Published:Updated:

“என்னைப் பார்த்தாலே ஏ.ஆர்.ரஹ்மான் சார் பயந்து ஓடுவார்! - இசைக்கோர்ப்பு தருணம் பகிரும் மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குநர் #VikatanExclusive

“என்னைப் பார்த்தாலே ஏ.ஆர்.ரஹ்மான் சார் பயந்து ஓடுவார்! -  இசைக்கோர்ப்பு தருணம் பகிரும் மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குநர் #VikatanExclusive
“என்னைப் பார்த்தாலே ஏ.ஆர்.ரஹ்மான் சார் பயந்து ஓடுவார்! - இசைக்கோர்ப்பு தருணம் பகிரும் மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குநர் #VikatanExclusive

“என்னைப் பார்த்தாலே ஏ.ஆர்.ரஹ்மான் சார் பயந்து ஓடுவார்! - இசைக்கோர்ப்பு தருணம் பகிரும் மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குநர் #VikatanExclusive

“நான் ஜெயமோகனின் தீவிர வாசகன். அவருடான நட்பின் மூலம்தான் நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அப்போது மணி சார்  'பொன்னியின் செல்வன்' பட வேலைகளைத் தொடங்கியிருந்த நேரம்... ” இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா என்கிற தனசேகர் இப்போது இயக்குநர் பாரதிராஜா, பாடகர் விஜய் யேசுதாஸ் நடிக்கும் ‘படைவீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பட ரிலீஸுக்கான வேலைகளில் இருந்தவரிடம் பேசினேன். 

'' என்  சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். ப்ளஸ் டூ வரை அங்கேதான் படித்தேன். காலேஜ் படிக்கும்போதுதான் சென்னை வந்தேன். எம்.சி.ஏ முடித்துவிட்டு பத்து வருடம் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகம் இருந்தது. ஜெயமோகனின் தீவிர வாசகன். அவருடைய புத்தகங்கள் படித்துவிட்டு அவரைச் சென்று பார்த்தேன். அந்த நாளிலிருந்து எனக்கும் அவருக்குமான நட்பு வளர்ந்தது. பிறகு அவருடைய இதழ்களில் நிறையச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

ஜெயமோகன் தன் சொந்த ஊரான நாகர்கோவிலிலிருந்து மணிரத்னம் சாரை பார்க்க குறிப்பிட்ட இடைவெளியில் சென்னை வருவார். அந்த சமயங்களில் ஜெயமோகன் சாரை சென்னையில் நான்தான் அழைத்துச்சென்று ரூமில் விடுவேன். அப்படி ஒருமுறை போகும்போது மணிரத்னம் சாரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாஞ்சில் நாடன் சார்க்கு ஒரு விழா நடத்தினோம் அந்த விழாவை நான் தொகுத்து வழங்கினேன். அப்போது மணிசார் என்னை வெகுவாகப் பாராட்டினார். 

அது, மணி சார் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கத் தயாராகிக்கொண்டிருந்த நேரம். அந்தப் படத்துக்கு ஜெயமோகன் சார்தான் திரைக்கதை எழுதுவதாக இருந்தது. அப்போது மணி சாருக்கும், ஜெயமோகன் சாருக்கும் இடையே நிறைய விவாதங்கள் நடக்கும். அப்போது மணி சார்க்கு தமிழ் இலக்கியம் நன்கு பரிட்சயமான ஒருவர் உதவி இயக்குநராகத் தேவைப்பட்டார். அதனால், ஜெயமோகன் சார் '' நீ ஏன் தனாவை உன்னுடன் வெச்சுக்கக் கூடாது'' என்று மணி சாரிடம் கேட்டிருக்கிறார். மணிரத்னம் சாருக்கும் அது சரி என்று படவே ''ஆபீஸுக்கு வரமுடியுமா என்று எனக்கு மெஜேஜ் அனுப்பினார். ‘எதற்காகக் கூப்பிட்டார்...’ என்ற யோசனையிலேயே அவரது ஆபீஸ் சென்றேன். 

