Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலோ... சென்னை, ஏ.ஜி.எஸ் தியேட்டர் நிர்வாகத்தின் கவனத்துக்கு...! - ஒரு வாசகரின் அனுபவம்

தி.நகர் ஜி.என். செட்டி ரோட்டில் புஹாரி ஹோட்டலுக்கு அருகில் இருக்கிறது AGS தியேட்டர். தியேட்டர் ஆரம்பித்து ஒருமாதம்கூட ஆகவில்லை.


சென்னையின் கடினமான டிராஃபிக்கில் ஊர்ந்து சென்று, நரசிம்மன் சாலை AGS நுழைவாயிலில் திருமலை ஓபனிங் சீன் விஜய் போல போஸ் கொடுத்து நின்றால் அந்த கேட் கீப்பர் ‘அப்டிக்கா போ.. அந்தாண்ட இருக்து உள்ள போற வழி’ என்று படு பாந்தமாக வழி காட்டுகிறார். லெஃப்ட் எடுத்து ஜி.என். செட்டி ரோட்டில் ஐம்பது அடி போய், உள்ளே போக பைக்கை முறுக்கினால், சொய்ங்ங்ங்ங் என்று நுழைவாயிலின் குறுக்கே விழுகிறார் இன்னொரு செக்யூரிட்டி.

“ன்னா?”

“படத்துக்குப் போகணும். வேறென்ன?”

“பைக் ஸ்டாண்ட் அந்த ரோட்ல இருக்கு. நிறுத்தீட்டு வா” 

அவர் காட்டிய அந்த ரோடு, OUT நுழைவாயில் இருக்கும் நரசிம்மன் சாலைதான். ‘அங்க பாக்கலியே’ என்று குழப்பமாக பைக்கை திருப்பினால், போகவும் முடியாது என்று புரிந்தது. ஒருவழிப்பாதை. நைஸாக, வலதுபுறமாகவே மெதுவாக பைக்கை செலுத்தி நரசிம்மன் சாலையில் போய்க்கொண்டே இருக்க முன்னூறு அடிகள் தாண்டி TWO WHEELER PARKING - AGS THEATRE என்று அறிவிப்புப் பலகை சொல்லியது.

வெற்று மணல் மைதானம். மேலே வானம். மழையோ, வெயிலோ உங்கள் ரதம் பாழ்படுவது நிச்சயம். ‘வேற வழி?’ என்று நிறுத்திவிட்டு வருகையில் கையில் பையுடன் இரண்டு சக்கர வாகன நுழைவுச் சீட்டை நீட்டுகிறார் ஊழியர்.


ஐம்பது ரூபாயை நீட்டி “சாரிங்க. சில்லறை இல்லை” என்றேன்.


அவர் வாங்கி உள்ளே போட்டுவிட்டு, அடுத்த ஆள் நோக்கித் திரும்ப, ‘ஏம்ப்பா.. பாக்கி?” என்றேன்.


“ன்னா பாக்கி? சீட்டைப் பாக்கலியா?” என்றார். அதில் அழகாக ஐம்பது ரூபாய் என அச்சிடப்பட்டிருந்தது.


வெத்து மணல்ல, வெயில்ல நிறுத்தறதுக்கு அம்பது ரூபாயா?’ என்று ரட்சகன் நாகார்ஜூன்போல கை நரம்புகள் புடைக்க, ‘வேணாம்டா. டேமேஜ் ஒனக்குத்தான் ஆகும்’ என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிக் கொண்டு...

“ரெண்டு பைக்குக்கு ஒரே சீட்டு போட்டுட்டீங்களா?” எனக் கேட்டேன்.

“ஒரு பைக்குக்குத்தான்” என்றார். கூட இருந்த சிலரும் அதிருப்தி தெரிவித்தனர். ‘மண்ணுல, அதும் காய்ற வெயில்ல இப்டி அநாதையா நிறுத்தறதுக்கு அம்பது ரூவா ஓவர்ங்க’ என்றார் இன்னொரு வாடிக்கையாளர். ‘அதுக்கு நாங்க ஒண்ணும் பண்ண முடியாது’ என்றார் தியேட்டர் ஊழியர். அவரைச் சொல்லியும் குற்றமில்லை என்று நினைத்தவாறே, ‘சரிங்க.. உங்க மேனேஜ்மெண்ட்ல சொல்லுங்க’ என்றுவிட்டு தியேட்டர் நோக்கி நடந்தோம்.

அங்கிருந்து தியேட்டர் வரை நடந்த களைப்பிற்கே ஒருலிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டி வந்தது. போய் டிக்கெட்டை மாற்றி, மேலே போக முற்பட்டால் இன்னொரு ஊழியர் தடுத்தார்.

