Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சினிமா நாட்டாமை.. சின்னத்திரை ‘அய்யா’வானது எப்படினு தெரியுமால?!’ நடிகர் விஜயகுமார் கலகல #VikatanExclusive

நடிகர் விஜயகுமார் 

'நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு' என்ற டயலாக்கை உச்சரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். நாட்டமை என்றாலே விஜயகுமார்தான் எனுமளவு வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த நடிகர் விஜயகுமார், இப்போது, சின்னத்திரையில் 'அய்யா'வாக கொடிகட்டிப் பறக்கிறார். ரம்யா கிருஷ்ணனின் 'தங்கம்' சீரியலில் 'அய்யா'வாகவும், 'வம்சம்' சீரியலின் தொடக்கத்தில் 'அண்ணாச்சி'யாகவும், இப்போது நந்தினி சீரியலில் (மீண்டும்) அரண்மனை 'அய்யா'வாகவும் நடித்துவருகிறார். வீட்டுக்கே வந்து விருந்து படைக்கும் சின்னத்திரையில் நடித்துவரும் அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், விஜயகுமார்.

"வெள்ளித்திரைக்கும்-சின்னத்திரைக்குமான அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீங்க?"

"நான் எப்போதுமே, ஒரு இயக்குநரின் நடிகன்தான். எனக்கென்று எந்த ஒரு தனிப் பாணியும் கிடையாது. ஒரு இயக்குநர் என்ன சொல்ராரோ, அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதை அப்படியே வெளிப்படுத்துவதுதான் என் சுபாவம். அதைத்தான்  நான் வெள்ளித்திரையில் செய்தேன். இப்போது சின்னத்திரையில் செய்கிறேன். நாங்கள் நடிக்கும் காட்சிகளை வெள்ளித்திரையில் கொஞ்சம் சிறிய அளவில் ஒரு சின்னக் காட்சியாகத்தான் எடுப்பார்கள். ஆனால், சின்னத்திரையில், அந்தக் காட்சியைக் கொஞ்சம் பெரிதாக, நீளமாக எடுக்கிறார்கள். ஆனால், இரண்டுமே நடிப்புதான்.

"சினிமாவில் பிசியாகவே இருக்கும் நீங்கள் எப்படி சீரியலுக்கு வந்தீங்க?"

"சன் டி.வி-யில் 'தங்கம்' மெகா தொடருக்காக நடிக்க முடியுமானு நடிகை ரம்யா கிருஷ்ணன் கேட்டாங்க. அவங்களுக்காக முதன்முதலா நடிச்சதுதான், 'தங்கம்' சீரியல். அதுல என்னை எல்லாரும் 'அய்யா'னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, இப்ப வரைக்கும் எல்லாரும்  'அய்யா'னுதான் கூப்பிடுறாங்க. என்னுடைய இத்தனை வருட சினிமா பயணத்தில், 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டும்தான் எனக்கு பெயர் வாங்கித் தந்தவை. அதே அளவுக்கு, இந்த 'தங்கம்' சீரியலும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. அதன் பிறகு, 'வம்சம்' சீரியலில் என்னால் முழுமையாக நடிக்க முடியவில்லை. இப்போது, சுந்தர்.சி தயாரிப்பில் வந்துகொண்டிருக்கும் 'நந்தினி' சீரியலும் நட்புக்காக ஏற்றுக்கொண்ட பாத்திரம்தான்.

நடிகர் விஜயகுமார் 

ஒரு நாள், சுந்தர்.சி என்னை அழைத்து, சன் டி.வி-க்காக சீரியல் பண்ணப்போறதா சொன்னார். தமிழில் இதுவரை வெளியான மற்ற சீரியல்களைவிட, படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், பிரமாண்டமாக இந்தச் சீரியலைத் தயாரிக்கப்போவதாகச் சொன்னார். இதில், அரண்மனை 'அய்யா' கேரக்டர் இருப்பதாகவும், நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நட்பின் அடிப்படையில், அந்த வார்த்தையை என்னால் மீற முடியவில்லை. அதன்படி, இப்ப நந்தினியில்  அரண்மனை 'அய்யா'வாக நடித்து வருகிறேன். 

