Published:Updated:

“தமிழ் புரியாமல் அழுதேன்... இப்போ, தமிழ்தான் என் அடையாளம்!” - ‘பிக் எஃப்.எம்’ ஆர்.ஜே மிருதுளா

“தமிழ் புரியாமல் அழுதேன்... இப்போ, தமிழ்தான் என் அடையாளம்!” - ‘பிக் எஃப்.எம்’ ஆர்.ஜே மிருதுளா
“தமிழ் புரியாமல் அழுதேன்... இப்போ, தமிழ்தான் என் அடையாளம்!” - ‘பிக் எஃப்.எம்’ ஆர்.ஜே மிருதுளா

‘பிக் எஃப்.எம்’ வார நாள்களில் தினமும் காலை பதினொரு மணி முதல் இரண்டு மணி வரை 'உள்ளே வெளியே' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர், ஆர்.ஜே மிருதுளா. பல சவால்கள், போராட்டங்களைச் சந்தித்தே இந்த இடத்தைப் பிடித்துள்ளார். அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 

“நிறையக் கட்டுப்பாடுகளால் எழுப்பப்பட்டது எங்கள் குடும்பம். முக்கியமாக, எங்க குடும்பத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள், எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கிறது பெரிய விஷயம். பத்தாம் வகுப்பு தாண்டாத பல பெண்கள் எங்கள் குடும்பத்தில் உண்டு. அப்படியொரு குடும்பத்தில் பிறந்து எம்.ஏ முடித்து, பி.ஹெச்.டி. அப்ளை பண்ணியிருக்கேன். கலாசாரம் என்கிற பெயரிலும், பெண்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரிலும் கல்லூரிக்கு அனுப்பாமல், கல்யாண வயசு வந்ததும் கட்டிக்கொடுத்துடுவாங்க. எனக்கும் அப்படி நடந்துடக் கூடாதுனு உறுதியாக இருந்தேன். என் அண்ணன்கள் இரண்டு பேரும் பெரிய படிப்பு படித்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறாங்க. அவங்க படிச்சுட்டு இருக்கும்போது, என்னை நிறுத்தும் சூழ்நிலை வந்துச்சு. அதுக்கு நான் அனுமதிக்கலை. 'அண்ணன்கள் படிக்கும்போது நான் மட்டும் ஏன் ஸ்கூலுக்குப் போகக் கூடாது?'னு எதிர்த்து நின்னேன்' என்று தனது போராட்டத்தைக் குடும்பத்திலிருந்து ஆரம்பித்துள்ளார் மிருதுளா. 

''பிடிவாதமாகப் பள்ளிக்குப்போய் படிக்க ஆரம்பிச்சு, கல்லூரியிலும் கால் பதிச்சேன். என் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி பெண் என்கிற பெயரையும் வாங்கினேன். எனக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து சாதிக்கவும் செய்திருக்கேன். இப்போ, எல்லோரும் சந்தோஷமாக என் பெயரை உச்சரிக்கிறாங்க. அப்பா சென்னையில் ஒரு மளிகைக் கடை வெச்சிருக்கார். எங்க கடையில எப்பவும் எஃப்.எம் ஒலிச்சுட்டே இருக்கும். முக்கியமா, நான் பண்ற ஷோ டைமில் கடைக்கு வர்றவங்களிடம், 'என் பொண்ணுதான் பேசுது'னு பெருமையா சொல்றார். அன்னிக்கு அப்பா, அம்மாவோடு ஃபைட் பண்ணி வெளியே வந்தது சரியான முடிவுதான் என்கிற திருப்தியைக் கொடுக்குது. 

