Published:Updated:

``ஓவியா ஒரு காவியம்... பிக் பாஸ் வெற்றியாளர் யார்?’’  - சீனு ராமசாமி #CelebrityAboutBiggBoss

``ஓவியா ஒரு காவியம்... பிக் பாஸ் வெற்றியாளர் யார்?’’  - சீனு ராமசாமி #CelebrityAboutBiggBoss
``ஓவியா ஒரு காவியம்... பிக் பாஸ் வெற்றியாளர் யார்?’’  - சீனு ராமசாமி #CelebrityAboutBiggBoss

தமிழ்த் தொலைக்காட்சி உலகுக்கு, ரியாலிட்டி ஷோக்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், புதிய களம், புதிய கான்செப்ட்டுகளுடன் களமிறங்கிய `பிக் பாஸ்' நிகழ்ச்சி, தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அந்த வீட்டில் உள்ள போட்டியாளருடன் நம் ஒவ்வொருவரையும் பொருத்திப்பார்த்து, ‘ஓ... நாமளும் இப்படித்தானே இருக்கிறோம்!’ என, தன்னிலை உணர முடிந்தது. அந்த வகையில் `பிக் பாஸ்' நம் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாடம். இது சாமானியர்களுக்கு மட்டுமல்ல, பிரபலங்களுக்கும். ஏனெனில், சினிமா பிரபலங்கள் பலர், `பிக் பாஸை' தொடர்ந்து பார்த்துவருகிறார்கள். அவர்களில் சிலரிடம், ‘இந்த `பிக் பாஸ்' மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன', `போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார் யார்...' என்று சில கேள்விகளை வைத்தோம். அதற்கு அவர்கள் தரும் பதில்கள், பொது ரசனையுடன் பொருந்துகிறதா என்பதைப் பார்ப்போம்.

அந்த வகையில், `பிக் பாஸ்’ பற்றிய சில கேள்விகளுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் பதில்கள்...

`` `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள், `இன்னும் பிரபலமாக வேண்டும்; வெற்றிபெற வேண்டும்’ எனத் துடிப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள். ஒருவித மன அழுத்தத்தோடு இருப்பார்கள். அவர்களை ஒரே இடத்தில் இயல்பாக இருக்கவைப்பதற்கான முயற்சி நடக்கிறது. அப்போது, அவர்களின் உண்மையான கண்ணீர், அன்பு, பிரிவைக் காண முடிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு திரைக்கதையாளன் இருப்பதுபோல தோன்றியது. நுட்பமான முறையில் ஒரு விநோதம் அவர்களை ஆட்டிப்படைத்ததை என்னால் உணர முடிந்தது. ஒருவர் மீதான அபிப்பிராயம் உயர்வதும், தாழ்வதும் அவருடைய நடத்தை, சொற்களின் வெளிப்பாடு ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதே சமயம், ஊடகம் நினைத்தால் ஒருவரைப் பற்றிய அபிப்பிராயத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் முடியும் என்ற அச்சமும் இல்லாமல் இல்லை.”

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என நீங்கள் நினைப்பவை...''
``பெண்கள் உடுத்தும் உடையின் நோக்கம் ஆண்களின் கண்களைப் பழுதாக்குவதாக இருந்தது. இதை நீங்கள், `பெண் சுதந்திரம்' எனச் சொல்ல வந்தால், `உடைதான் ஒரு பெண்ணுக்கு கட்டுப்பாடா?' எனக் கேட்க வந்தால், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் ஆபத்து என்பதை நாம் உணராமல் இருக்கக்கூடாது. சுதந்திரம் என்பதே கட்டுப்பாடுதான். அந்த வகையிலும் புறணி பேசுவது ஊக்குவிக்கப்பட்டு, அது சுவாரஸ்யமாக பிறர் பார்க்கும் வகையில் சில திண்ணைப் பேச்சு வீரர்களைச் சந்தித்ததாக உணர்ந்தேன்.”

`` `பிக் பாஸ்' தொகுப்பாளராக கமல் தன் பணியை எப்படிச் செய்கிறார்?”
``முதலில் ஆச்சர்யம். ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில் கமல் சார், தமிழ் சினிமாவில் சிவாஜி ஸ்தானத்தில் இருக்கிறார். வெளியே அனல் பறக்கும் அரசியல் ட்வீட்டுகள்;  உளவியல் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய சொற்பொழிவுகள். இவை இரண்டிலும் தனது உன்னதமான பணியை அவர் நிறைவாகச் செய்துவருகிறார். ஒரு கலைஞனிடம் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் அதில் அந்தக் கலைஞனின் கலைத்திறமை மின்னும் என்பதற்கு, மிகச் சரியான சாட்சி கமல்தான். அவர் ஒரு சகலகலாவல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.”

``உங்கள் மனதுக்கு நெருக்கமான போட்டியாளர் யார்?”
``எனக்குப் பிடித்த போட்டியாளர்கள் ஓவியா, வையாபுரி, காயத்ரி. ஓவியாவை எந்த அளவுக்குப் பிடித்திருந்ததோ, அதே அளவுக்கு காயத்ரியையும் பிடித்திருந்தது. ஏனென்றால், காயத்ரி, மனதில் உள்ளதை மறைக்காமல், பாசாங்கு செய்யாமல், பொட்டில் அடித்ததுபோல பேசினார். ஓவியா மாதிரியான பெண்கள், கவித்துவமான காவியம். அவர்களைப் பார்ப்பது அபூர்வம். ஓவியாவிடமிருந்தது ஒரு வகையான அழகு என்றால், காயத்ரியையும் அவ்வாறு உணர முடிந்தது. வெவ்வேறுவிதமான பெண்கள் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை, இன்னும் நெருக்கமாக உணர்த்தியது. சில விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அது குறையோ, குற்றமோ அல்ல. வெளிப்படுத்தும்முறை தெரியாமல் இருக்கலாம். நெருங்கிப் பழகினால்தான் அவர்களின் நல்ல இயல்பு தெரியும். வெளிப்படுத்தும் முறையில்தான் இருவரும் வித்தியாசப்படுகிறார்கள். அப்படி வைத்துப்பார்க்கும்போது, காயத்ரியிடம் சில நல்ல இயல்பு இருந்ததை நான் பார்த்தேன்.”

`` `பிக் பாஸ்' வெற்றியாளர் யாராக இருக்கும் என உங்களால் கணிக்க முடிகிறதா?”
``போட்டி, கடுமையாக இருக்கிறது. சினேகன் மற்றும் கணேஷ் இருவரில் ஒருவர் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஓவியா, காயத்ரியைப் போன்றவைதான். இந்த இரண்டு வகையான ஆண்கள்தான் சமூகத்தில் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஒன்று, தெளிவாக விளக்கி, அதிலிருந்து தப்பித்துக்கொள்வது. இரண்டு, விளக்குவதுபோல அதிலிருந்து தப்பித்துக்கொள்வது. இதில் யார் வெற்றிபெறப்போகிறார் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.”

பின் செல்ல