Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் அருகில் நான், நானேதான் - ஒரு ரசிகையின் நெகிழ்ச்சித் தருணம்

ப்போது நான் கல்லூரியில் படித்த வேளை.... கல்லூரிப் படிப்பு அப்படியே மாலையில் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்திக்குப் பின் குரல் மற்றும் ஸ்க்ரிப்ட் எழுதும் பணி... கல்லூரி முடிந்தவுடன் வேலை துவங்கிவிடும். மதுரை பெரியார் நிலையத்திலிருந்து செனாய் நகரில் உள்ள சேனலுக்கு வந்து வேலை செய்வேன். செய்திகள் எழுதிய பிறகு எனக்கு பிரதான வேலை அங்கே இருக்கும் நண்பர்களிடம் அஜித் பாடல்களைப் போடும்படி கூறி பார்த்து ரசித்துக் கொண்டிருந்து விட்டு கிளம்புவேன்.

பள்ளி நாட்களில் வாசலில் இருக்கும் கடையில் அஜித் படங்கள், அஜித் புகைப்படம் போட்ட நோட்டுப் புத்தகங்கள் என எங்கும் எதிலும் அஜித். அப்படியிருந்த எனக்கு, நான் கேட்டவுடன் அஜித் பாடல்கள் வருவது எவ்வளவு பெரிய பாக்கியம் என்னும் தோரணையில் என் தோழிகளிடம் பாடல்களைக் கேட்டு அதையும் போடும்படி கூறி கல்லூரியில் பெரிய ஆளாகச் சுற்றி வந்தேன்.

அப்போதுதான் எனக்கு ஒரு வாய்ப்பு அஜித்தின் படத்திற்கு கும்பலாக நிற்க பெண்கள் கூட்டம் தேவை என என் நண்பர்கள் மூலம் வாய்ப்பு, ஒரே நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விஷால் பட ஷூட்டிங்கில் ஹீரோயினுக்கு தோழியாக படம் முழுவதும் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. நமக்கு சினிமாவில் நடிப்பதெல்லாம் ஆசையோ, கனவோ இல்லை என்பதால் வேண்டாம் என நிராகரித்து விட்டேன். ஆனால் அஜித்தைப் பார்க்கலாம் என்ற ஒற்றைக் கனவோடு மேனேஜர் காட்டிய பஸ்ஸில் எனது நண்பர்கள் என் அம்மா... அம்மாவா என யோசிக்காதீர்கள் எனது தோழிகளில் எனக்கு முதல் தோழி என் அம்மா தான். சினிமா என்பதால் பாதுகாப்புக்காக துணைக்கு வந்தார். என் அம்மாவும் அஜித் ரசிகை என்பது வேறு சங்கதி.

காரைக்குடியில் ஒரு பெயர் தெரியாத கோவில்,என் கண்களின் ஓட்டம் அஜித் இருக்கிறார் என சொல்லப்பட்ட வேன் மீது தான் இருந்தது. என் தோழிகள், நண்பர்களிடம் எங்கப்பா அஜித் என்றால் அவர்களும் என்னைப் போலவே காத்திருக்கிறார்கள். ஒருவன் மட்டும் ஓடி வந்தான் ”நான் பார்த்துட்டேன். பார்த்துட்டேன்” என்றான், அஜித் இறங்கி வேனுக்குள் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். ஆர்வம் இன்னும் உச்சம் தொட்டது.

ஆர்வம் மிகுதியில் நின்றுகொண்டிருந்த எங்களை ஒருவர் நோட்டில் கணக்கெடுத்து விட்டு என்னை மட்டும் தனியாக பிரித்து இந்தப் பெண்ணை நீங்கள் கூட்டிச் செல்லலாம் எனக் கூற அட நமக்கு தனி ஆக்டிங்கா என “அவனே காதல் மன்னன்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென காரில் ஏறிக்கொள்ளுங்கள் என்றனர் ஒருவர். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என் அம்மா என்னை தனியாக அனுப்ப முன்வரவில்லை. என் நண்பர்கள் இருவரை உடன் அனுப்பினார்கள். அங்கே கருப்பசாமி குத்தகைதாரர் படப்பிடிப்பு அருகிலேயே நடக்க அங்கே எனக்கு ஒரு சின்ன ரோல், ரொம்பச் சின்ன ரோல். ஆனால் என் அஜித் கனவு கரையத் துவங்கி என் தோழி , மற்றும் நண்பனிடம் புலம்ப அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்லும் நிலைக்கு ஆளானார்கள்.

என் அம்மா என்னை விட சிவப்பானவர் என்பதால் அவருக்கு மாமி கெட்டப் கொடுத்து கூட்டத்தில் சேர்த்துவிட்டிருப்பதாக இன்னொரு நண்பரின் மொபைலில் எனக்கு தகவல் வந்தது. இங்கே ஷூட்டிங்கில் தவிப்புடன் நான். 4 மணிக்கு மீண்டும்அம்மா போன், எங்கடி இருக்க நீ பாதுகாப்பா இருக்கியா, நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரி வராது. பிரச்னைனா சொல்லு பசங்க வந்துடுவாங்கன்னு சொன்னாங்க. நான் ஐஸ் க்ரீமுடன் ஏகபோக கவனிப்பில் இருந்தேன். பேக் அப் சொன்னவுடன் மீண்டும் அஜித் பட செட் தலை தெறிக்க ஓடி வந்தோம். எங்கே அஜித் , எங்கே அல்டிமேட் ஸ்டார் என ..ச்சே கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வந்துருக்கக் கூடாது சூப்பரா பேசினாரு, நாங்க போட்டோவெல்லாம் எடுத்தோம் என என் நண்பர்கள் என்னை அழ வைத்தார்கள். என் அம்மாவும் குழந்தை போல் ஷாலினி இங்கே தான் வீடியோ பிளேயரில் பாட்டு கேட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தார் எனக் கதை சொல்ல தூக்கம் போனது.

இதே கதை முதல் இரண்டு நாட்கள். நாங்களும் எவ்வளவோ சீக்கீரம் வந்தும் அஜித்தைக் காண முடியவில்லை. கடைசியில் அங்கே கரண் பட ஷூட்டிங் ஒரு இரண்டு மணிக்கெல்லாம் முடிய காருக்காகக் கூட காத்திராமல் நானும் என் நண்பர்களும் அங்கே சாப்பாடு கொண்டு செல்லும் வேனில் ஏறிக்கொண்டு இந்த செட்டுக்கு வந்து சேர்ந்தோம். முதல் கேள்வி எங்கே அஜித்? என் நண்பர்கள் அப்பாடா வந்து சேர்ந்தியே. உள்ள மேக்கப்ல இருக்காரு என்றனர். பாடல் காட்சி என் அம்மா தோழிகள் எல்லாம் பட்டுச் சேலை, தாவணியில் அஜித்தின் தங்கை என சொல்லப்படும் ஓர் அழகிய பெண்ணின் பின்னால் கையில் தட்டுகளுடன் நின்றிருக்க , கண்கள் அஜித் வரும் பாதையில் இருந்தன.

என் நண்பன் சொன்னான் ஏதோ சாமி படமாம். அஜித் சாமியா நடிக்கிறாராம் என்றான். சாமி படத்தில் அஜித்தா? செட்டாகுமா? கற்பனையில் அஜித்துக்கு பெருமாள் வேடம், கிருஷ்ணர் வேடம் போட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு அமைதி. இயக்குநர் சைலன்ஸ் என்றார். என் நண்பன், ஏய் அஜித் டா என்றான். எனக்கு முயல்குட்டி போல் துள்ள வேண்டும் எனத் தோன்றிய போது அஜித் தாடி, வாயில் வத்திக்குச்சி சகிதமாக வருவாரோ, அல்லது டொக்..டொக் என வாலி கெட்டப்பா என நினைத்துக் கொண்டிருக்கையில் தலையில் குடுமி, இடுப்பில் வெண் பட்டு பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வெளியே வந்தார்.

என்னோட தோழி என்ன உலுக்குறா , ஏய் அஜித் டி.. நீ கேட்டியே , அடியே என அவள் கத்த ஒரு நிமிடம் எடுத்தது எனக்கு சுய நினைவுகள் வர. என் அம்மா அப்படியே அஜித்துக்குப் பின்னால் இருந்து கண்களை விரித்து தலையசைத்து பார்த்தியா என்றார். பல்லெல்லாம் தெரிய சிரித்தேன். எனக்கு அப்படியே பக்க வாட்டில் அப்படி ஒரு செண்ட் வாசனை. திரும்பலாம் என்றால் அஜித்தைக் காணும் நொடிகள் போய் விடுமே என அப்படியே நின்று கொண்டிருந்தேன். இயக்குநர் கட் சொல்லி முடிக்க அஜித் உள்ளே சென்று விட்டார்,. அப்போதுதான் எனக்கு இந்த செண்ட் வாசனை உதயமானது திரும்பினால் எனக்குப் பக்கத்தில் மிகப் பக்கத்தில் ஷாலினி அக்கா. விஜய் ரசிகைகளுக்கு விஜய் அண்ணா என்றால், அஜித் ரசிகைகளுக்கு அஜித் அக்கா கணவர் தான். எங்களுக்கு அஜித்தை அண்ணா என அழைக்க இயற்கையிலேயே வருவதில்லை.

முந்தைய நாட்களில் என் நண்பர்கள் விவரித்ததுபோல், கையில் வீடியோ பிளேயர், அழகான சுடிதார், பட்டுப்போல கூந்தலுடன் ஹாய் என்றார் . நான் ஹல்லோ சொல்ல வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாமல் அப்படியே நிற்க என் நண்பர்கள் மேடம் ஒரு போட்டோ மேடம் என்றவுடன் சிரித்தபடி வாங்க என்றார் என்னை என் தோழி இழுத்துச் சென்று நிறுத்தினாள். அப்போது கொஞ்சம் பெரிய இடத்து வாசிகளிடம் ஆக்கிரமித்திருந்த நோக்கியா 6000ல் (செகன்ட் ஹேன்ட் தான்) போட்டோ க்ளிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் என் நண்பன். அப்போது ஷாலினி திடீரென எங்கேயோ பார்த்து சிரிக்க அங்கே அஜித் கையசைத்து எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்ல இங்கே இருந்து என் நண்பன் கத்தி விட்டான் சார் உங்க கூடவும் ஒரு போட்டோ என்றவுடன் முடிச்சுட்டு வாங்க என்றார். அவ்வளவு தான் இங்கே ஒரு க்ளிக் அங்கே ஒரு க்ளிக் அடித்தோம்.

அஜித் அருகில் நான் என் தோழி என்னைக் கிள்ளிக் கொண்டே இருக்க, கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். அந்தப் புகைப்படங்கள் தொலைந்துவிட்டன.அதில் இருந்த என் நண்பர்கள் பலரும் கூட இப்போ எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனாலும் அந்தத் தருணம் இன்றும் மனதில் படமாகவே இருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்தது ’ஆழ்வார்’ படத்தின் ”பல்லாண்டு பல்லாண்டு” என்ற பாடல் காட்சி படப்பிடிப்பில்.இப்போதும் மறக்க முடியாத பாடலும் கூட...

இப்படிக்கு 

ஒரு மிகச் சாதாரண தல ரசிகை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close