Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"நான் பேசுற தமிழ் நல்லாயிருக்குன்னா... அதுக்கு ராஜ்கிரண் சார்தான் காரணம்!" 'விதி' சீரியல் நாயகி ஶ்ரீஜா!

நடிகை ஶ்ரீஜா

"சினிமா, சீரியல்னு பதினெட்டு வருங்களாக நடிச்சுட்டிருக்கேன். படிக்கமுடியலையே என்கிற வருத்தம் இல்லாத அளவுக்கு ஆக்டிங் பயணம் மனநிறைவைக் கொடுத்திருக்கு. ரசிகர்களின் அன்பால் தொடர்ந்து நடிச்சுட்டே இருக்கேன்" என உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை ஶ்ரீஜா. தற்போது, சன் டிவியின் 'விதி' சீரியலில் நிலா கேரக்டரில் அசத்திக்கொண்டிருப்பவர். 

"மீடியா பயணம் தொடங்கியது எப்படி?" 

"பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு. அப்பா சினிமாத் துறையைச் சார்ந்தவர். அவர்மூலம் ஒன்பதாவது படிக்கிறப்போ, கன்னடத்தில் 'அம்பிகா' என்ற சீரியல்ல நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. படிப்புக்கு இடையில் அந்த சீரியல்ல நடிச்சேன். ரெண்டு வருஷத்தில் அந்த சீரியல் முடிஞ்சதும் சினிமா வாய்ப்பு வந்துச்சு. அதனால், கரெஸ்லதான் பிளஸ் டூ முடிச்சேன். காலேஜ் படிக்கும் ஆசை இருந்தும் படிக்க நேரம் கிடைக்கலை." 

நடிகை ஶ்ரீஜா

"சினிமா டு சீரியல் அனுபவம் பற்றி..." 

"டென்த் முடிச்சதுமே, ஜூனியர் என்.டி.ஆரின் முதல் படமான 'நின்னு சூடாலனி' படத்தில் என்னை ஹீரோயினா நடிக்க கமிட் பண்ணினாங்க. ஆனா, என்னை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கு. அதனால், ஜூனியர் என்.டி.ஆரின் தங்கச்சியாகத்தான் நடிக்க முடிஞ்சது. அடுத்தடுத்து மூணு ஹிட் தெலுங்கு படங்களில் ஹீரோயினா நடிச்சேன். பிறகு கன்னடத்தில் பல படங்களில் ஹீரோயின். மறுபடியும் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சு, அந்தப் பயணம் பத்து வருஷங்களாகத் தொடர்ந்துட்டிருக்கு.'' 

"தமிழில் 'பொம்மலாட்டம்' சீரியல்ல கமிட் ஆனது எப்படி?" 

"கன்னடம், தெலுங்கு எனத் தொடர்ந்து மெகா சீரியல்களில் ஹிட் அடிச்சுட்டிருந்த சமயத்தில், 'கொஞ்சிப் பேசலாம்' என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினா நடிச்சேன். அந்தப் படத்தில் என் அப்பாவாக நடிச்ச ராஜ்கிரண் சார், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்தினார். பிறகு, 'பொம்மலாட்டம்' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. ஆரம்பத்தில், சென்னைக்கு வந்து நடிக்கிறப்போ கிளைமேட், ஃபுட் பிரச்னை இருந்துச்சு. ரெண்டு மாசத்திலேயே அந்த சீரியல்ல இருந்து விலகிடலாமான்னுகூட யோசிச்சேன். அப்படி பாதியில் டிராப் பண்றது தப்புன்னு அரை மனசுடனே நடிச்சுகிட்டிருந்தேன். 'பொம்மலாட்டம்' சீரியல் டீம் எனக்கு ரொம்பவே க்ளோஸ் ஆகிட்டாங்க. பலரும் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க. அதனால், கொஞ்ச காலத்துலயே ஹேப்பியா மனநிறைவோடு நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.'' 

நடிகை ஶ்ரீஜா

"இப்போ 'விதி' சீரியல் மூலமாக கம்பேக் கொடுத்திருக்கீங்களே..." 

"ரொம்பவே ஹேப்பியா ஃபீல் பண்றேன். 'பொம்மலாட்டம்' சீரியல் நான்கரை வருஷம் சூப்பரா போச்சு. அந்த சீரியல்ல நடிச்ச எல்லா ஆர்டிஸ்டும் ஒரே ஃபேமிலியா பழகினோம். போன வருஷம் அந்த சீரியல் முடியஞ்சப்போ ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேரை மிஸ் பண்றோமேன்னு ஃபீலிங்ஸோடுதான் ஊருக்குப்போய் கன்னட சீரியலில் நடிச்சுட்டிருந்தேன். 'இந்த வருஷம் பிப்ரவரியில் 'விதி' சீரியல் பண்றோம். நீங்கதான் ஹீரோயின்'னு கூப்பிட்டாங்க. சந்தோஷமா வந்தேன்.'' 

நடிகை ஶ்ரீஜா

''தொடர்ந்து மெகா சீரியல்களில் நடிக்கிறது சலிப்பா இல்லையா?''

(சிரிப்பவர்), "இல்லவே இல்லை. மூணு மொழிகளில் வெரைட்டியான கேரக்டர்களில் நடிச்சுட்டிருக்கேன். ஒவ்வொரு சீரியலும் நாலு வருஷம் ஒளிபரப்பாகும். இப்படி 15 மெகா சீரியல்களில் நடிச்சு எல்லாமே சூப்பர் ஹிட். இந்தக் கொடுப்பினை எல்லோருக்கும் கிடைக்குமான்னு தெரியலை. கடவுளோட ஆசிர்வாதம் எனக்குக் கிடைச்சிருக்கு. உற்சாகமா நடிச்சுட்டிருக்கேன். ஒவ்வொரு சீரியல் மூலமாகவும் எனக்குப் புதிய நண்பர்கள், குடும்ப உறவுகள் கிடைக்கிறாங்க. அதனால், ரசிச்சு நேசிச்சு தொடர்ந்து நடிச்சுட்டிருப்பேன்" எனப் புன்னகைக்கிறார் ஶ்ரீஜா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close