“ஷோ டைம் ஆகல. நீங்க வெய்ட் பண்ணணும்”


எங்க வெய்ட் பண்ணணும் என்று பார்த்தால், அங்கேயே நின்று கொண்டு ‘ஜெய் ஜெய் விட்டலா’ என்று பாடச்சொல்லுவார்கள் போல. அப்படி நின்று கொண்டே இருக்கத்தான் வேண்டுமாம். அமர்வதற்கென்று ஓர் இடம் இல்லை. கொஞ்சம் உள்ளே போகவிட்டால் படியிலாவது அமரலாம். ம்ஹும். அதெல்லாம் முடியாது என்று அம்மா கார் வரும் வழியில் நிற்கும் டிராஃபிக் கான்ஸ்டபிள் கணக்காய் தடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

கொஞ்ச நேரம் ஆனபின், மேலே போனால், 4.20 ஷோவுக்கு இன்னும் 10 நிமிடம் இருந்தது. கதவு திறக்கும்போதெல்லாம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திரை விலகல் போல வெளியே நிற்பவர்கள் கழுத்தை வளைத்து எட்டிப் பார்ப்பதும், ‘வெய்ட் பண்ணுங்க.. க்ளீனிங் நடக்குது’ என்று ஊழியர் தடுப்பதும் இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை நடந்து கொண்டுதான் இருந்தது. கூட்டம் முண்டுகிறதே, கொஞ்சம் உட்காரலாம் என்றால் அங்கேயும் ஓர் அமருமிடம் இல்லை.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்து நொந்தபடி நடந்து பைக் எடுக்கும்போதும், அதே அம்பது ரூபாய் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது. ‘திரும்பி வர்றப்ப டிக்கெட் வாங்கிட்டு முப்பது ரூவா குடுப்பீங்கதானே’ என்று ஒருத்தர் அப்பாவியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பைக்கை நிறுத்திவிட்டு வந்த ஒரு ஜோடிகள் பேசிக் கொண்டு போனது, வேறொரு கோணம்!

“இனி இந்த தியேட்டருக்கே வரவேணாம்டா”

“”ஏம்ப்பா”

“ஆமா. இவ்ளோ தூரம் மூஞ்சிய மறைச்சுட்டு பைக்ல வந்தது, இந்த இடத்துல பைக்கை நிறுத்தி அதோ... அவ்ளோ தூரம் இருக்கற தியேட்டருக்கு நடந்து போறதுக்கா? மத்த தியேட்டர்னா, நிறுத்தி டக்னு உள்ள போய்டலாம். ரோட்ல இத்தன வண்டிய தாண்டிப் போறப்ப எனக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் பார்த்தா நான் காலி!”

ஐயா, திருட்டி விசிடி கூடாதுதான். நல்ல படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்தான். ஆனால் அதற்கு படம் நன்றாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். தியேட்டரைத் தேடி வரும் ரசிகனுக்கு குறைந்தபட்ச நியாயம் இருக்க வேண்டாமா? இருநூறு முன்னூறு அடிகள் தள்ளி பைக்கை வெற்று மணலில் வெயிலில் நிறுத்தி அதற்கு ஐம்பது ரூபாய் - கிட்டத்தட்ட காட்சிக்கான கட்டணத்தில் பாதி - தண்டம் அழ வேண்டுமா? நீங்கள் சொல்ல விரும்புவதுதான் என்ன? வந்தா கார்ல வா, இல்லைன்னா கஷ்டப்படு என்பதா? பைக்கில் வருபவர்கள், இந்த ஊர்வலம் எல்லாம் முடித்து, லேட் ஆகி, பத்து நிமிடம் படத்தை மிஸ் பண்ணுங்க என்றா?

புதிய தியேட்டர்கள் உருவாவதன் அவசியமே, படம் என்ன மனநிலையைக் கொடுத்தாலும் தியேட்டருக்குள் இருக்கும் ரசிகன் தன்னை மகிழ்வாய் உணரும் ஒரு சூழலை, சுற்றம் கொடுக்க வேண்டும் என்பதே. அதைவிடுத்து உட்கார இடமில்லாமல், ரசிகர்களை அலைகழிப்பதெல்லாம் இருந்தால், அவர்கள் ஏன் ஐம்பது ரூபாய் சிடி வாங்கி, லுங்கியோடு படுத்துக்கொண்டே படம் பார்க்கமாட்டார்கள்?

கொஞ்சம் யோசிங்க பாஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close