Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விழாக்களுக்கு நடிகைகள் சேலையில்தான் வரவேண்டும்- கட்டளை போட்ட தயாரிப்பாளர்

இர்ஃபான், தீக்‌ஷிதா, ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி. மகேந்திரன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ஆகம். இப்படத்திற்கான இசை வெளியிட்டுவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசும்போது, "என்னைப் பேச அழைக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெண்மணி நடிகர் என்று சொல்லி அழைத்தார் . அது தப்பில்லை . நான் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன் . தியாக பூமி உள்ளிட்ட மாபெரும் படங்களை இயக்கிய கே.சுப்பிரமணியம் இயக்கிய - நேரு பற்றிய - ஒரு சிறு படத்தில் நான் நடித்தேன் . அப்போது என் வயது எட்டு . படத்தில் ஒரு காட்சியில் நேருவாக நடிப்பவரின் கையை நான் பிடித்துக் கொண்டு நடக்க, அடுத்து ஓர் ஐந்து வயது சிறுமி,  என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் .

இந்தக் காட்சியைப் பார்த்த என் ஆத்தா (அம்மா) , 'என்ன இவன்... இந்த வயசுலேயே பொம்பளப் புள்ள கையைப் பிடிச்சுகிட்டு நடக்குறான். இனிமே இவன நடிக்க விடக் கூடாது'ன்னு சொல்லிருச்சு. அப்புறம் நடிக்க விடவே இல்ல . என்னை மட்டும் என் ஆத்தா நடிக்க விட்டிருந்தா நான் பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் போட்டியா வந்திருப்பேன்.  அப்புறம் தியேட்டர் ஆரம்பிச்சேன் . பட விநியோகம் பண்ணினேன் . படம் தயாரிக்க ஆரம்பிச்சேன் . இப்போ கூட ஒரு படம் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன்.

என்கிட்டே நாலு தியேட்டர் இருக்கு . ஒவ்வொரு படமும் ரெண்டு வாரம் ஓடினாலே எனக்கு ஒரு தியேட்டருக்கு வருஷம் 26 படம் வேணும் . நாலு தியேட்டருக்கும் 104 படம் வேணும் . அதனால்தான் என் தியேட்டருக்கு படத்துக்கு வர்ற டிக்கெட் புக் பண்றவங்களுக்கு கார் வசதியும் அதுக்குரிய சார்ஜ் வாங்கிட்டு பண்ணித் தர்றேன் .

இப்படிப்பட்ட நிலையில் ஆகம் மாதிரி படங்கள் நல்லா ஓடினா அது பல வெற்றிப் படங்களை உருவாக்க வழி செய்து கொடுக்கும் இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா சினிமா தொழிலுக்கு வந்துட்டா அப்புறம் அந்தத்  தொழிலை விட்டுப் போக யாருக்கும் மனசு வராது .

இந்தப் படங்கள்ல பல புதுமுகங்களும் நடிச்சு இருக்காங்க. அவங்க எல்லாம் ஜெயிக்கணும்னா  இந்தப் படம் நல்லா ஓடணும் .  இந்த நேரத்துல ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன் . இந்தப் படத்துல நடிச்ச நடிகைகள் எல்லாம் இங்க பேசினாங்க . ஆனா எல்லாரும் ஆங்கிலத்துலேயே பேசறாங்க . அது ஏன் ?  பம்பாய்ல இருந்தும் ஃபாரின்ல இருந்தும் வந்த நடிகைன்னா, தமிழ் தெரியாது அவங்க தமிழ்ல பேசலன்னா  பரவால்ல . ஆனா  தமிழ் தெரிஞ்சவங்களே ஆங்கிலத்துல பேசறீங்களே . அது ஏன் ?

நிகழ்ச்சித் தொகுப்பு பண்ற பொண்ணு எவ்வளவு அழகா சேலை கட்டி வந்திருக்கு . ஆனா நீங்க எல்லாம் எதையோ மாட்டிக்கிட்டு வந்தது ஏன்? சேலை கட்டி வந்தா  என்ன ?

இனியாவது நடிகைகள் நிகழ்ச்சிகளில் தமிழ்ல பேசுங்க "என்றார் .

விகடன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக பாராட்டப்படும் 'ஒரு சிறகு போதும்' என்ற  நூலை எழுதியவரும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தியவருமான டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு கதை எழுதி இயக்கி இருக்கிறார் . இசை விஷால் சந்திர சேகர்,

நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன்

ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது " சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு , சினிமாவில் பணியாற்றிய முன் அனுபவம் இல்லாமல் சினிமா ஆர்வத்தோடு சினிமா எடுக்க வந்த ஒரு குழு என்னை தன் படத்தில் நடிக்க அழைத்தது . அவர்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும் ஆர்வம் பார்த்து நான் ஒத்துழைப்பு கொடுத்தேன் . அவர்களும் அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஓர் அட்டகாசமான திரில் படத்தை கொடுத்து அசத்தினார்கள். ராஜ்பரத் எடுத்த உச்சகட்டம் படம்தான் அது

இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் மற்றும் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு  என்னை அணுகியபோது மீண்டும் உச்சக் கட்டம் படக் குழுவை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது . இப்போது பாடல்கள் மற்றும் முன்னோட்டததைப் பார்க்கும்போது நான் நினைத்தது மிக சரி என்பது புரிகிறது . இந்தப் படம் ஐம்பது நாட்களாவது ஓடும் " என்றார் .

இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் " நானும் பரமக்குடிகாரன்தான். பரமக் குடியில் உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் என் தாத்தா  அப்பா எல்லாரும் வாழ்ந்தனர் .

இந்தியாவின் அறிவை அன்னிய நாடுகள் சுரண்டும் அறிவுத் தீவிரவாதம் பற்றி பேசும் படம் இது .

வெளிநாடு சென்று வாழ்வதுதான் வாழ்க்கை என்று என்னும் ஒரு அண்ணன் . தான் மட்டுமல்ல .. இந்தியாவில் இருந்து யாரும் வெளிநாட்டு வேலைக்குப் போகக் கூடாது என்று என்னும் தம்பி .இவர்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்னை, எப்படி ஒரு நாட்டின் பிரச்னயானது என்பதுதான் இந்தப் படம் .

கதையைக் கேட்ட உடன் படம் தயாரிப்பதற்கான பட்ஜெட் போட்டுக் கொண்டு வந்தார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு. இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகர் சிறப்பான பாடல்கள் மட்டுமல்லாது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார் .

ஒரு மணி நேரம் 57 நிமிடம் ஓடும் இந்தப் படம் ஏராளமான சுவையான திருப்பங்களோடு உங்களை செல் போனை நோண்ட விடாமல் வேடிக்கை பார்க்க விடாமல் கட்டிப் போடும் சீட்டின் நுனியில் உட்கார்ந்து மொத்தப் படத்தையும் பார்ப்பீர்கள் " என்றார்

தயாரிப்பாளர்கள்  கோட்டீஸ்வர ராஜுவும் ஹேமா ராஜுவும்  நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர் ." ஆகம் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. நல்ல கருத்து சொல்கிற வெற்றிப் படங்களை தொடர்ந்து எடுப்போம் " என்றார் கோட்டீஸ்வர ராஜூ.

படக் குழுவை விஜி சந்தோசம் வாழ்த்தினார் .நிகழ்ச்சியில் இர்பான், ஜெயப்பிரகாஷ், தீக்சிதா, ரியாஸ் கான் , ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலரும் பேசினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close