Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்களுக்கு சீரியல், சினிமா.. எங்களுக்கு கார்ட்டூன்’ - இது சுட்டிக்குட்டீஸின் உலகம்!

குழந்தைகளின் கற்பனை உலகம் அலாதியானது. நம்முடைய பார்வையில் வெறும் பேப்பராகத் தெரியும் காகிதத்தாள், அவர்களுடைய பார்வையில் பட்டாம்பூச்சியாகப் பறக்கும். ஒரு குட்டிக் கல்லுக்குக் கூட, கைகால் வைத்து உருவமாக்கி மகிழ்ந்திட நீங்கள் குழந்தையாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

சாக்லெட் பேப்பரில் பொம்மை செய்து மகிழ்ந்த குழந்தைகளின் காலம் போய், டோரா- புஜ்ஜியுடன் கதை கேட்கும் குழந்தைகள் அதிகரித்துவிட்ட காலமிது.

அதற்கேற்றது போல, டிவிக்களும், சேனல்களும் வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் களம் இறக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், கார்ட்டூன்களையும், குழந்தைகளையும் எப்போதும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட சில கார்ட்டூன் நிகழ்ச்சிகளை குழந்தைகளாக மாறி நாமும் ரசிக்கலாம்.

வருத்தப்படாத கரடி சங்கம்:

காட்டுக்குள் சில பல மிருகங்களும், இரண்டு கரடிகளும் வசித்து வருகின்றன. அதே காட்டுக்குள் மரங்களை அறுத்துத் தள்ள உள்நுழையும் வேட்டைக்காரன் ஒருவன், சகோதரர்களான இரண்டு கரடிகளிடமும் சிக்கி படாதபாடு படுவதுதான் இந்த ‘வருத்தப்படாத கரடி சங்கம்’. வேட்டைக்காரனின் வடிவேலு குரலும், பெரிய கரடியின் கம்பீரமும், சின்னக் கரடியின் அப்பாவியான செயல்களும் குழந்தைகளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

டோரா புஜ்ஜி:

‘காடு...மலை...டோராவோட வீடு’.. குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களும் மனப்பாடமாகச் சொல்லும் வாசகங்கள் இவை. டோரா என்கிற பாப் கட் வைத்த குழந்தையும், புஜ்ஜி என்கிற குட்டிக் குரங்கும் சேர்ந்து காட்டுக்குள் வழி கண்டுபிடிப்பதும், சின்னச்சின்ன புதிர்களை அவிழ்ப்பதும்தான் இந்த கார்ட்டூன் வரிசை. சில வீடுகளில் குழந்தைகளுடன் கூடவே அப்பா, அம்மாக்களையும் பார்க்க வைத்திருக்கிறது இந்த கார்ட்டூன்.

சோட்டா பீம்:

’சோட்டா பீம்...சோட்டா பீம்’ என்று பாடிக் கொண்டே லட்டு சாப்பிடும் குழந்தைகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக இந்த கார்ட்டூனின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். பீம், சுட்கி, ஜக்கு, ராஜூ, காளையா, டோலு, போலு என்று சுட்டிப் பட்டாளத்தால் சூழ்ந்திருக்கும் டோலக்பூர் என்னும் ஊரில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் நிறைந்த கார்ட்டூன் இது. லட்டு சாப்பிட்டவுடன் சும்மா புகுந்து விளையாடும் சுட்டி ஹீரோதான் பீம். மற்றவர்கள் அவனுடைய நண்பர்கள். டோலக்பூரை பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவது அவர்களுடைய வேலை.

நிஞ்சா கட்டோரி:

நிஞ்சாவுடன் நட்பாக இருக்கும் கென் என்னும் சிறுவன் அடிக்கும் லூட்டிகள்தான் இந்த ‘நிஞ்சா கட்டோரி’. முக்கால்வாசி வீடுகளில் மாலை நேரம் பள்ளிக்கூடம் விட்டபின் இந்த கார்ட்டூன் தான் குழந்தைகள் உலகை ஆக்கிரமித்துள்ளது.

டாம் அண்ட் ஜெர்ரி:

குழந்தைகளிடையே இன்றைக்கும் எவர் க்ரீன் கார்ட்டூன் என்றால் அது ‘டாம் அண்ட் ஜெர்ரி’. நம்முடைய அம்மா, அப்பா பார்த்து, நாம் பார்த்து, இப்போது நம்முடைய குழந்தைகள் பார்க்கும் ஒரே கார்ட்டூன் சீரிஸ் இதுதான் என்று அடித்துச் சொல்லலாம். டாம் என்ற பூனையும், ஜெர்ரி என்ற எலியும் சேர்ந்து கும்மாளமடிக்கும் இந்த கார்ட்டூன், பூனைக்கும், எலிக்கும் என்ன உறவு என்கிற கதையையே குழந்தைகளுக்கும் பிடித்தமாதிரி மாற்றியமைத்தது.

இதுக்கும் மேல....மோட்டு பட்லு, மேட், மிஸ்டர் பீன், ஆர்ட் ஸூக்கா, டோரிமான் என்று குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் சீனப் பெருஞ்சுவர் கணக்காக இந்த கார்ட்டூன் பட்டியல் ஒரு தொடர்கதை. கற்பனைக் கதைகள், ஜாலியான விஷயங்களைத் தாண்டி ’மரத்தை வெட்டாதே...ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடு...பெரியவர்களுக்கு மரியாதை கொடு’ என்று நிறைய நன்நெறிகளையும் இந்த கார்ட்டூன்கள் கற்றுத் தருவதாலேயே இவற்றைக் குழந்தைகள் பார்க்கத் தாராளமாக க்ரீன் சிக்னல் காட்டலாம்!

-பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close