Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விஜய் - 61' படத்தின் கதை இதுதானா!? #Vijay61

இயக்குநர் அட்லியுடன் மீண்டும் இணைவது, ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலுவுடன் நடிப்பது, வில்லனாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, மூன்று ஹீரோயின்கள், இயக்குநர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்தின் கதை... இப்படி ஏகப்பட்ட சிறப்புகளுடன் தயாரிப்பில் இருக்கும் விஜய்யின் 61-வது படத்துக்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்தப்படம் எப்படி இருக்கும்? விஜய்-61 சுவாரஸ்யங்கள் சிலவற்றைப் பார்ப்போம்...

விஜய்

விஜயேந்திர பிரசாத்

இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பவர் விஜயேந்திர பிரசாத். இயக்குநர் ராஜமௌலியின் அப்பா. இவர் ‘பாகுபலி 1 மற்றும் 2’ படங்களுக்கு முன்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதி உள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்கள். ராஜமௌலியின் ஒன்றிரண்டு படங்களைத் தவிர ‘சிம்ஹாத்திரி’, ‘சை’, ‘சத்ரபதி’, ‘விக்ரமார்குடு’, ‘யமதொங்கா’, ‘மகதீரா’, ‘ஈகா’... என வரிசையாக வெற்றிபெற்ற அவரின் அனைத்துப் படங்களின் கதையும் விஜயேந்திர பிரசாத்தினுடையதே. 

இவரின் கதைகளில் ஃபேன்டஸிக்கு குறைவிருக்காது. அதேபோல எந்தக் களமாக இருந்தாலும் சென்ட்டிமென்ட்டை தவிர்க்க முடியாத அம்சமாக புகுத்தி இருப்பார். இந்த இரண்டும்தான் விஜயேந்திர பிரசாத்தையும், இயக்குநர் அட்லியையும் இணைக்கும் புள்ளிகள். அதற்கு அட்லியின் முந்தைய இரண்டு படங்களே உதாரணம். அதேபோல ‘விஜய் 61’-ல் பிரமாண்டம், சென்டிமென்ட் இரண்டுக்கும்  குறைவிருக்காது.  

கதை என்ன?

கதை எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு அட்லி கதாபாத்திரத் தேர்விலும் உறுதியாக இருப்பார். ‘விஜய் 61’ பட கதாபாத்திரத் தேர்வை வைத்தே இதன் கதையை ஓரளவு யூகிக்கலாம். படத்தில் விஜய்க்கு காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள். ஒரு விஜய்க்கு எதற்கு மூன்று ஹீரோயின்கள்? இவர்களில் நித்யா மேனன் கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டது ஜோதிகா. இந்தத் தலைமுறை ஹீரோயின்கள் பலர் இருக்க, சீனியர் ஹீரோயினான ஜோதிகாவை ஃபிக்ஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன? அதேபோல காஜல், சமந்தா இருவருமே இன்றைய முன்னணி ஹீரோயின்கள். தங்களுக்குப் படம் முழுவதும் வரும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே இவர்கள் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். 

விஜய்

இவற்றை வைத்துப் பார்க்கும்போது படத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்களாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. இதில் சீனியர் விஜய்க்கு சின்ன போர்ஷனாக இருந்தாலும் ஹோம்லியான நடிக்க ஸ்கோப் உள்ள நடிகை வேண்டும் என்பதால்தான் நித்யாமேனனை தேர்ந்தெடுத்து உள்ளனர். ரெஃபரன்ஸ், ‘24’ படம். சீனியர் விஜய் வில்லனால் கொல்லப்பட அவரின் மகன்கள் சந்தர்ப்ப சூழலால் பிரிந்து வாழ்கிறார்கள். ராஜஸ்தான், ஐரோப்பா, சென்னை, மதுரை... என ‘விஜய் 61’ படப்பிடிப்பு திட்டமிடலை வைத்து பார்க்கையில் ஒரு விஜய் மதுரையில் பக்கா லோக்கலாகவும் இன்னொரு விஜய், பயங்கர ஸ்டைலிஷா ஐரோப்பாவிலும் வளர்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து அப்பாவை கொன்ற வில்லனைப் பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. இந்தக் கதை எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? ஆமாம், அதேதான்! அட்லியின் முந்தைய இரண்டு படங்களை வைத்து யோசிக்கையில் இப்படித்தான் இருக்கவேண்டும் என யூகிக்க தோன்றுகிறது. 

