Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளையராஜா 1000 - ஏன் இத்தனை ஏமாற்றம்?

ளையராஜா ஆயிரம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்த நிகழ்ச்சி. தொடர்ந்து தொலைக்காட்சியில் இதற்கான ப்ரமோஷன்கள், ஊரெங்கும் போஸ்டர்கள் என்று இசை ரசிகர்களின் இதயம் ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு. 


காட்சிக்கான டிக்கெட்டுகள், ஐநூறு முதல் 25000 வரை விலை வைத்து, BookMyShow தளத்தில் விற்பனை என்று அறிவிக்கப்பட்டது. போன வாரத்தில் முழு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததுபோல, புக் செய்ய முயன்றவர்களுக்கு BookMyShow தளம் போக்குக் காட்டிக் கொண்டே இருந்தது. டிக்கெட்டுகள் என்று யாரைத் தொடர்புகொண்டாலும் ‘எனக்கே கெடைக்கலைங்க’ என்று பேச்சு கேட்டது. மீடியா பாஸ், விஐபி டிக்கெட், ஸ்பான்ஸர் டிக்கெட் என்று எதுவாக இருந்தாலும், ‘பார்க்கலாம்.. இல்லை.. கஷ்டம் பாஸ்.. ‘ என்கிற ரேஞ்சில்தான் போய்க் கொண்டிருந்தது. அதுவே கடைசி 2 நாட்களில் டிக்கெட் BookMyShowவில் கிடைத்தது.


இத்தனை எதிர்பார்ப்புகளுடன் நடந்த இளையராஜா 1000 ராஜா ரசிகனை ‘முழுமையாக திருப்திப்படுத்தியதா’ என்று கேட்டால், ம்ஹும் என்ற தலையாட்டலே கிடைக்கிறது. அப்படி என்னென்ன ஏமாற்றங்கள்?

பத்தாயிரம், ஐயாயிரம் டிக்கெட்டுகளுக்கு, மேடையில் இருக்கும் பெரும்புள்ளிகள் சிறு புள்ளியாகத்தான் தெரிந்தனர். விஐபி ரோவில் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த நண்பனைக் கேட்டதற்கு, ‘எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்டது’ ரேஞ்சில் ‘இங்கயும் அப்டித்தான்’ என்றான். மேடையை அவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவில் போட்டிருந்தார்கள்.

யார் செய்த குழப்பம் என்று தெரியவில்லை. 5000 ரூபாய் பிரிவில், ஒரே டிக்கெட் நம்பரை இருவருக்கு வழங்கியிருந்தார்கள். பஞ்சாயத்துக்கு வந்தவரிடம், ‘நான் வாங்கிருக்கறது ஸ்பான்ஸர் டிக்கெட்ங்க’ என்று வாதிட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். காசு கொடுத்து வாங்கிய நபர் ‘ப்பே’ என்று முழித்தபடி இருந்தார்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

‘சிவசக்த்யா யுக்தோ யதிபவதி..’ என்று குழுவில் இருக்கும் யாரோ ஒருவர் பாடுகிறார். அவ்வளவுதான். கூட்டம் ‘அய்யய்யே....’ என்று ஏமாற்றமாகி அமைதியாகிறது. மேட்ச் ஆரம்பிக்கும் என்று உற்சாகமாக, கேலரியில் உட்கார்ந்திருக்கும் ரசிகனிடம் ‘இன்றைக்கு சச்சின் 12த் மேனா வெளில இருப்பார்’ என்று சொன்னதற்குச் சமம். அங்கேயே நிகழ்ச்சி அவுட் ஆனமாதிரி இருந்தது. இளையராஜா பங்குகொள்ளும் ஒரு இசை சம்பந்தப்பட்ட நிகழ்வில் ’ஜனனி ஜனனி’ பாடலை அந்தத் தாய் மூகாம்பிகையே வந்து பாடினாலும் ஏற்கமாட்டான் ராஜா ரசிகன். அது ராஜா மட்டுமே பாடவேண்டிய பாடல். அதற்கடுத்த விக்கெட் விழுந்ததுபோல இருந்தது, ‘தானத்தந்தத் தானத்தந்தா..’ என்ற கோரஸுடன் அவர்கள் பாடிய ‘தென்றல் வந்து தீண்டும்போது’ ஒலிக்க ஆரம்பித்தபோது. ‘அப்ப இதும் ராஜா பாடப்போறதில்லையா’ என்று அங்கங்கே பேச்சுக்குரல்கள். ‘இதே பாட்டு அவர் பாடுவார் பாருங்க.. செம்மயா இருக்கும். நிச்சயமா பாடுவார்’ என்று ஒருத்தர் சொல்லிக் கொண்டிருந்தார்.


