Published:Updated:

`நான் நடிச்ச மற்ற படங்கள்  ஃபேமஸ் ஆகலை... மாஸா நடிச்ச  ஒரே படம் உலக ஃபேமஸ்!' #1YearOfKGF

KGF Chapter 2
KGF Chapter 2

`ராக்கிங் ஸ்டார்' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், `மே ஐ கம் இன்' எனத் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து ஒரு வருடம் கடந்துவிட்டது.

இந்திய மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் சினிமா. ஒவ்வொரு வாரமும் புதுப்புது திரைப்படங்களும் திறமையான இயக்குநர்களும், அசாதாரணமான நடிகர்களும் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு வரை, தமிழகத்தில் `யஷ்' என்ற பெயரை ஆயிரத்தில் ஒருவர்கூட தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று லட்சக்கணக்கான மக்கள் அவருடைய ரசிகர்களாக மாறியிருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

யஷ்
யஷ்

இதை சர்வ சாதாரணமாக நடத்திக் காட்டியவர் கன்னட நடிகர் யஷ். கன்னட ரசிகர்களால் `ராக்கிங் ஸ்டார்' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், `மே ஐ கம் இன்' எனத் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து ஒரு வருடம் கடந்துவிட்டது.

கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து வெளியான படம் `கே.ஜி.எஃப்'. மசாலாவோடு மாஸ் கலந்த இத்திரைப்படத்தை பிரஷாந்த் நீல் என்பவர் இயக்கினார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகி, மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

KGF
KGF

``விதியோட விளையாட்டுல அன்னைக்கு ராத்திரி ரெண்டு சம்பவங்கள் நடந்துச்சு. தங்கச் சுரங்கமும் பொறந்துச்சு... அவனும் பொறந்தான்'' என உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் படத்தில், ``நீ எப்படி வேணும்னாலும் வாழு... ஆனா, சாகும்போது பெரிய பணக்காரனாதான் சாகணும்" என்ற தாயின் சொல்லை மனதில் வைத்துக்கொண்டு வெறியுடன் வளர்கிறான் ராஜ கிருஷ்ண வீரய்யா.

ஒரு கட்டத்தில் நீளமாக இருக்கும் இவனது பெயர் ராக்கியென மாறுகிறது. காட்சிக்குக் காட்சி பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும், படத்தின் கதை முழுவதும் ராக்கியின் கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது.

KGF
KGF

பொதுவாக, தமிழ் சினிமாக்களில், நான்கைந்து மாஸ் காட்சிகள் இருந்தாலே திகட்டிவிடும். ``கொஞ்சமா செதர்ற ரத்தத்தைப் பார்த்தே நீ பயப்படுறேன்னா... இனி இங்க ரத்த ஆறே ஓடப் போகுது'' என்ற வசனம்போல், ரத்தத்துடன் கலந்த மாஸான காட்சிகளில் யஷ் தனித்து நிற்கிறார். 170 நிமிட திரைப்படத்தில் 150 நிமிடங்களுக்கு மாஸ் காட்சிகள் மட்டும்தான். ராக்கியின் கதாபாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் மாஸைக் கூட்டிக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு காட்சியில், அடியாளின் கையை உடைத்து, அதிலேயே தன் தலைமுடியை சரி செய்து மாஸ் காட்டுகிறார் யஷ்.

யஷ்
யஷ்
``ஹேய் பட்டான்... யாரோ 10 பேர அடிச்சு டான் ஆனாவன் இல்லடா நானு... நான் அடிச்ச 10 பேருமே டான்தான்."
KGF Chapter 1

தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்கும் சாதாரண கேங்ஸ்டர் கதையாகத் தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் சரித்திர படத்தைப் போன்ற ஒரு பிரமாண்டத்தோடு ரசிகர்களை சீட் நுணிக்குக் கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்திவிடுகிறது. திரைப்படத்தில் யஷ் வரும் ஒவ்வொரு காட்சியும் ஆக்‌ஷனில் முடிகிறது. இந்தத் திரைப்படம் வெளியான அன்று பரவலாகப் பேசப்பட்டாலும், தமிழகத்தில் இரண்டு நாள்கள் கழித்துதான் எதிர்பார்ப்பு அதிகமானது. ``எட்டு ஷூக்கு பாலீஷ் போட்டாதான் எனக்கு ஒரு பன்னு கிடைக்கும்", ``கேங்கைக் கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர்... ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்" போன்ற கே.ஜி.எஃபின் ஒவ்வொரு வசனமும் மீம் டெம்ப்ளேட்களாகத் தெறித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, யஷ் மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டார். சிலர் அவரது ஹேர் ஸ்டைலை வைக்கத் தொடங்கினர். இந்த ஒரு படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் ஹீரோவாகப் பதிந்துவிட்டார் யஷ்.

