜய். திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில்புகழ் பெற்ற ஒரு வசனம்

“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”

கதைக்கான நாயகன்

விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்திருந்தது. திருமலை,நான்காம் வகை. அதன்வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில்போய்க் கொண்டிருந்தார் விஜய். ’இங்கே ஒரு பள்ளம் இருக்கணுமே’ என்பது போலச் சில சங்கடங்கள். குருவி, வில்லு என மெகா தோல்விகள். ’வேட்டைக்காரன்’ சற்றே ஆறுதளிக்க, ’சுறா’ வந்து சூறையாடியது. மீண்டும் ஒரு மந்தம். மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம். அதன் பிறகுதான் கதைக்கும், நடிப்புக்கும் சரிசம முக்கியத்துவமுள்ள, ஹீரோவிற்கான படங்களை தவிர்த்து கதைக்கான ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டார். ஸ்டார் இயக்குனர்களுடன் கைகோர்த்தார். காவலன், நண்பன், துப்பாக்கி, கத்தி என மீண்டும் வெற்றிஊர்வலத்தை நட த்தி வருகிறார். இந்தப் படங்கள் ஐந்தாம் வகை!

இதுவரை விஜய் நடித்த எல்லா ஜானர்களிலும் அவரைப் போல ஹிட் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. அதே சமயம், ‘தான்என்ன செய்தாலும் தன்னை ரசிப்பார்கள்’ என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ் அவருக்கு எப்போதும் கிடையாது. தான் ஒரு“சாக்லேட் பாய்” இல்லை என்பது விஜய்க்கு தெரியும். தனது நிறை குறைகளை நன்றாக அறிந்தவர் என்பதால்தான்காலத்திற்கேற்ற, தனக்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சில கணக்குகள் தவறினாலும், விஜயின் கிராஃப்அவர் முடிவு சரி என்பதையே காட்டுகிறது. பிறந்த குழந்தை முதல் தாத்தாக்கள் வரை ரசிகர்கள்கொண்ட விஜய்க்கு,இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதில் சில தவறுகள் நேரலாம். ஆனால்அவர்களைத் திருப்திப்படுத்த என்றுமே விஜய் தவறியதில்லை. தன் தவறுகளை சரியான நேரத்தில் உணர்ந்து திருத்திக்கொள்வதால்தான்  எப்போதும் வெற்றி என்கிற விஷயத்தில் விஜய் நிஜமாகவே “கில்லி”!

- சிவ நாராயணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close