சமஸ், க.நாகப்பன்
##~## |
''அடடா... மட்ட மத்தியானம். சாப்பிட்டு அக்கடானு கொஞ்சம் கட்டையைச் சாய்க்கலாம்னு பார்த்தா, இப்படி ஒரு சோதனையா? சரி... சோதனை சொல்லிட்டா வரும்? கேளுங்கய்யா... கேளுங்க!'' - சாலமன் பாப்பையா.
''இன்ஸ்டன்ட் மங்காத்தாவா? ஓ.கே. பாஸ், நான் ரெடி!'' கார்த்தி ப.சிதம்பரம்.
''வில்லங்கமா எதுவும் கேட்டா, வில்லங்கமாவே பதில் சொல்வேன்... பரவாயில்லையா?'' - கவிஞர் மாலதி மைத்ரி.
''சினிமாவுல என்னைக் கெட்டக் கெட்ட பையனா காட்டுறாங்க சார். ஆனா, நான் ரொம்ப ரொம்ப நல்ல பையன் சார். இதை ஏன் இங்கே சொல்றேன்னா, வேற எங்கேயும் சொல்ல முடியலை. நீங்க கேள்வி கேளுங்க சார்!'' - வைபவ்.
''ஐ.க்யூ., ஜி.கே-ல எல்லாம் ஸ்கோர் பண்ணிடலாம். ஆனா, வம்புல மாட்டிவிடப் பார்த்தா, நான் எஸ்கேப்!'' - சின்மயி.

சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக ஆளுநரின் முழுப் பெயர் என்ன?
பதில்: கொனிஜெடி ரோசய்யா.
சாலமன் பாப்பையா: ''நம்ம ஆளுநருதானே... அவரு... அட, என்னய்யா... சட்டுனு வர மாட்டேங்குது. திடுதிடுப்புனு கேட்டுட்டீங்களா? ம்... வயசு ஆயிட்டது தெரியுது பார்த்தீங்களா? அட, பொழுதன்னிக்கும் பார்க்குறோம், படிக்குறோம், என்னய்யா, ஆங்... வந்துடுச்சு, ரோசய்யா... பெரியவரு ரோசய்யா!''
கார்த்தி ப.சிதம்பரம்: ''கே. ரோசய்யா!''
மாலதி மைத்ரி: ''ரோஜா பாக்கு மாதிரி ஏதோ ஒரு பேருங்க... ஆங்... ரோசய்யா! அதானே... அதேதான்!''
வைபவ்: ''ஒரு காலத்துல ஆந்திராவுல இருந்தாரு. முதல்வரா இருந்து, கொஞ்ச நாள் வீட்ல மனைவி, மக்களோட ஜாலியா இருந்தவரை கவர்னரா கூட்டிட்டு வந்திருக்காங்க. அவர் பேரு ரோசய்யா!''
சின்மயி: ''ம்... ரோசய்யா!''
செல்பேசியின் ஐ.எம்.இ.ஐ. (I.M.E.I) எண் என்பதன் விரிவாக்கம் என்ன?
பதில்: இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி நம்பர்.
சாலமன் பாப்பையா: ''என்னது... ஐ.எம்.இ.ஐ. நம்பரா? யாருய்யா அதெல்லாம் பார்த்தா? கூப்பிடுற ஆளுக நம்பரையே பார்க்க முடியலை. தெரியலையேய்யா?''
கார்த்தி ப.சிதம்பரம்: ''ஒரு செல்போனோட யூனிக் ஐடென்டிடி நம்பர். ஆனா, விரிவாக்கம்... ப்ச்!''
மாலதி மைத்ரி: ''இடியட் மென் எக்ஸிகியூட்டிவ் இன்டெலிஜென்ஸ் நம்பர்னு போட்டுக்குங்க!''
வைபவ்: ''அது எதுனா கேர்ள் ஃப்ரெண்ட் நம்பர்களை ரகசியமா மறைச்சு வெச்சுக்குற வசதியா இருக்கும்!''
சின்மயி: ''இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி நம்பர்!''