யஷ்
யஷ்
``அடிச்சா இப்படி அடிக்கணும்னு சொன்னார் யாஷ்..." - KGF Stunt Masters Anbariv | Kaala

தென்னிந்தியத் திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போல கன்னடப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்காது. கன்னடப் படங்களுக்கென்று பெரிய அடையாளங்களும் இதுவரை இல்லாமல் இருந்தது. இதை ஓரளவு மாற்றி எழுதியது `கே.ஜி.எஃப்'.

KGF
KGF

நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து, டிவியில் அறிமுகமாகி, பின்னர் சினிமாவில் நுழைந்து வெற்றிகரமான நாயகனாக வளர்ந்துள்ள யஷுக்கு மட்டுமல்ல, கன்னட சினிமாவுக்கும் அடுத்தகட்ட பாய்ச்சல் என்றே இப்படத்தைச் சொல்லலாம். இன்று யஷ் எந்த மேடை ஏறினாலும் `சலாம் ராக்கி பாய்'தான் பின்னணிப் பாடலாக ஒலிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாட, யஷ் ரசிகர்கள் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவியும், பால் அபிஷேகமும் செய்தனர். அமேசான் ப்ரைமில் திரைப்படம் வெளியானபோதும், சமூக வலைதளங்களில் வைரல் கன்டென்ட்டும் இந்தப் படம்தான்.

KGF
KGF

2019-ல் இந்தியாவில் அமேசான் ப்ரைமில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாகவும் `கே.ஜி.எஃப்' உள்ளது. இந்தத் திரைப்படம், சர்வதேசத் திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள் எனப் பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளது. கன்னட சினிமாவில் என்றும் பேசப்படக்கூடிய படங்களில் மிகமுக்கியமான படமானது கே.ஜி.எப். இந்தத் திரைப்படம், கன்னட திரையுலகைப் பற்றி இந்திய அளவில் பேசவைத்தது.

KGF
KGF

திரைப்படம் வெளியான முதல்நாளிலேயே 25 கோடி வசூல் செய்தது. பெங்களூரில் மட்டும் முதல் நாளில் 5 கோடி வசூல். முதல் வார இறுதியில் அனைத்து மொழி பதிப்புகளிலும் 113 கோடி வசூல் செய்தது. 50 நாள்களில் 250 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடித்தது. அமெரிக்காவில் முதன்முறை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படமும் இதுவே. கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைச் செய்தது இந்தத் திரைப்படம். கன்னட சினிமாவில் 100 கோடி, 200 கோடி, 250 கோடி என வசூல் செய்த முதல் திரைப்படமும் இதுதான்.

KGF
KGF

பிரமாண்ட வெற்றியைக் கொடுத்த முதல் பாகத்துக்குப் பிறகு, `கே.ஜி.எஃப் 2' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் வில்லனாகப் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். மேலும், பல்வேறு தமிழ் நடிகர்களும் இதில் நடித்துவருகின்றனர். தற்போது,`கே.ஜி.எஃப்' முதல் பாகம் வெளியாகி ஒரு வருடம் கடந்துவிட்டது. இதைக் கொண்டாடும் வகையில் மாஸான ஃபர்ஸ்ட் லுக் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.

KGF Chapter 2 FirstLook
KGF Chapter 2 FirstLook
Vikatan

வருகிற ஜனவரி 8-ம் தேதி, நடிகர் யஷ் பிறந்த நாள் பரிசாக `கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகிறது. ரத்தம் தெறிக்கத் தெறிக்க தயாராகி வரும் `கே.ஜி.எஃப் 2' திரைப்படம், 2020 ஜூலை மாதம் வெளியாகும் என்று அனைத்து தரப்பு ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு