Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் ரசிகர்கள் செய்வது சரியா?

திருவான்மியூர் ஈ.சி.ஆர் ரோடு வழியாகச் சென்றிருக்கிறீர்களா? அங்கே ஆர்.டி.ஓ ஆஃபீஸ் முன்னால் இடதுபுறம் போகிற சாலையில் நேராகப் போனால், பீச்சை நோக்கி போகும். அதில் கொஞ்சம் போய் இடதுபுறம் போனால், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டெலிவரி பாய் கொண்டுவருவாரே அப்படி முழுவதுமாக கவர் செய்யப்பட்ட பார்சல் போல ஒரு வீடு இருக்கும்.

முன்பக்கச் சுவரே 15 அடிக்கு மேல் இருக்கலாம். சாலையில் நின்றுகொண்டு பார்த்தால், வீட்டின் ஒரு இன்ச்கூட தெரியாது. வெறும் காம்பவுண்டும், கேட்டும்தான் தெரியும். அதுவும்போக அந்த வீட்டை, வேறு வீட்டின் மாடிகளிலிருந்துகூட பார்க்க முடியாததுபோல, கவர் செய்யப்பட்டிருக்கும் என்றே சொல்கிறார்கள்.

அப்படி யார் வீடு அது?

அஜித்குமார்!

அஜித். பைக், கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டவர். மெக்கானிக், கார்மெண்ட் எக்ஸ்போர்ட்டில் மெர்ச்சண்டைசர் என்று பல வேலைகளுக்குப் பிறகு, 1990ல் என் வீடு என் கணவர் என்றொரு படத்தில் பள்ளிச் சிறுவன் வேடம். சிற்சில விளம்பரங்கள். குட்டிக்குட்டி நாடகங்கள் என்று போராட்டங்களுக்குப் பிறகு 1993ல் அமராவதியில் ஆரம்பித்த அவர் திரைப்பயணம், வேதாளம் வரை தொடர்ந்து.. அடுத்து என்ன படம் என்றறிவிக்க ரசிகர்கள் ஆவலாய்க் காத்திருக்கிறார்கள்.

இவரது ரசிகர்கள், சாதாரணமானவர்கள் அல்ல. அஜித்தை தங்கள் குடும்பத்தில் ஒருவராய் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தீனா படத்தில் மகாநதி சங்கர் அஜித்தை அழைத்த ‘தல’ இன்றைக்கும், என்றைக்குமாக ரசிகர்கள் அனைவரும் அவரை அழைக்கும் பெயராகிவிட்டது. கத்தி, துப்பாக்கி என்று முருகதாஸின் க்ராஃபை விஜய் படங்கள் தூக்கி நிறுத்தியது என்றால் அஜீத்துக்கு தல என்று வசனம் எழுதி, அவரது ரசிகர்கள் மனதில் இடம்பெற்று விட்டார் முருகதாஸ். தல மட்டும் அல்லாமல் அவரை சொந்த அண்ணனாகவே பாவிக்கும் ரசிகர்கள் இவருக்கு உண்டு.

ஆனால் அஜித், ரசிகர்களை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தனது நாற்பதாவது பிறந்தநாள் விழாவில் 2011, ஏப்ரல் 29 அன்று வெளியிட்ட அறிக்கையில்’ மே1 2011 முதல் அஜித்குமார் நற்பணி இயக்கத்தைக் கலைக்கிறேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ‘என் படங்களை விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு, ரசிகர்களின் குடும்பத்திற்கு இடையூறு இருக்கக்கூடாது’ என்பது உட்பட பலவற்றை விளக்கி அவர் கொடுத்த அறிக்கைக்கு அப்போது பலத்த வரவேற்பு இருந்தது. பலரது மத்தியிலும் அஜித், உயர்ந்து நின்றார்.

ஷாலினியை காதலித்து கரம் பிடித்ததிலும் இவர் பலரைக் கவர்ந்தார். ‘லவ் பண்ணாரு, சொன்னாரு, கல்யாணம் பண்ணிகிட்டார்’ என்று பலரும் மகிழ, 2000-ல் மணந்த அவருக்கு 2008ல் மகளும் (அனோஷ்கா), 2015ல் மகனும் (ஆத்விக்) பிறந்தனர்.