''என் டெடிகேஷன், உழைப்பு எல்லாமே அப்பாக்கிட்ட இருந்து வந்ததுதான். விவசாயிகள் எப்படிச் சாகும் வரைக்கும் விவசாயத்தை விடமாட்டாங்களோ, அப்படி தன் சுயதொழிலைச் செய்துக்கிட்டு கடைசி வரை யாரையும் எதிர்பாராமல் வாழணும் என்கிற வைராக்கியம் என் அப்பாவுக்கு. அந்த வைராக்கியம் எனக்கும் இருக்கிறதில் ஆச்சர்யமில்லை. நான் படிக்க வரும்போது, எனக்கான தடைகளை உடைக்க வேண்டியிருந்துச்சு. 'உங்க மகள் எந்தவிதத்திலும் வழிமாறிப் போயிடமாட்டா' என்கிற நம்பிக்கையை அவங்க ஆழ்மனசில் பதியவெச்சேன். வீட்டுக்கு ஒரே பெண் பிள்ளை என்பதால், ஐந்தாம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கவெச்சாங்க. திடீர்னு அரசுப் பள்ளியில், தமிழ் மீடியத்துக்கு மாற்றினாங்க. ஆங்கிலத்திலேயே இத்தனை வருஷம் படிச்சுட்டு தமிழுக்கு மாற என்னால் முடியலை. முதல் நாள் ஸ்கூல் முடிஞ்சு வீடு வந்தததும் அம்மாக்கிட்ட, 'கம்ப்யூட்டருக்கு கணினி, கணிப்பொறி'னு இரண்டு பேர் சொல்றாங்க. என்னால் புரிஞ்சுக்க முடியலை. கஷ்டமா இருக்கு'னு அழுதேன். 

ஆனால், இன்றைக்குத் தமிழ்தான் என்னுடைய அடையாளம். 'சரியாகத் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கிறீங்க'னு பலரும் பாராட்டுறாங்க. பெரும்பாலும் ஸ்கூல் முடிச்சு காலேஜ் படிக்கப்போகும் மாணவர்களை, 'அடுத்து என்ன படிக்கப்போறீங்க? என்னவாகப் போறீங்க?'னு கேட்பாங்க. நான் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது வகுப்பு ஆசிரியர் இதே கேள்வியைக் கேட்டார். வகுப்பில் மொத்தம் 81 பேர் இருந்தோம். அதில் 99 சதவிகிதம் பேர், இன்ஜினீரியரிங் படிச்சு பெரிய இன்ஜினீயராவோம்னு சொன்னாங்க. என்கிட்டே கேட்டப்போ, 'என்னை நூறு பேருக்காவது தெரிஞ்சிருக்கணும். அப்படியொரு வேலைக்குப் போகணும்'னு சொன்னேன். அவர் மேலேயும் கீழேயும் பார்த்துட்டு 'உட்கார்'னு சொல்லிட்டார். அப்போ, மற்ற மாணவர்கள் என்னை ஒருமாதிரி பார்த்துச் சிரிச்சாங்க. அவ்வளவு ரணமாக இருந்துச்சு. சமீபத்தில், எங்கள் வகுப்பாசிரியரைச் சந்திச்சேன். ரொம்ப சந்தோஷமா, 'அன்னிக்கு ஏதோ கிறுக்குத்தனமா சொல்றேனு நினைச்சேன். ஆனால், சொன்னதைச் செய்து சாதிச்சிட்டே'னு தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். இன்னும் பலருக்குத் தெரியாத விசயம் ஒண்ணு இருக்கு. என்னுடைய நிஜப் பெயர் வேல்விழி. இந்தப் பெயரைப் பிடிச்சிருந்தாலும், வேறு பெயர்வைக்கச் சொல்லி வீட்டில் சண்டைப் போட்டவள் நான்'' என்று சிரிக்கிறார் மிருதுளா. 

“2018-வது வருஷம் பிறந்தால், நான் ஆர்.ஜே வேலைக்கு வந்து பத்து வருஷம் ஆகுது. இத்தனை வருஷம் போனதே தெரியலை. என்ன சாதிச்சோம் என்பதைவிட எதையோ சாதிச்சிருக்கிறதா நினைக்கிறேன். மத்தவங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கேன் என்பதே எனக்குப் பெரிய சந்தோஷம். என் கணவர் ஃபிலிக்ஸ் ஜோ (Felix Joe) தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு சமந்தா என்கிற அழகிய மகள் இருக்கா. யு.கே.ஜி படிச்சுட்டிருக்கா. ஜாலி நிகழ்ச்சிகளைவிடவும், சீரியஸான டாப்பிக்குகளை எடுத்துப் பேச ரொம்பப் பிடிக்கும். ஆக, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரி''' எனக் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிறார் ஆர்.ஜே மிருதுளா.