" 'நந்தினி'யில் நீங்கள் நல்லவரா, கெட்டவரா?"

"நான், நல்லவன்தான். ஆனா, எப்பவோ... எதையோ பண்ணிட்டேன் போல, நீங்கதான் 'நந்தினி' பார்த்திருப்பீங்களே, நீங்களே சொல்லுங்களேன்" என்று சொல்லிக்கொண்டே சிரிக்கிறார். "இந்தக் கதை, திரைக்கதை எல்லாம் இயக்குநர் கையில. கதைக்கு ஏற்றமாதிரி, அவர் நல்லவனா நடிக்கச் சொன்னா... நல்லவனா நடிப்பேன். கெட்டவனா நடிக்கச் சொன்னா... கெட்டவனா நடிப்பேன். அதான், அதனாலதான் என்னைய எல்லாருக்கும் பிடிக்குது. சீரியல் பார்க்கிறவங்ககூட, என்னைய அவுங்க வீட்டுல ஒருத்தனாவே பார்க்கிறாங்க. அதான் தம்பி என் ஸ்பெஷல்."

"சின்னத்திரையில் வந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம்?"

"சினிமாவில் நடித்தால், குறிப்பிட்ட சில நாள்கள்தான் ஓடும். அதில் விருப்பப்பட்டவர்கள் மட்டும் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பாங்க. ஆனா, சின்னத்திரைதான், மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது. மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், டி.வி. மூலமா நாங்கள் வீட்டுக்கே வந்துவிடுகிறோம். அதனால், நான் இந்த 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சு வாங்கிய பெயரை, இந்த ரெண்டு சீரியல்களும் எனக்கு வாங்கித் தந்துவிட்டன. நாம் நடிக்கும் கதையில், நாம் மட்டும் வெற்றி பெற்றோமானு பார்ப்பதைவிட, வெற்றிபெற்ற அணியில் நாம் இருக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். அப்படிதான் நான், 'தங்கம்' சீரியலிலும், 'நந்தினி' சீரியலிலும் உணர்ந்தேன். அது நல்ல அனுபவங்களைக் கற்றுத் தந்தது. இப்போது வரையிலும் கற்றுத் தந்துகொண்டிருக்கிறது.

"சினிமாவில் நீங்கள் ஆசைப்பட்ட கதாபாத்திரம் எதுவும், நிறைவேறாமல் இருந்ததுண்டா?"

"நான் இந்த ரோல்தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட நான் யார்? ஒரு கதையும், அந்தக் கதையின் இயக்குநரும்தான் முடிவு பண்ண வேண்டும். அதுதான் நியாயம். அப்படி நான் ஆசைப்படும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால், நான்தான் அந்தப் படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும். இது எனக்கு மட்டும் அல்ல, எல்லா நடிகர்களுக்கும்   பொருந்தும். இதை உணர்ந்து நடித்தால் போதும், எல்லாம் சிறப்பாக அமையும்.

"அருண் விஜய்யோட வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க? அவரிடம் ஸ்பெஷலான விஷயம் என்ன"?

" 'குற்றம் 23' படத்திற்குப் பிறகு, அருண் விஜய்யோட ஃபேனாவே நான் மாறிட்டேன். சும்மா சொல்லக்கூடாது, அந்தப் படத்தை பார்த்த சிலர், எனக்கு போன் பண்ணி, 'அருண் விஜய்யை நினைத்தால் எங்களுக்குப் பெருமையா இருக்குனு சொல்றாங்க' ஒரு தகப்பனா, எனக்கு இதைவிட வேற என்ன சந்தோஷம் வேண்டும். அருண், பல படங்களில் நடித்திருந்தாலும், 'தடையற தாக்க', 'என்னை அறிந்தால்' ஆகிய இரண்டு படங்கள்தான் அருண் விஜய்யை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தது. இப்போது, 'குற்றம் 23' அதை மெய்யாக்கும் விதமாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துவிட்டதாகவே நினைக்கிறேன். அருண் விஜய்யும் என்னைப் போன்றுதான், அவர் அதில் ஸ்பெஷல், இதில் ஸ்பெஷல் என்று சொல்வதைவிட, அவர் இயக்குநரின் நடிகன். இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை எப்போது சரியாகச் செய்யும் நடிகன். அவருக்கென்று ஒரு நேரம் இப்போதுதான் கனிந்து வந்திருக்கிறது. சினிமா அப்படித்தான் நம்பியவர்களையும், தொடர்ந்து உழைப்பவர்களையும் கைவிடாது.

