Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier

நேற்று ஒரு வாட்ஸ் அப் இசைக் குழுமத்தில் நண்பர் எடி, ஒரு செய்தியைப் பகிர்ந்தார். படித்ததும் ஒரு நிமிடம் பக்கென்றது. 

“The legendary trumpet player, Frank Dubier who played a stellar role in MSV and Ilaiyaraaja Sir's compositions is no more. Please remember him in your prayers”

அதற்குக் கொஞ்சநேரம் முன்புதான் காரில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தேன். அதில் பல்லவி முடிந்ததும், முதல் இடையிசையில் ஆரம்பிக்கிற ட்ரம்பெட்... Frank Dubierன் கைவண்ணம்.. இல்லையில்லை.. மூச்சு! 

Frank Dubier

உடனே அவரைப் பற்றித் தேடிப் போகத்துவங்கி அந்தப் புகழ்பெற்ற காற்றிசைக்கலைஞனைப்பற்றி தெரிந்துகொண்டேன். எத்தனையெத்தனை அற்புதமான இசையை அள்ளி வழங்கியிருக்கிறார் மனிதர்!

பார்த்த ஞாபகம் இல்லையோ...
அவளுக்கென்ன? அழகிய முகம்...
அனுபவம் புதுமை...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..
பளிங்கினால் ஒரு மாளிகை..

என்று பரபரவென மனதுக்குள் நுழைந்த MSV பாடல்களாகட்டும்..

பேரைச் சொல்லவா..
நினைவோ ஒரு பறவை..
இளமை இதோ.. இதோ
மன்றம் வந்த தென்றலுக்கு
சங்கீத மேகம்..
ஆசை நூறு வகை 
சொர்க்கம் மதுவிலே 

என்று இளையராஜா தந்த,  இதயம் கவர்ந்த பாடல்களாகட்டும்...எத்தனை  பாடல்களை அதன் Interlude எனப்படும் இடையிசைக்காகவே ரசித்திருப்போம் ? 

அதுவும்.. மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் இடையிசையில் ஒலிக்கும் ட்ரம்பெட்டை ரசிக்காமல் அந்தப்பாடலைக் கடக்கவே இயலாது. அதுபோலவேதான் 'சங்கீத மேகம்' பாடலும்! 

இதுபோன்ற அத்தனை பாடல்களிலும் முகம் தெரியாத எத்தனையோ இசைக்கலைஞர்கள் தங்கள் முழு இரசனையையும், திறமையையும் காட்டித்தான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நமக்கு வெளியில் தெரிவதெல்லாம்,  பாடகரின் குரலும், பின்னணி இசையின் அழகும் மட்டுமே! ஆனால், அதில் எத்தனை வாத்தியங்கள்! அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எத்தனை திறமைசாலிகள்! அவர்களின் சுவாசத்தில் இசை எவ்வளவு கலந்திருந்தால், நம்மை கட்டிப்போடும் இசையை, தனது வாத்தியங்களை வருடி, முத்தமிட்டு, மீட்டி நமக்குள் புகுந்திருப்பார்கள்?

அவ்வாறு, இசையமைப்பாளர் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, இம்மி பிசகாமல் வாசிக்கும் கலைஞர்கள்தான் ரசிகனுக்கும், இசையமைப்பாளருக்குமான பாலமாக இருக்கிறார்கள்.

அப்படிப் பாலமாகச் செயல்பட்டு,  மேற்சொன்ன பாடல்களில் தன் முத்திரையைப் பதித்த ட்ரம்பெட் ஜாம்பவான்தான் Frank Dubier. ஜாஸ் இசையை 50களில் சென்னையில் பரவ விட்டவர். 

Trumpetசென்னையின் ஆங்கிலோ இந்தியக் குடும்பம்.  அவரது தாய் ஒரு பியானோ மற்றும் வயலின் கலைஞர். சிறுவன் ஃப்ராங்க் 7 வது வயதில் ட்ரம்ஸ் கற்றுக்கொள்கிறான். பிறகு வயலினில் தேர்ச்சி பெறுகிறான். நாள் செல்லச்செல்ல, அவனது ஆர்வம் காற்றுக்கருவிகளுக்குள் செல்கிறது. முதலில் ட்ரம்பெட்! பிறகு க்ளாரிநெட், சாக்ஸஃபோன், புல்லாங்குழல் என்று வாசிக்கப் பழகி, முழுநேர காற்றுக்கருவிக் கலைஞனாக உலகுக்குத் தெரிய வருகிறான். மெட்ராஸ் கவர்னர் பேண்டில் வாசிக்கத் துவங்குகிறான். பிறகு ஜிம்கானா க்ளப்பில் வாசிக்கிறான்.

அப்போதெல்லாம் திரையிசையில், ஜாஸ் இசைக்க இவர்கள் குழுவைத்தான் நாடுவார்கள். அப்படி நாடப்பட்டு, MS விஸ்வநாதன் இசையில் பல பாடல்களுக்கு கிளாரினெட், ட்ரம்பெட், சாக்ஸஃபோன் வாசித்திருக்கிறார். அப்படி வாசித்த பாடல்கள்தான் மேலே பார்த்தவை!

பிறகு, இளையராஜாவும், இவரும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். பின்னாளில், இளையராஜா இசையமைப்பாளரான பிறகு.. அவரை அழைத்து, தனது பல பாடல்களுக்கு வாசிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். நாம் இன்று ரசித்துக் கேட்கும் பலப்பல பாடல்களின் இடையிசையில் இதயம் தொடுபவர் Frank தான்..!

திரை இசை இசைத்தாலும், அவரது ஜீவனாக இருந்த ஜாஸை கடைசிவரை விடவில்லை அவர்! உலக நாடுகளின் ஜாஸ் குழுமங்களில் ‘ஃப்ராங்க் துபேர்’ மிகப் பிரபலம். பல உலக நாடுகளில் தனிக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தனது பெயரிலேயே ஒரு ஜாஸ் குழுவும் நடத்தியிருக்கிறார்.  பலப்பல மேடைகளில் கச்சேரிகளை அலங்கரித்து, நமது காதுகளையும், தன் காற்றிசையால் அலங்கரித்த ஃப்ராங்க் துபேர் இன்று இல்லை. கடையடைப்பு, சமரசப்பேச்சு, டெல்லி போலீஸ் என்று நீங்கள் பரபரப்பாக நிகழ்ச்சிகளை வாட்ஸப்பில் பரப்பிக்கொண்டிருந்தபோது, அமைதியாக தனது கடைசிக்காற்றைச் சுவாசித்துக் காற்றில் கரைந்து சென்றிருக்கிறார். ஃப்ராங் துபேர் என்ற அந்த மாபெரும் காற்றிசைக் கலைஞன்.

சென்று வாருங்கள் Frank.. உங்கள் இசையோடு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.!

இப்போது… அவருக்காகவே, இன்னுமொருமுறை மேலே பட்டியலிட்ட பாடல்களைக் கேட்பீர்கள்தானே ?

கேளுங்கள்.. Frank பார்த்துக்கொண்டிருக்கிறார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close