இந்த நேரத்தில் பின்னாலிலிருந்து பெருங்கூச்சல். ஆயிரம், ஐநூறு ரூபாய்ப் பிரிவிற்கு எதுவுமே கேட்கவில்லை. ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை. அதேபோல, அங்கங்கே வைக்கப்பட்டிருந்த LCD திரை, சில முக்கியத் தருணங்களில் வேலை நிறுத்தம் செய்தது.


குழுவினர் பாடிமுடித்ததும், ராஜா அரங்கத்தில் நுழைந்தார். நேராக அவரை அழைத்து வந்து, நடுவே பெரிய ‘வாக்’ போகவிட்டு ‘சேவிச்சுக்கோங்கோ’ பாணியில் காண்பித்துவிட்டு’ஜருகண்டி’னார்கள். சரி, மனுஷன் போய் மைக்கை கைல வாங்குவார் என்று பார்த்தால்.. மேடைக்கு நேரே அமரவைத்துவிட்டார்கள். பக்கத்தில் தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷ்.


அதுமுடிந்ததும், டிவிகோபாலகிருஷ்ணன், விக்கு விநாயக்ராம் என்று பல மேதைகள் வந்து இளையராஜா என்பவர் யார், எப்பேர்ப்பட்டவர் என்று பாடம் எடுத்தார்கள்.  


அடுத்து பூர்ணிமா, பானுப்ரியா, மீனா, கௌதமி குஷ்பு, அதற்கடுத்து பார்த்திபன் வந்து, பி.வாசு, , பாலா, கே. பாக்யராஜ், மிஷ்கின் ஆகியோர்கள் வந்தார்கள். இவர்களெல்லாம் இளையராஜா யார் தெரியுமா என்று கூடியிருந்தவர்களுக்கு ராஜாவை அறிமுகப்படுத்துகிற வேலையைச் செய்தார்கள். ‘ஓஹோ அப்படியா’ என்று அமர்ந்திருந்தார்கள் கூட்டத்தினர்.   


கொஞ்சநேரத்தில் கமலஹாசன் வந்தார். எப்படித்தான் தெரிந்ததோ அவருக்கு, ‘இது பேசவேண்டிய மேடை அல்ல. பாட வேண்டிய மேடை’ என்று மைக்கை சில விநாடிகளிலேயே கைமாற்றி விட்டு, ராஜா அருகில் போய் அமர்ந்துகொண்டார்.


பிசுசீலா, ஜென்ஸி, உமாரமணன், எஸ்பிஷைலஜா, சித்ரா ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். இவர்களும் ராஜா பற்றி பேசி, நல்லவேளையாக சித்ரா மேடையை விட்டு இறங்காமல் பாட ஆரம்பித்தார். கண்ணன் வந்து பாடுகிறான், என்னுள்ளே என்னுள்ளே பாடலை அவர் பாடும்போது கூட்டம் கொஞ்சம் ஆசுவாசமானது. அதுவும் பெரிய திரையில் க்ளோஸப்பில் அருண்மொழி (நெப்போலியன்) புல்லாங்குழல் வாசிப்பதைக் காட்டியதும் ‘அப்பாடா, ராஜா ட்ரூப் இருக்குடா’ என்று மூச்சே வந்தது.


கிட்டார் ப்ரசன்னா, ராஜாவின் பாடல்களில் ஒன்றிரண்டை வாசித்தார். அதன்பின் மனோ வந்ததும், மீண்டும் நிகழ்ச்சி களை கட்டத்தொடங்கியது. மாங்குயிலே பூங்குயிலே, இளமையெனும் பூங்காற்று என்று இரண்டு பாடலோடு அவரும் மேடையை விட்டு இறங்கினார்.


கௌதம் வாசுதேவ் மேனன், பாடகர் கார்த்திக், கிடார் ப்ரசன்னா ஆகியோர் கௌதம்ஸ் ஃபேவரைட்ஸ் என்று ஐந்து பாடல்களை பாடினர். அதன்பிறகுதான், இண்டர்வெல் ப்ளாக்கில் ஹீரோ எண்ட்ரிபோல, காய்ந்துகிடந்த மண்ணில் விழுந்த நீர்த்துளி போல.. இப்படி உவமைகளில் எழுதமுடியாத அளவுக்கு ரசிகர்களை மகிழ்விப்பதுபோல வந்தார் அவர்...


அவர்? The one and Only SPB!