போன உடனேயே  ''உனக்கு என்னுடன் சேர்ந்து வேலைப் பார்ப்பதில் உடன்பாடா'' என்றார். அவரே கேட்டபிறகு யோசிக்க என்ன இருக்கிறது ‘ஓகே சார் என்றேன். உடனே அவருடன் வேலைபார்க்க ஆரம்பித்துவிட்டேன். கடந்த ஐந்தரை வருடங்களாக மணி சாருடன்தான் என் பயணம் தொடர்கிறது.

மணி சார்,  அவரது வீட்டில் மனைவியுடன் இருந்ததைவிடவும், நான் என் பெற்றோருடன் இருந்தைவிடவும் அதிக நாள்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக சினிமா வேலைகளைப் பார்த்துள்ளோம். ஏதாவது ஸ்க்ரிப்ட் எழுத வேண்டுமானால் கொடைக்கானல் சென்று விடுவோம். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தெல்லாம் ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறோம். அவருடைய எல்லா ஸ்க்ரிப்ட் டிஸ்கஷனிலும் நான் இருந்திருக்கிறேன். அப்படி விவாதிக்கும்போது நான் சொன்ன ஒரு கதைதான் என் முதல் படம் 'படைவீரன்'-ஆக வளர்ந்துள்ளது.

'படைவீரன்' படத்தின் ஸ்க்ரிப்டை யாரிடமும் நான் பெரியதாகச் சொல்லி சான்ஸ் கேட்கவில்லை. இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை என் அண்ணன் படித்துவிட்டு ‘நாமளே இந்தப் படத்தைத் தயாரிப்போம்’ என்று  முன்வந்தார். தேனி மாவட்டத்தில் ஒரு எட்டுத் தெருக்கள் கொண்ட கிராமத்தில் நடக்கக்கூடிய கதை. அங்கே இருக்கும் ஒரு இளைஞனின் ஒரு வருட கதைதான் இந்தப் படம். ஒரு திருவிழாவில் ஆரம்பித்து அடுத்த திருவிழாவில் படம் முடியும். அதற்கிடையில் நடக்கக்கூடிய காதல், துரோகம்... என இந்தப் படம் பேசும். இரண்டு உண்மையான கதையைப் பின்னி அமைக்கப்பட்டதுதான் 'படைவீரன்'. 

“இந்தப் படத்துக்குள் விஜய் யேசுதாஸ் எப்படி வந்தார்?”

“இது ஸ்டார் வேல்யூ உள்ள ஒரு ஹீரோ பண்ண வேண்டிய படம் இல்லை. ஜூரோவிலிருந்து ஆரம்பிக்கக்கூடிய ஒருவன் ஹீரோவாக வேண்டிய படம்.  ஹீரோ புது ஆளாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மக்களுக்குப் பரிச்சயமானவராகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விஜய் சாரின் ஹைட், மேனரிசம் எனக்குத் தெரியும். அதனால்,விஜய் யேசுதாஸை தேர்ந்தெடுத்தேன். என் படத்துக்கு நீங்கள்தான் ஹீரோ என்று விஜய் யேசுதாஸிடம் சொன்னவுடன் முதலில் சிரித்தார். ''என்ன ப்ரோ எதாவது கேரக்டர் ரோல் கொடுப்பீங்கனு பார்த்தால் ஹீரோ ரோல் கொடுக்குறீங்க’ என்று கேட்டார். அவரின் அம்மாவே, ''ஏப்பா உனக்கு இந்த வேலையெல்லாம்'' என்று சிரித்தார்கள். 

“பாரதிராஜாவுக்குப் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம்?”

