Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதை பஞ்சாயத்து... பிக் பாஸில் இருந்து முமைத்கான் வெளியேற்றம்! - என்ன நடக்கிறது?

போதைப் பொருள்கள் பயன்படுத்தியது தொடர்பாக, தெலங்கானா போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தெலுங்கு சினிமாவின் முக்கியப் பிரபலங்களுக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பியிருப்பது, தெலுங்கு சினிமா திரையுலகப் பிரபலங்களுக்குத் திகில் கிளப்பியிருக்கிறது. தெலுங்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை முமைத்கான், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணைக்காக 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். என்ன நடக்கிறது?

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு :

தெலுங்கு சினிமாவின் முன்ணனி தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சில நாள்களுக்கு முன்பாக, 'தெலுங்கு சினிமா நடிகர்கள் சில போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களால், தெலுங்கு சினிமா துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும்.' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆந்திராவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பான புகார்கள் வர, இந்த விஷயத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்த ஆரம்பித்தது காவல்துறை. சினிமா பிரபலங்களை உள்ளடக்கிய இந்த போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்தார்கள். 

சிக்கிய நபர்கள் :

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் மற்றும் பிரெண்டன் பென் ஆகிய இருவர் பிடிபடவே, இருவரையும் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தியது போலீஸ். கெல்வின் மற்றும் பென் இருவருடைய மொபைலில் இருந்த போன் கால் ஹிஸ்ட்ரி, வாட்ஸ்அப் மற்றும் மெசேஜ் சாட்டிங்கை ஆராய்ந்தது போலீஸ். இதில், தெலுங்கு சினிமாவின் முக்கிய சினிமா பிரபலங்கள் பலரும் இவர்களுடைய தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது. கெல்வின் மற்றும் பென் இருவரும் ஹைதராபாத்திற்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்து, உள்ளூர் தரகர்கள் மூலமாக தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.  இவர்களிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது போலீஸ். 

தெலுங்கு சினிமாவும் போதைப் பொருள் விவகாரமும் 2017

மேலும் சிலர் : 

கெல்வின் மற்றும் பென் இருவர் மட்டுமல்லாது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவிரமாக இயங்கத் தொடங்கிய சில நாள்களில் நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேலும் சில நபர்களை டி.ஜி.பி லிம்பா ரெட்டி தலைமையிலான குழு கைது செய்து விசாரணை நடத்தியது. அவர்களிடம் இருந்து 300 கிராம் கோகைன், ஒரு கார், மேலும் சில போதைப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் ஆந்திராவில் உள்ள முக்கியமான பப் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் விசிட் அடித்து, அங்குள்ள தரகர்கள் மூலமாக சினிமா பிரபலங்களின் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தெரியவந்தது. தவிர, ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இவர்கள் போதைப் பொருட்களை சப்ளை செய்துள்ளனர்.

விசாரணை :

கெல்வின் மற்றும் பிடிபட்ட மற்ற நபர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில், அவரோடு தொடர்பில் இருந்த மற்றும் போதைப் பொருட்கள் வாங்கிய தெலுங்கு சினிமா பிரபலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஜூலை 19 முதல் 27-ஆம் தேதி வரை... போலீஸாரின் பட்டியலில் உள்ள தெலுங்கு சினிமா பிரபலங்கள் அனைவரையும் விசாரணை செய்ய காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பிரபலங்களின் பட்டியல் :  

முன்னணி தெலுங்கு நடிகர் ரவிதேஜா, தருண், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், காமெடி நடிகர் சுப்பா ராஜூ, ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, பாடகி கீதா மதூரியின் கணவர் நந்து, தனிஷ், இளம் நடிகர்கள் தனிஷ், 'அறிந்தும் அறியாமலும்' நவ்தீப், நடிகை சார்மி, முமைத்கான் மற்றும் பல நடிகர், நடிகைகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட சில தேதிகளில் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சில பிரபலங்கள் தங்களுக்குப் பதிலாக தங்களுடைய வழக்கறிஞர் மூலமாக விசாரணை நடைபெறவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை காவல்துறை அதிகாரிகள் நிராகரித்திருக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவும் போதைப் பொருள் விவகாரமும் 2017

ஆதாரம் என்ன? 