இவர் குரல் மட்டும் எப்படி ‘ஆயிரம் நிலவே வா’ காலத்துக்குரலாகவே கம்பீரமாக இருக்கிறதென்று தெரியவில்லை. லவ் யூ மேன்.  அவர் வந்து ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்று மைக்கில் ஆரம்பித்ததும், கூட்டம் சாமியாடியது. ‘தலைவா.. நீயாச்சும் எங்களைக் காப்பாத்து’ என்று ஒரு ரசிகர் உரக்கவே கத்தினார். அடுத்ததாக இளையநிலா பொழிகிறது, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஜோதியலி (விழியிலே மணி விழியிலே) என்று நான்கு பாடல்களோடு அவரும் இறங்கிவிட்டார். சரிவர திட்டமிடாமல், என்ன செய்வதென்று அறியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு எஸ்பிபி மேடையில் ‘அடுத்தது என்ன பண்ணனும் நான்? Some one pls help me..'  என்றெல்லாம் சொன்னதே சாட்சி.


தொய்ந்துபோன ரசிகர்களை ஒருமாதிரி உற்சாக லெவலுக்குக் கொண்டுவந்து நிறுத்தினார் எஸ்பிபி. ஆனால் அதுவும் தொடர்ந்து செல்லவில்லை. எல்.சுப்ரமணியம் வயலின் வாசித்து ராஜாவுக்கு தன் வாழ்த்தைப் பதிந்தார்.


அதன்பிறகு தேவி ஸ்ரீப்ரசாத். இளையராஜாவின் ஆராதகன் இவர். அவருக்கு முன் பாடவேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆவல். ஆனால் சரியாக ராஜா சாப்பிட எழுந்து போன நேரத்தில் இவரை மேடைக்கு அழைத்தார்கள். அழாதகுறையாகிவிட்டது டிஎஸ்பிக்கு. நல்லவேளை, அதன்பின் உஷா உதுப் வந்து மீண்டும் இவரை அழைத்து பாட, மிகவும் மகிழ்வாக வந்து பாடினார். டிஎஸ்பி அவ்வளவு மரியாதையாக, அடக்கமாக பாடியதும்.. ராஜா மீது அவர் வைத்திருந்த அன்பும்.. அட்டகாஷ் மேன்!

உஷாஉதூப் மேடையேறியதும் மீண்டும் உற்சாகமானது கூட்டம். ரம்பம்பம் ஆரம்பம், வேகம் வேகம் போகும் போகும், தண்ணித்தொட்டி ஆகிய பாடல்களை தன்னோடு ரசிகர்களையும் பாடவைத்தார்.

அதன்பின்தான், கேரளாவின் பிரபல இசைக்குழுவான தாய்க்குடம் ப்ரிட்ஜ் மேடையில் வந்தார்கள். அதற்குமுன்னரே ஒன்றிரண்டு முறை அவர்களைத் தயார் செய்து, மீண்டும் போகச் சொல்லி என்று சோதித்திருந்தார்கள். ராஜராஜ சோழன் நான், நீபார்த்தபார்வைக்கொரு நன்றி ஆகிய பாடல்களை இடையிடையே ராஜாவின் பிரபல பிஜிஎம்முடன் அவர்கள் பாடப்பாட கூட்டத்தினர் மூழ்க ஆரம்பித்தனர். திடீரென்று உச்சஸ்தாயியில் ‘ஓம் சிவோஹம்’ அவர்கள் பாடி முடித்து ‘நாங்க வேற லெவல்’ என்று நிரூபித்தார்கள்!

அதன்பின் யுவனை மேடையேற்றிவிட, போட்டு வைத்த காதல் திட்டம் பாடினார் அவர். ‘கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.. ப்ளீஸ். ராஜா சாரும் கமல்சாரும் ஒரு ஸ்பெஷல் பாட்டுப் பாடுவாங்க என்று இடையிடையே டிடி கெஞ்சிக் கொண்டே இருக்க, அதே போல அவர்கள் இருவரும் இறுதியாக வந்து மருதநாயகம் பாடலை, பாடி திரையில் அதன் காட்சிகளோடு ஒலிக்கவிட்டனர்.


நிகழ்ச்சி “இனிதே” நிறைவுற்றது!

எஸ்பிபி ஏன் மகாகலைஞன் என்பதற்கு ஒரு உதாரணமாக ஒன்று: அவர் இளையநிலா பொழிகிறதே பாடும்போது  இடையிசையில் கிடாருக்கு அடுத்து ஒரு புல்லாங்குழலிசை வரும். அது வரவில்லை. டக்கென்று எஸ்பிபி தனதனனா என்று மேனேஜ் செய்து பாட்டை முடித்து விட்டு சொன்னார்:

“அருண்மொழி அந்த ஃப்ளூட் பிட்டை வாசிக்க புல்லாங்குழலை எடுக்கறப்ப அது தவறிடுச்சு. அதுனால வாசிக்க முடியல. அவருக்காக இன்னொரு முறை’ என்று அந்த பிஜிஎம்மில் ஆரம்பிக்க... அருண்மொழி இந்தமுறை வாசிக்க.. க்ளாஸ் க்ளாப்ஸ் அள்ளியது இந்த நிகழ்வு. தாய்க்குடம் ப்ரிட்ஜின் பெர்ஃபார்மென்ஸ். எஸ்பிபியின் பாடல்கள், மருதநாயகம் சிங்கிள் ரிலீஸ் என்பதுபோன்ற குறைந்த அளவிலேயே நிறைவான நிகழ்வுகள் இருந்தன.