“இதில்  ஒரு முக்கியமான ஆளுமை பாரதிராஜா. 60 வயதில் இருக்கும் பெரியவர்தான் படத்தின் உண்மையான ஹீரோ. எட்டுத் தெரு இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் அர்ஜுனனும், கிருஷ்ணனும்தான் பாரதிராஜாவும், விஜய் யேசுதாஸும். பொய், புரட்டு, பெண்கள் சில்மிஷம் எல்லாமே பாரதிராஜா சார் செய்வார். கிருஷ்ண லீலைகளின் எல்லா அம்சங்களும் அவருடைய கேரக்டருக்கு இருக்கும். ஆனால், கிருஷ்ணா கீதையை போதிக்கக்கூடிய ஒருவர். அதைத்தான் படத்தில் பாரதிராஜா செய்திருக்கிறார்.

என் அப்பாவைப் போல் அவர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் நடந்துகொண்டார். ''ஏன் இதற்கெல்லாம் இவ்வளவு செலவு, கம்மி பண்ணு''' என்று அதட்டுவார். அவரிடம் படத்தின் ஒரு லைன் மட்டும்தான் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு முதலில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு ஒருநாள் வீட்டுக்குக் கூப்பிட்டு வயிறு நிறையச் சாப்பாடு போட்டுவிட்டு ''இப்போது ப்ரீயா இருக்கீயா, படத்தின் ஃபுல் ஸ்டோரி சொல்லு'' என்றார். நான் முழுக்க நடித்தே காட்டினேன். அவர் ரொம்ப ரசித்துக் கேட்டார். ஒரு பதினைந்து நாள்தான் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால், ஏழு நாளிலேயே அவர் போஷன் முடித்துவிட்டோம். பாரதிராஜாதான் இந்த கேரக்டருக்குச் சரியாக இருப்பார் என்று மணிசார்தான் என்னிடம் சொன்னார்.”

“இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா எப்படி இந்தப்படத்துக்குள் வந்தார்?”

“கார்த்திக் ராஜா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சரியான ஒரு தளத்தில் இல்லாததால் மட்டுமே அவர் தேங்கியிருப்பதாக  நினைப்பேன். இது, கார்த்திக் ராஜாவுக்கு ஒரு கம்பேக்காக இருக்கும். இந்தப் படத்தின் இசைக்கு எனக்கு எண்பதுகளின் ரசனைத் தேவைப்பட்டது. மனதுக்குள் போகிற மியூசிக் வேண்டும். ராஜா சார் பிளேவர் தேவைப்பட்டது. இளையராஜா சார் இசையமைத்திருந்தால் ரொம்ப நன்றாகயிருந்திருக்கும். ஆனால், அவரிடம் பேசுவதற்கு எனக்குத் தயக்கமிருந்தது. ''ராஜா ஒரு மேதை’ என்று மணிசார் என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். இளையராஜாவைக் கடவுளாகவே பார்த்துவிட்டேன். அவரிடம் சென்று இது வேண்டுமென்று கேட்க பயம். அதனால்தான் கார்த்திக்ராஜாவைத் தேடிப் போனேன்.” 

“தனுஷ் படம் பார்த்துவிட்டு உங்களைச் சந்தித்ததாகச் சொன்னார்களே?”

“ஆமாம் விஜய் யேசுதாஸும் தனுஷூம் நண்பர்கள். ‘நீங்கள் படம் பார்க்கணும்’ என்று தனுஷுடம் விஜய் கேட்டிருக்கிறார். தனுஷ் சம்மதிக்க நான் க்யூப்பை தனுஷின் ஆபிஸுக்கே கொடுத்துவிட்டேன். ஆனால், நான் போகவில்லை. பட இடைவெளியின்போது, தனுஷ், எனக்கு போன் பண்ணி ''உங்களைப் பார்க்க வேண்டும். ஆபிஸுக்கு வரமுடியுமா'' என்றார். நான் போனேன். 

ஒரு மணி நேரம் படம் பற்றி பேசியவர், ''பத்தாவது நிமிடத்திலேயே படத்துக்குள் சென்றுவிட்டேன். இது நான் பண்ணவேண்டிய படம். யாருக்காக  இந்த ஸ்க்ரிப்ட் எழுதுனீங்க' என்று கேட்டார். ‘இந்த நேரத்தில் சொன்னால் அது தவறாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை ஸ்க்ரிப்ட் உங்களுக்காகத்தான் எழுதினேன்’ என்றேன். 