இந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழியில் அந்த ரூபாயின் மதிப்பு குறிப்பிடப்பட்டு இருக்கும்?
பதில்: இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் சேர்த்து 17 மொழிகள்!
சாலமன் பாப்பையா: ''அட என்னய்யா... தோசையைச் சாப்பிடச் சொன்னாங்க. துளையை எண்ணச் சொன்னாங்கங்குற கணக்கா இருக்கு. ரூபாயைத்தான் எண்ணுவோம். அதுல உள்ள மொழியையெல்லாமா எண்ண முடியும்?''
கார்த்தி ப.சிதம்பரம்: ''கையில நோட்டே இல்லையே... எண்ணிச் சொல்ல. ஆனா, எப்படியும் 18, 20 மொழிகள் இருக்கும்!''
மாலதி மைத்ரி: ''இது எனக்குத் தெரியுமே! 17.''
வைபவ்: ''ரூபா நோட்டுல எல்லா மொழியும்தானே இருக்கும்? எனக்கு ரூபாயே சரியா எண்ண வராதுங்க. ஆளை விட்ருங்க!''
சின்மயி: ''10 அல்லது 12 இருக்கும்னு நெனைக்கிறேன். சரியாத் தெரியலை. ஆன்லைன், பிளாஸ்டிக் கரன்சினு போயிருச்சா... ஒரிஜினல் கரன்சியப் பார்த்தே நாளாச்சு!''
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் யார்?
பதில்: ஜி.ராமகிருஷ்ணன்.
சாலமன் பாப்பையா: ''ஆங்... மார்க்சிஸ்ட்... ராமகிருஷ்ணன்!''
கார்த்தி ப.சிதம்பரம்: ''கம்யூனிஸ்ட் கட்சியையே கலைச்சுட்டா தேவலாம். ஜி.ராமகிருஷ்ணன்னு நெனைக்கிறேன்!''
மாலதி மைத்ரி: ஜி.ராமகிருஷ்ணன்னு சொல்றாங்க. ஆனா, இங்கே யாரும் அந்தப் பொறுப்புல இருக்கிற மாதிரி தெரியலையே? பிருந்தா காரத்தான் அடிக்கடி பேசறார். அவர் பெயரையே பதிலா போட்டுக்குங்க!''
வைபவ்: ''கம்யூனிஸ்ட் கட்சி ரொம்ப நல்ல கட்சி. நிறைய நல்ல காரியங்கள் செய்யுற கட்சி. போராடுற கட்சி. அதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க!''
சின்மயி: ''சின்னப் பொண்ணுக்கு இவ்வளவு டீப் அரசியல்லாம் தெரியாது!''
ஜிகர்தண்டா என்றால் என்ன அர்த்தம்?
பதில்: இதயத்துக்கு குளுமையூட்டும் பொருள்!
சாலமன் பாப்பையா: ''அட! நம்ம மதுரை ஜிகர்தண்டா. குடிச்சோமா... குளிர்ந்தோமானு விடமாட்டேங்குறீயளேய்யா? அது நம்ம சௌராஷ்டிர சகோதரர்கள் வெச்ச பேரா இருக்கும். சரியான அர்த்தம் தெரியலை. குடிச்சா உடம்பு குளிரும்னு போடுங்கய்யா!''
கார்த்தி ப.சிதம்பரம்: ''காரைக்குடிக்குப் போகும்போது எல்லாம் அவசியம் குடிப்பேன். ஐஸ்க்ரீம்ல மேல போட்டுத் தர்ற கடல் பாசி. சரிதானே?''
மாலதி மைத்ரி: ''சர்பத்?''
வைபவ்: ''மதுரைல ஜிகர்தண்டா ஃபேமஸ். மெடிடேஷன் பண்ற டைம்ல சாப்பிடுற டிரிங்க் ஜிகர்தண்டா. முடிஞ்சிருச்சா இன்னும் இருக்கா? முடியலை பாஸ்!''
சின்மயி: ''ஆக்சுவலி அது ஒரு இந்தி வார்த்தை. தமிழ்ல தப்பா உச்சரிக்கிறோம். உடலைக் குளிர்ச்சிஆக்கும், இதயத்துக்கு குளோஸ் ஃப்ரெண்டுனு ரெண்டு அர்த்தம் உண்டு அந்த வார்த்தைக்கு!''
விளம்பரத்தில் பார்த்த ஒரு செருப்பை வாங்க, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி அரசு அதிகாரியுடன் ஒரு ஜெட் விமானத்தை அனுப்பியதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எங்கு அனுப்பினார்?
பதில்: மும்பை

சாலமன் பாப்பையா: ''அப்புடியா? ஏதாவது அயல்நாட்டுல வாங்கி இருப்பாக. கையில காசு இருக்குல்ல? சொந்தக் காசா? வந்த காசுதானே? எங்க வேணா போயி வாங்கலாம்!''
கார்த்தி ப.சிதம்பரம்: ''விக்கிலீக்ஸை நான் நம்புறது இல்லை. ஆனா, மும்பைக்கு அனுப்புனதாகச் செய்தி தெரியும்!''
மாலதி மைத்ரி: ''ஏதோ ஒரு செருப்புக் கடைக்கு!''
வைபவ்: ''மாயாவதிக்குப் போட்ட 'பண மாலை’ பணத்தை வெச்சு செருப்பு வாங்க சீனாவுக்கே பிளேன் அனுப்பலாமே பாஸ்!''
சின்மயி: ''ஐ திங்... மும்பை!''