ராஜாவே இறுதியில் பேசும்போது ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததை உணர்ந்து, ‘நான் கண்டக்ட் பண்ணி, என் ஆர்கெஸ்ட்ரா குழுவோடு விரைவில் உங்களுக்கு ஒரு இசைவிருந்து படைக்கிறேன்’ என்று உறுதி கூறினார்.


என்ன செய்திருக்கலாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்?

1. வெறும் 3 அல்லது 4  மணிநேரம் போதும்.

2. ஆரம்பத்திலேயே ‘இதுல ராஜா பாடப்போறதில்லை’ என்று அறிவிப்பில் தெளிவாக புரிகிற வண்ணம் ரசிகனை தயார்படுத்தியிருக்க வேண்டும். (பாடுவார்னு சொல்லலயே என்று கேட்கலாம். இருந்தாலும் தெளிவாக இது ஒன்லி பாராட்டு விழா. பாடும் விழா அல்ல என்பதை பதித்திருக்க வேண்டும்)

3. ராஜா நிகழ்ச்சிக்கு ராஜா ரசிகர்கள்தான் வருவார்கள். அவரைப் பற்றிய அறிமுகமும், ‘இவர் யார் எப்பேர்ப்பட்டவர் தெரியுமா’ வகையறாக்கள் எல்லாம் காசுகொடுத்து வருகிற எங்களுக்கு வேண்டாம். சொல்லப்போனால், ராஜா பற்றிய விபரங்களை ஒவ்வொரு வரிசையில் இருக்கும் ஏதோ ஒரு ரசிகனாவது அங்கே மேடையில் பேசிய பலரை விடவும் அதிகமாக நினைவடுக்கில் வைத்திருப்பான்.

4. ஃபின்லாந்திலிருந்து ‘மத்தே’ என்பவர் இசையே இல்லாமல் பாடியபோது ரசிகர்கள் உற்சாகம் அடைந்த அளவுக்குக் கூட ஒரு சிலர் பாடும்போது அடையவில்லை. இந்த ரசிகர்களின் Pulseஐ நீங்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

5. ஒரு சில பாடல்களைப் பாடும்போது பிரகாஷ்ராஜின் முகபாவங்களை திரையில் காட்டினீர்கள். கமலை விடவும், மிகப்பெரிய ராஜா ரசிகன் அவர்தான். மனுஷன் அவ்வளவு தூரம் லயித்து ரசித்துக் கொண்டிருந்தார். சீட்களுக்கு வேண்டுமானால் நீங்கள் விலைநிர்ணயம் செய்திருக்கலாம். அங்குவந்ததில் 80% பேர் நூறு ப்ரகாஷ்ராஜ்களுக்கு சமமான ராஜா ரசிகர்கள். அவர்களை நீங்கள் மிகவும் லைட்டாக எடுத்துக் கொண்டீர்களோ என்று தோன்றுகிறது.

6. டிவிக்கான ஃபுட்டேஜுக்காக, பிரபலங்களின் பாராட்டு போன்றவற்றை தனியே எடுத்துக்கொள்ளலாம். ராஜா நிகழ்ச்சி என்றால் பாட்டு வேண்டும் எங்களுக்கு.. பேச்சல்ல.

7. திரையில் பாடல்கள் ஒலிபரப்பும்போது அங்கங்கே அந்தப் பாடலுக்கு தகுந்த மூடில் எல்சிடியில் தீ, பூக்கள், இயற்கை என்று பலதையும் ஒளிபரப்பிய மஹானுபாவனுக்கு கைகுலுக்கல்கள். யார் கவனிப்பார்கள் என்ற சிந்தனையின்றி இதுபோன்றவற்றை நேர்த்தியாகச் செய்யும் ஆட்கள் பலரையும் விழாக்குழுவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

8. ராஜா கலந்து கொள்கிற, ராஜா சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக அவரது நண்பனும் வரவேண்டும். அது.. அவரது ஆர்மோனியம்!

- இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

அடுத்தமுறை இந்த மாதிரி ராஜா நிகழ்ச்சி என்றால், பிஸினஸ், டி ஆர் பி, ஃபுட்டேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு பரிசுத்தமான ராஜா ரசிகனையும் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவில் வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்று போதும்!

 -பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close