ஆமாம், இந்த ஸ்க்ரிப்ட் எழுதும்போது என் மைண்டில் தனுஷ் இருந்தார். ஆனால், அந்த நேரத்தில் ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய படத்துக்காக ஸ்க்ரிப்ட் எழுதும்போது என்னைக் கூப்பிட்டு  டிஸ்கஷ் பண்ணினார். ஐஸ்வர்யா கூப்பிட்டு ஒரு வேலைகொடுக்கும்போது, அந்த நேரத்தில், ‘தனுஷு க்காக ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கு’ என்று  சொன்னால் நன்றாகயிருக்காது என்று அவரிடம் இந்த ஸ்க்ரிப்ட் பற்றி பேசவே இல்லை. இதை தனுஷிடம் சொன்னேன். ''நீங்கள் எப்படியாவது இந்த ஸ்க்ரிப்டை என்னிடம் கொடுத்திருக்கலாம்'' என்றார். ஆனால் அந்தக் குறையும் போகும் வகையில், இதில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஆனால், என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வாங்கி இருக்கிறார். அதில் நடிப்பாரா, மாட்டாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.”

“மணிரத்னம்-ஏ.ஆர் ரஹ்மான் இணையின் 25 வருட வெள்ளி விழா டாக்குமென்ட்ரியை இயக்குனீர்கள். அதில் என்ன ஸ்பெஷல்?”

“ஏ.ஆர். ரஹ்மான் சாருடன் எனக்கு ஒரு நல்ல நட்பு இருந்தது. மணி சாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததால், ரஹ்மான் சாரின் ஆபிஸுக்கு அடிக்கடி செல்வேன். பாடல் ரெக்கார்டின்போது ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன்கூடவே இருப்பேன். அவரை அடிக்கடி பார்த்தாலும் எனக்கு எப்போதும் பிரமாண்டமாகத்தான் தெரிவார். மணிசாரின் உதவியாளராக நான் இருந்தாலும் என்னைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து ''ஒரு லைன் சொல்லுடா மியூசிக் பண்ணுவோம்'' என்பார். அவர் கம்போஸ் பண்ணும்போது அவருடன் இருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். 

அவரை ஸ்டூடியோவில் பார்ப்பதற்கு காலையிலிருந்து இரவு வரை வெயிட் பண்ணுவேன்.அப்போது என்னைப் பார்த்தாலே பயந்து ஓடுவார். அவர் ஒரு மின்னல் மாதிரி, எந்த நேரத்துக்கு வருவார், போவார் என்றே தெரியாது. அதனால் அவரைப் பார்க்க விடியவிடியக் காத்திருப்பேன். '‘ஏண்டா வீட்டுக்கெல்லாம் போக மாட்டியா, சாப்பிட மாட்டியா? உனக்கு பயந்துகிட்டே சுத்தி சுத்தி வரவேண்டியதா  இருக்கு’ என்பார். திடீரென்று ஒருநாள் நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் ஒரு சிஸ்டம் கொண்டுவந்து வைத்தார். ''நீ வீட்டுக்குப் போற மாதிரி தெரியலை, சும்மா உட்கார்ந்து இருக்கிற நேரத்தில் இதில் எதாவது ஒர்க் பண்ணு’ என்றபடி சென்றார். 

எனக்கு ரஹ்மான் சார், மணிசார் இருவரையும் நன்றாகத் தெரியும் அதனால்தான் இருவரையும் வைத்து டாக்குமென்ட்ரி ஃபிலிம் பண்ணினேன். 'படைவீரன்' படத்தின் ப்ரீபுரொடக்‌ஷன் வேலை போய்க்கொண்டிருந்த சமயத்தில் மணி சார் என்னைக் கூப்பிட்டு இதைப் பண்ணச் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து அழைத்து ஒரு படத்தை இயக்கச்சொன்னதாகவே அந்தத் தருணத்தை உணர்ந்தேன்.”

அடுத்த கட்டுரைக்கு