‘உங்க குடும்பம் முக்கியம்’ என்று சொன்ன இவர் குடும்பத்தை விட்டுவைத்தார்களா இவர் ரசிகர்கள் என்றால்.. இல்லை. வீட்டையே முழுவதுமாக மூடி வைத்திருக்கும் அளவுக்கு தனிமை விரும்பியான இவரது மகனுக்கு இன்றைக்கு ஒருவயது நிறைவடைகிறது. ஒருவயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்? தன் அப்பா ஒரு ஸ்டார் என்பதோ, இன்றைக்கு தன் பிறந்தநாள் என்பதேவும்கூட தெரியாது. ஆனால்.. அந்தக் குழ்ந்தைக்கு ஊரெங்கும் போஸ்டர், பேனர் என்று அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

இது என்ன வகையான கலாச்சாரம்? ஐயா.. நீங்கள் ஒரு நடிகனை ரசிக்கிறீர்கள். பாராட்டுகிறீர்கள், பிடிக்கவில்லை என்றால் திட்டுகிறீர்கள் என்பதெல்லாம் சரி. அதற்கு மேல் போய் அவரது குடும்ப உறுப்பினருக்கெல்லாம் கட் அவுட்டும், பூஜையும் என்று எங்கே கொண்டுபோய்க் கொண்டிருக்கிறீர்கள்?  ஒரு நடிகரைப் பற்றி எதாவது திட்டினாலோ, எழுதினாலோ அவரது குடும்பத்தைப் பற்றிச் சொன்னால், ‘குடும்பத்தை இழுக்காதே’ என்கிறோம். மற்றவற்றுக்கெல்லாம் மட்டும் இழுக்கலாமா?


இந்தக் கலாச்சாரம் சிவாஜி காலத்திலேயே இருந்திருக்கிறது. சிவாஜி ரசிகர்கள் பிரபுவைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் எப்போது? 1982ல் சிவாஜியின் 223வது படமான சங்கிலியில் பிரபு நடித்த பிறகுதான். அதற்குமுன்பு வரை, அவர் யாரோ. சங்கிலி’ க்குப் பிறகு பல படங்களில் பிரபு நடித்திருந்தாலும், ‘சூரக்கோட்டை சிஙகக்குட்டி’ என்று சிவாஜியின் ஊர்ப்பெயரில் வர, சிவாஜியை சிங்கமாகப் பாவிக்கும் அவரது ரசிகர்கள் பிரபுவை சிங்கக்குட்டியாகக் கொண்டாடினார்கள்.

ஆனால், ஆத்விக்கின் வயது? ஒன்று. ஒரு வயதிலேயேயா ஒன்றுமறியாத சிறுவனுக்கு கட் அவுட் வைப்பீர்கள்? இதுபற்றி அஜித் ரசிகர் ஒருவரிடம் கேட்டால் அவர் சொல்வது..

“சார்.. நீங்க சொல்றதெல்லாம் சரி. ’தல’க்கு ரசிகர்கள்தாங்க கெத்து. வேற அவருக்கு பேக்ரவுண்ட்லாம் இல்லாம, தானா வந்தவருங்க அவரு’

”அது சரி.. அவரு படத்துக்கு வைங்க.. அவருக்கு வைங்க.. ஒரு வயசுப் பையனுக்கு வைக்கறதெல்லாம்..”

“அந்தப் பையன என் தம்பிமாதிரிதாங்க பார்க்கறேன்”

“உங்க தம்பிக்கு கட் அவுட் வெச்சீங்களா?”

“என் தம்பி பெரிய ஸ்டார் இல்லையேங்க.. அதுனால கேக் மட்டும் வெட்டினோம்”

“ஆத்விக் பெரிய ஸ்டாரா?”

“இல்ல.. ஆனா ஸ்டாரோட பையன்க. நீங்க என்ன கேட்டாலும் சரி.. எங்க ஃபேமலிலயே தலயையும் ஒரு ஆளாத்தான் நெனைக்கறோம். அதுனால இத தப்பால்லாம் நெனைக்கல..”

ப்ரைவசி என்பது எத்தனை முக்கியம், ஒரு பிரபல நடிகராகப்பட்டவர் தனிமைக்காக என்னவெல்லாம் விலைகொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை ரசிகர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி தன் ப்ரைவஸியை விரும்பும் ஒரு நடிகனின் ஒன்றுமறியாத மகன் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பதும், அதற்கு கட் அவுட், அன்னதானம் என்றெல்லாம் அமர்க்களப்படுத்துவதும் சரியா என்று தெரியவில்லை.

அப்பா துணையில்லாமல் தனி ஆளாகவந்தது தான் அஜித்தின் வெற்றி என்று கொண்டாடும் நீங்கள் அஜித்தின் மகன் என்பதற்காக ஆத்விக்கை கொண்டாடுவது எந்த விதத்தில் சரி?

சுயம்புவாக வந்தாலும் சரி, பிறரது ஆதரவில் வந்தாலும் சரி, வாரிசாக வந்தாலும் சரி ஒரு படம் நன்றாக இல்லையென்றால் அவ்வளவுதான். அது பாபாவாகட்டும், புலியாகட்டும். இந்த நிலையில் இன்னமும் அவருக்கு பின்புலமில்லை, ரசிகர்கள் நாங்கள்தான் என்று குழந்தைகளுக்கெல்லாம் கட் அவுட் வைத்துக் கொண்டிருந்தால் மக்கள் முகச்சுளிப்புக்கு ஆளாகத்தான் நேரிடும் என்பதே உண்மை.

பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close