Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவார்ட் வாங்கும் அடுத்த தமிழன்!

MPSE பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

MPSE (Motion Pictures Sound Editors)

ஒரு படத்தின் ஒரு காட்சி, வண்டலூர் ஜூ அருகில் படமாக்கப்படுகிறது. சரணாலயத்துக்கு அருகே ஒரு வீட்டில் நாயகன் நாயகியைச் சந்திக்கிற காட்சி என்றால், ‘கூப்பிடுடா சவுண்ட் இஞ்சினியரை’ என்பார் இயக்குநர்.' லொகேஷனுக்கு உங்க ஆளை அனுப்புங்க' என்பார்.

அவர் சென்று அந்த இடத்தைச் சுற்றி நடக்கும் ஒலிகளைப் பதிவு செய்து கொள்வார். பிறகு டப்பிங்கில், அந்தக் காட்சியில் தேவையான ஒலிகளை எடிட் செய்து சேர்ப்பார்.

உதாரணத்திற்கு, சரணாலயத்தில் பறவைகள் ஒலி கேட்பதைக் காட்சியில் கேட்கலாம். திரையில் பறவைகள் இருக்காவிட்டாலும், ‘வண்டலூர்ல நடக்கற சீன்’ என்பதைப் பார்வையாளனுக்கு உணரவைக்கும், இந்தத் தொழில்நுட்பம்.

“தமிழ்ல எந்தப் படமும் லைவா ஸ்பாட்ல ரெக்கார்டிங் நடக்கறதில்ல. மணிரத்னம் மட்டும் அப்பப்ப பண்ணுவார். கன்னத்தில் முத்தமிட்டால், ஓகே கண்மணியெல்லாம் அப்டி பண்ணப்பட்டதுதான்” என்கிறார் சவுண்ட் இஞ்சினியர் சம்பத் ஆழ்வார்.

யார் இந்த சம்பத் ஆழ்வார்?

டீஷர்ட் போட்டிருந்தாலும் சரி, காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்த வருட பெஸ்ட் சவுண்ட் எடிட்டிங்கிற்காக லாஸ் ஏஞ்சலிஸில் 63வது Golden Reel Award விருதுக்குப் பரிந்துரைக்குப் போயிருக்கும் இரண்டு படங்களின், சவுண்ட் இஞ்சினியர்தான் சம்பத் ஆழ்வார்.

"ஒரு காட்சி எங்க நடந்தாலும் சரி, ‘இடது பக்கம் ஏர்போர்ட் இருக்கு, வலது பக்கம் ரயில்வே ஸ்டேஷன் இருக்கு’-ங்கறத நாங்க சவுண்ட் இஞ்சினியரிங் மூலமாவே கொண்டுவந்து, ரசிகனை நம்ப வைக்க முடியும்” என்கிற சம்பத் ஆழ்வார் பணியாற்றிய Unfreedom சிறந்த சவுண்ட் டிசைனுக்கான Feature Film பிரிவிலும், India's Daughter, சிறந்த சவுண்ட் டிசைனுக்கான Documentary பிரிவிலும் தேர்வாகி இருக்கிறது. வருகிற ஃபிப்ரவரி இறுதியில் லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கவிருக்கும் விழாவுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருப்பவரை, அலைபேசியில் பிடித்தோம்.

“வாழ்த்துகள் பாஸ்..! சென்னையிலிருந்து ஹாலிவுட் பட சவுண்ட் இஞ்சினியரிங் சான்ஸ். இந்த டிராவல் பத்திச் சொல்லுங்களேன்”

“சின்ன வயசுல அப்பா கூலி வேலை. அம்மா பாய் பின்ற வேலைக்குத்தான் போய்ட்டிருந்தாங்க.. ப்ளஸ் ஒன்-ல தொழிற்கல்வி ரேடியோ & டெலிவிஷன் சேர்ந்தேன். ப்ளஸ் டூ படிக்கறப்ப, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பெஸ்ட் ஆடியோக்ராஃபி நேஷனல் அவார்ட் வாங்கின A.S. லக்‌ஷ்மி நாராயணன் சாரோட இண்டர்வ்யூ ஒரு ரேடியோல கேட்டேன். அப்ப முடிவு பண்ணினேன். இதான் என் இலக்குன்னு. 2005ல் சென்னை DFT முடிச்சு, மும்பை போய்ட்டேன். பிக் பாஸ் மாதிரி டெலிவிஷன் ஷோக்களில் சவுண்ட் இஞ்சியனராக வேலை செஞ்சேன். அதற்குப் பிறகு, டெல்லில ஒரு நியூஸ் சேனலில் வேலை செஞ்சேன். அதுக்கப்பறம் 2010ல பஹ்ரைன்ல ஃபார்முலா ஒன், ஃபுட்பால் மேட்ச் மாதிரியான நிகழ்ச்சிகள்ல சவுண்ட் இஞ்சினியரிங்க் பண்ணீட்டிருந்தேன்”.

“இந்த வேலைதான்னு முடிவு பண்ணினப்பறம் அது சம்பந்தமா மட்டும்தான் வேலை செஞ்சீங்க. இல்லயா?”

“ஆமா. அதுமட்டுமில்லாம, ட்வெல்த் முடிச்ச அப்பறம் ஃப்லிம் இன்ஸ்ட்யூட்ல சீட் கிடைக்காதப்பகூட, இதை விட்ரக்கூடாதுன்னு ரிச்சி ஸ்ட்ரீட்ல ஸ்பீக்கர் காயில் கட்றது மாதிரியான வேலைகளைத்தான் செஞ்சேன்.”

“ஸ்பீக்கர் காய்ல் கட்ன மெக்கானிக், மும்பைல ரசூல் பூக்குட்டியோட சவுண்ட் ஸ்டுடியோல சேர்ந்தது எப்ப?”