நடிகர்கள்

இந்தப்படத்தில் உள்ள பல நடிகர்களுக்கு இது விஜய் காம்பினேஷனில் மூன்றாவது படம். ‘தலைவா’, ‘நண்பன்’ படங்களைத் தொடர்ந்து சத்யராஜ்-விஜய் காம்பினேஷனுக்கு இது மூன்றாவது படம். ‘குஷி’, ‘நண்பன்’ படங்களைத் தொடர்ந்து விஜய்-எஸ்.ஜே.சூர்யா காம்பினேஷனுக்கும் இது மூன்றாவது படம். ‘கத்தி’, ‘தெறி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - சமந்தா, ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’வைத் தொடர்ந்து விஜய்-காஜல் அகர்வால், ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் என இந்த விஜய் அண்ட் கோ காம்பினேஷன்களுக்கு இது மூன்றாவது படம். இவர்களைத் தவிர வடிவேலு, கோவை சரளா, சத்யன், மொட்டை ராஜேந்திரன்... என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.  

விஜய்

தயாரிப்பாளர் என்ன சொல்கிறார்?

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமியிடம் பேசினேன். அவர் பேசியதில் இருந்து...

கதை, களம்

‘‘இது பெரிய பட்ஜெட் என்பதைத் தாண்டி இது கதையாகவே பெரிய படம். ஸ்கிரிப்டில் அவ்வளவு ஸ்ட்ராங்கான விஷயங்கள் உள்ளன. ராஜஸ்தானில் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் நடந்திருக்கிறது. இன்னும் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. சென்னை, மதுரை ஷெட்யூலும் உண்டு. ஃபாரினுக்கும் போகிறது டீம். இப்படி பல இடங்களில் நடக்கும் படம். இன்றைய சமூகத்தில் நடிக்கும் பல பிரச்னைகள் பற்றி பேசக்கூடிய ஸ்கிரிப்ட். மொத்தம் 140 நாள்கள் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் முடிந்துவிட்டது. பெரிய இடைவெளி எதுவும் இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. பல ரிஸ்கியான ஃபைட் சீன்களில், ‘டூப் போடாமல் நானே பண்றேன்’ என்று சொல்லி விஜய் சார் அவ்வளவு ஆர்வமாக நடித்துக்கொண்டு இருக்கிறார். 

இசை

படத்தில் மொத்தம் 5 பாடல்கள். அதில் ரஹ்மான் சார் 2 பாடல்களை கொடுத்து விட்டார். ‘விஜய் சார் ஒரு பாடல் பாடுகிறார்’ என்று ஒரு தகவல் வந்தது. அதுபற்றி ரஹ்மான் சார், விஜய் சார், டைரக்டர் மூவரும் சேர்ந்து பேசிட்டு முடிவு பண்ணுவார்கள். 

விஜய்

தலைப்பு

ரஜினி சாரின் ‘மூன்று முகம்’ படத் தலைப்பை வைப்பதாக செய்திகள் வருகிறது. ஆனால் தலைப்பைப் பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. என்ன தலைப்பு என்று பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

ரிலீஸ்

விஜய் சாரின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்டில் ஆடியோ ரிலீஸ். அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி அன்று படம் ரிலீஸ். ஒரு படம் ஒரு வருடத்துக்குமேல் ஓடியது, அதிக வசூல், ரசிகர்கள்... இந்த விஷயங்களை எல்லாம் வைத்து பார்க்கையில் இந்தப்படம்... எப்படி ராமராஜனுக்கு ‘கரகாட்டக்காரன்’ எப்படியோ, பிரபு சாருக்கு ‘சின்னத்தம்பி’ எப்படியோ, ரஜினி சாருக்கு ‘சந்திரமுகி’ எப்படியோ அப்படி இந்தப்படம் விஜய் சாருக்கும் அமையும். இதை நான் பட்ஜெட்டை மனதில் வைத்து சொல்லவில்லை. ஸ்கிரிப்ட்டை மனதில் வைத்துச் சொல்கிறேன். நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்கும் படமாக இது இருக்கும்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close