தவிர, விசாரிக்கப்பட்டுள்ள மற்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள தெலுங்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் 100 சதவீதம் கிடைக்கவில்லை. இதுவரை விசாரிக்கப்பட்ட, இனி விசாரிக்கப்பட இருக்கிற பிரபலங்கள் சொல்லும் தகவல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் இந்த விவகாரத்திற்கான அடுத்த மூவ்மெண்ட் என்ன என்பது தெரியவரும். 

பிரபலங்களின் கருத்து :

இந்தப் பிரச்னையில் சிக்கியுள்ள தெலுங்கு சினிமா பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக, மற்றும் உறவினர்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். விசாரணை முடிந்து திரும்பியிருக்கும் காமெடி நடிகர் சுப்பா ராஜூ, அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், தனக்கும் இந்த போதைப் பொருள் கும்பலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். 

சார்மி நல்ல பொண்ணு!

கெல்வினுக்கும் நடிகை சார்மிக்கும் தொடர்பு இருப்பதாக சார்மியை போலீஸ் விசாரித்திருக்கிறது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட இயக்குநர் பூரி ஜெகன்நாத், 'என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, தகுந்த பதிலை நான் தெரிவித்திருக்கிறேன். நான் போதைப் பொருட்கள் பயன்படுத்துபவன் அல்ல' எனத் தெரிவித்திருப்பதோடு, நடிகை சார்மிக்கு ஆதரவான கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார். சார்மியின் தந்தை தீப் சிங்கும், இந்த விவகாரத்தில் அடும் அதிருப்தியில் இருக்கிறார். 'இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததுல சார்மி மனம் உடைந்து போயிட்டா. என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும். 13 வயதில் இருந்து சார்மி குடும்பத்திற்காக சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். கடின உழைப்பாளி அவள். இந்த சம்பவத்துக்கும் சார்மிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கருத்து தெரிவித்திருக்கிறார், சார்மியின் தந்தை.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து முமைத்கான் வெளியேற்றம் : 

பட்டியலிடப்பட்ட தெலுங்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் கடந்த சில தினங்களாக காவல்துறையின் விசாரணைக்குத் தொடர்ந்து அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த போதைப் பொருள் விவகாரத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை முமைத்கானும் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகவேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்.

தெலுங்கு சினிமாவும் போதைப் பொருள் விவகாரமும் 2017

குற்றவாளிகளா பிரபலங்கள்? 

இந்த விவகாரத்தில் காவல்துறை தெலுங்கு சினிமா பிரபலங்களைக் குற்றவாளிகள் போல நடத்துவதாகத் தனது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார், இயக்குநர் ராம் கோபால் வர்மா. சில தெலுங்கு சினிமா அமைப்புகளும் 'இது தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் விசாரணை' எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தவிர, விசாரணைக்கு அழைக்கப்பட்ட பிரபலங்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்தது தொடர்பான தகவல்களுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது. 

காரணங்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை! 

ஒவ்வொரு பிரபலமும் பல மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கூறும் தகவல்களைக் கேட்கும் போலீஸ் அதிகாரிகள், தேவைப்பட்டால் உண்மையைக் கண்டறியும் சோதனை நடந்தவும் தீவிரமாக இருக்கிறார்களாம். ஏனெனில், 'தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காரணம் இல்லாமல் எந்த ஒரு சினிமா பிரபலத்தையும் நாங்கள் விசாரணைக்கு அழைக்கவில்லை!' என்கிறார்கள், விசாரணையை நடத்திக்கொண்டிருக்கும் சிறப்புக் குழுவின் அதிகாரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close