”ரசூல் பூக்குட்டி 2009ல ஆஸ்கர் அவார்ட் வாங்கினதை  நியூஸ் சேனல்ல வொர்க் பண்றப்ப, நான்தான் சவுண்ட் இஞ்சினியரா கவர் பண்ணினேன். அப்பறம் அவரை ஃபேஸ்புக்ல காண்டாக்ட் பண்ணினேன். ஒரு வருஷத்துக்கு அப்பறம்தான், பேசவே முடிஞ்சது. ‘பஹ்ரைன் வேலையெல்லாம் விடாத. அதுலயே இரு’ன்னார். நான்  கேட்காம, ரெண்டு வருஷம் கழிச்சு வேலையை விட்டுட்டு 2012 மார்ச்ல நேர்ல போய்ட்டேன். திட்டினார். ஆனாலும் அவரோட Canaries Post Sound ஸ்டுடியோவில் சவுண்ட் எடிட்டரா சேர்த்துகிட்டார்”.

‘அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ணின அனுபவம்?”

“மொதல்ல ஹிந்திப் படத்துல லொகேஷன்ல போட்டுவிட்டார். லொகேஷன் சவுண்ட்னா என்னான்னு தெரிஞ்சுக்கோன்னார். அப்பறம் ரெண்டு மூணு ஹிந்திப்படங்கள்னு போய், கோச்சடையான் வரைக்கும் வந்துச்சு”

“ஹாலிவுட் எண்ட்ரி?”

“அதும் ரசூல் சார் மூலமாத்தான். அங்கிருந்து சவுண்ட் இஞ்சினிரியங்னு தேடி இங்க வர்றப்ப ஆஸ்கர் அவார்ட் வாங்கின டெக்னிஷியன்னு, ரசூலைத் தேடி வருவாங்க. அப்படி வந்தப்ப, ரசூல் Unfreedom, India's Daughter ரெண்டையும் எனக்கு வாய்ப்பு குடுத்தார். அதுவும் India's Daughter படம் டெல்லி நிர்பயா சம்பவத்தை அடிப்படையா வெச்சு எடுத்தது. எனக்கு டெல்லில வொர்க் பண்ணின பழக்கம் இருக்கறதால, ‘இவருக்கு டெல்லி ஜியாக்ரஃபிகலா நல்லாவே தெரியும்’ன்னு அதையும் எங்கிட்ட குடுத்தார் ரசூல். அவரோட வழிகாட்டுதல் படி, அந்தப் படம் ஃபுல்லாவே சவுண்ட் இஞ்சினியரிங், எடிட்டிங் எல்லாமே நாந்தான் பண்ணினேன். அது முடிஞ்சு ‘தமாஷா’ இந்திப் படத்துக்காக ஃப்ரான்ஸ் போக வேண்டிருந்ததால 18 நாள் இரவு பகலா அந்தப் படத்தை முடிச்சோம். புனேல இருக்கற வொய்ஃபைக் கூடப் போய்ப் பார்க்க நேரமில்ல”

”இந்த MPSE (Motion Picture and Sound Editor)க்கு கோலிவுட்ல எந்த அளவு ரீச்?”

“தமிழ்ப்படங்கள்ல இதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறதா தெரியல. டப்பிங்தான் பெரும்பாலும். லொகேஷன்லயே ரிகார்ட் பண்றது ரொம்ப அபூர்வம். அவ்ளவா எக்ஸ்போஸ் ஆகல. ஆனாலும் கொஞ்சம் பண்ணீட்டிருக்காங்க. லக்‌ஷ்மி நாராயணன், உதயகுமார், ராஜூ கிருஷ்ணன்னு சில பேர் இருக்காங்க. சவுண்ட் இஞ்சினியர்ஸ் பத்தி பேப்பர்ல இப்பதான் வருது கொஞ்சம் கொஞ்சமா”

முடிக்கும் முன் கேட்டேன்,

“ஜெயங்கொண்டம் சொந்த ஊரு. படிச்சதெல்லாம் சென்னை,. அப்பறம் மும்பை, டெல்லி.பஹ்ரைன், வேலை விஷயமா ப்ரான்ஸ்.. இன்னும் ஏதாச்சும் ஊர் இருக்கா?”

“இருக்குங்க. என் வொய்ஃப் மஞ்சுளா,  சொந்த ஊர் கர்நாடகா. இண்டர்நெட் சாட்டிங் காதல், கல்யாணத்துல  முடிஞ்சது. டெல்லி, புனேன்னு சாஃப்ட்வேர் இஞ்சினியர் ப்ரொஃபஷன்ல இருந்தவங்க இப்ப மும்பைல வீட்ல இருந்தே வேலையும் செஞ்சுட்டு, பையன் யஷ்மித் கூடவும் பிஸியா இருக்காங்க.  அவங்கதான் நான் இந்த அளவுக்கு வரக் காரணமே. அவங்க உந்துதல் இல்லைன்னா நான் இப்ப ரிச்சி ஸ்ட்ரீட்ல மெக்கானிக்காதான் இருந்திருப்பேன்”

“கர்னாடகா, புனே.. சரி! ஆந்த்ரா, கேரளாதான் மிஸ் ஆகுது”

“வீட்ல தெலுங்குதான் பேசுவோம். எங்க பாஸ் ரசூல் பூக்குட்டி, கேரளாக்காரர். இப்ப ஓகேவா?”

சிரித்துவிட்டு, அவார்ட் கைல வந்தப்பறம், இன்னொரு பேட்டிக்கு நேரில் சந்திக்கறோம் என்று சொல்லி வாழ்த்தினேன்.


-பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close