நடிகர் விஜயகுமார் 

'என்னை அறிந்தால்' படத்தில் அருண் நடித்த பிறகு,  பெரும்பாலான 'தல' ரசிகர்கள், அருணுக்கும் ரசிகர்களாக மாறிவிட்டார்கள். அந்தப் படத்தில் நடிக்கும்போது, 'அருண் விஜய்-க்கென்று கதையில் எந்த ரோல் இருக்கிறதோ, அதை அப்படியே எடுக்க வேண்டும். எனக்காக, அவர் கேரக்டரில்  எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். எனக்கு முக்கியத்துவம் தருவதாக நினைத்து, அருண் விஜய்யின் கதாபாத்திரத்தை குறைக்க  வேண்டாம்’ என இயக்குநர் கெளதம் மேனனிடம், அஜித் கட்டளையாகவே சொன்னார்னு கேள்விப்பட்டேன். கேட்டதும் அப்படியே மெய்சிலிர்த்துவிட்டேன். இதுவரையில் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும், இப்படி செயல்பட்டது கிடையாது. இனியும் இப்படி பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதுமில்லை. அஜித்தின் அந்தச் செயல், அவரின் தனிப்பட்ட இயல்பை வெளிப்படுத்தியது. ஏற்கெனவே, சகோதர பாசம் எங்களுக்குள் உண்டு. இந்தச் சம்பவத்தை நான் கேள்விப்பட்ட பிறகு, அந்தப் பாசம் இன்னும் அதிகமா ஆயிருச்சுனே சொல்லலாம். அஜித்தை நினைச்சா பெருமையா இருக்கு”.

"உங்கள் குடும்பமே சினிமா குடும்பம், அது பற்றி?"

"பல நேரங்களில், என் நிஜ வாழ்க்கைக்கும், நான் நடிக்கும் சினிமாவுக்கும் வித்தியாசமே தெரியாது. 'அக்னி நட்சத்திரம்' படத்தில் எனக்கு இரண்டு மனைவிகள். அதில் இரண்டு மகன்களும் மோதிக்கொள்வார்கள். அதில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, என் இரண்டு மனைவிகளும் பேசிக்கொள்வார்கள். 'அவரு கண் முழிக்கவில்லை, நீங்கள் போயி பாருங்கள்' என்று முதல் மனைவி பேசுவாங்க. அந்தக் காட்சிகள் எல்லாம், என் வாழ்க்கையில் நடப்பது போன்று இருக்கும். அதெல்லாம் என்னால் மறக்க முடியாத காட்சிகள் மட்டும் அல்ல, நினைவுகளும் கூட. நிஜ வாழ்க்கையில் என் அப்பா-அம்மாவுக்கு என்னோடு சேர்த்து ஆறு பேர். அதில் நாங்க ஐந்து பேர் ஆண்கள். ஒரு பொண்ணு. ஆனால் எனக்கு, அதே ஆறு பசங்கள்தான். ஆனால், அதில்  ஐந்து பொண்ணு, ஒரு பையன். இந்த நிகழ்வே சினிமா மாதிரி இருக்கு" என்று சொல்லிக்கொண்டே சிரிக்கிறார். " ஐந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டியாகிருவானு சொல்வார்கள். ஆனால், ஐந்து பெண்களைப் பெற்றாலும், நான் இப்பவும் அரசனாகத்தான் இருக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு இரண்டு மனைவிகள், இது ஊருக்கே தெரியும். அதுல ஒருத்தர் இப்ப இல்ல. ஆனால், என் முதல் மனைவி முத்துக்கண்ணு,  ஆறு பேரையும் தன் பிள்ளைகளாத்தான் பார்த்துக்கொண்டு வருகிறார். இதுவெல்லாம் இறைவனின் செயல்.  

- ரா.அருள் வளன் அரசு, படங்கள்: ப.சரவணகுமார் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close