Published:Updated:

“கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனதே தெரியலை!” - காதல், மண வாழ்க்கை குறித்து ராதிகா மகள் ரேயான்

“கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனதே தெரியலை!” - காதல், மண வாழ்க்கை குறித்து ராதிகா மகள் ரேயான்
“கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனதே தெரியலை!” - காதல், மண வாழ்க்கை குறித்து ராதிகா மகள் ரேயான்

“கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனதே தெரியலை!” - காதல், மண வாழ்க்கை குறித்து ராதிகா மகள் ரேயான்

''னக்காக என் புகுந்த வீட்ல உள்ளவங்க எல்லாம் தமிழ்ப் பேச கத்துகிட்டிருக்காங்க'' என்று கண் சிமிட்டி பேசுகிற ரேயா மிதுன், ராதிகாவின் செல்ல மகள். இன்டர்நேஷனல் பவுலர் மிதுனைத் திருமணம் செய்து, ஒருவருடத்தை நிறைவு செய்திருக்கிறார் ரேயான். 'ராடான் மீடியா'வின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ரேயானை ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்தோம்

''ரேயான் மிதுன் எப்படி?'' 

''ரொம்ப ஜாலி டைப். எப்பவுமே ஜாலியாதான் இருப்பேன். எனக்கு எல்லாமே என் ஃபேமிலிதான். ஃபேமிலியோடுதான் அதிக நேரம் செலவழிப்பேன்.'' 

''என்ன படிச்சிருக்கீங்க?'' 

''இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கேன்.'' 

''காதல் கல்யாணத்துக்கு வீட்டில் தடை சொன்னாங்களா?'' 

''நானும் மிதுனும் ஏழு வருட நண்பர்கள். அதனால், வீட்டுல எல்லோருக்கும் அவரைத் தெரியும். என்னைவிட அதிகமா எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு அவரைப் பிடிக்கும். அம்மாகிட்டதான் முதல்ல அவரைப் பிடிச்சிருக்குனு சொன்னேன். அவங்களுக்கும் மிதுனை ரொம்பப் பிடிக்கும். ஸோ, உடனே ஓகே சொல்லிட்டாங்க.'' 

''வீட்டுல அடிக்கடி யாரோடு சண்டை நடக்கும்?'' 

''வேற யாரு? என் தம்பி ராகுல்கூடதான். அவனும் நானும், எலியும் பூனையும் மாதிரி. ஆனாலும், ஒருத்தருக்கொருத்தர் அவ்வளவு பாசமாகவும் இருப்போம். எங்களை மாதிரி யாரும் சண்டைப் போடவும் முடியாது; பாசம் காட்டவும் முடியாது.'' 

''அம்மாகிட்ட அடிக்கடி திட்டு வாங்குறது எதுக்கு?''

''அதுவும் என் தம்பியால்தான். நானும் அவனும் சண்டைப் போடும்போது, 'அவன் சின்ன பையன்... நீ விட்டுக்கொடுத்து போகவேண்டியதுதானேனு திட்டுவாங்க.'' 

''ஃபேமிலியை மிஸ் பண்றீங்களா?'' 

''அப்படி ஒரு ஃபீல் வந்ததே இல்லை. ராடானோட டிஜிட்டல் பணிகளை நான்தான் பார்த்துக்குறேன். அதனால வார நாள்களில் சென்னையில இருப்பேன். அதனால, என் பொறந்த வீட்டை மிஸ் பண்றதில்லை. வார விடுமுறையாச்சுன்னா, ஃபிளைட்ல நேரா பெங்களூருக்குப் போய்டுவேன்..'' 

''உங்களுடைய ரோல் மாடல்...'' 

''வேற யார்? சாட்சாத் அம்மாவேதான். அவங்களை முன்மாதிரியா வெச்சுதான் எந்த விஷயத்தையும் செய்வேன். ஒருநாளைக்குப் பத்து தடவைக்கு மேலே அவங்களுக்கு போன் பண்ணிப் பேசிடுவேன்.'' 

''உங்க திருமண வரவேற்புக்கு உங்க அம்மாவின் புடவையைக் கட்டியிருந்தீங்களே...'' 

''அம்மா கல்யாணத்தப்ப கட்டியிருந்த புடவையைத்தான், என் கல்யாணத்துக்குக் கட்டுவேன்னு சின்ன வயசிலேயே முடிவுபண்ணியிருந்தேன். அம்மா, எனக்காக அந்தப் புடவையை ரொம்பப் பாதுகாப்பா வெச்சிருந்தாங்க. எவ்வளவு பிஸியா இருந்தாலும், மாசத்துக்கு ஒருமுறை அவங்க திருமணப் புடவையை எடுத்து, மடிப்பை மாத்தி பராமரிப்பாங்க. அதைக் கட்டினப்ப ரொம்பவே ஹேப்பியா ஃபீல் பண்ணினேன். எனக்கு என் அம்மாவின் சேலை எப்பவுமே ஸ்பெஷல்தான்.'' 

''உங்க அம்மாகிட்ட உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் எது?'' 

''அவங்களுடைய துணிச்சல். ரொம்பவே ஃபோல்டா இருப்பாங்க. அவங்களால் ஒரு விஷயம் செய்யமுடியாதுனு யாராச்சும் சொன்னால், அதை செஞ்சு முடிச்சுட்டுதான் அவங்களுக்குப் பதில் சொல்வாங்க. அந்த அளவுக்கு வைராக்கியமா இருப்பாங்க.'' 

''உங்க கணவர் பற்றி...'' 

''அவர் பார்க்க சைலன்ட் டைப் மாதிரி தெரிவார். பேச ஆரம்பிச்சா, செம ஜாலி மனிதர். அவரோட பவுலிங்கும் அழகு. கல்யாணத்துக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸாக இருந்ததால், கல்யாணத்துக்கு அப்புறம் எந்த வேறுபாடும் தெரியலை. இயல்பா இருக்குறோம். பொதுவா, மிதுன் ரொம்பவே கேரிங் பர்சன். என் மாமியார், மாமனார் என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துகிறாங்க. அவங்க வீட்டுல தெலுங்கும், கன்னடமும்தான் பேசுவாங்க. எனக்காக தமிழ்ப் பேச கத்துகிட்டிருக்காங்க. அந்தளவுக்கு நான் அவங்களுக்குச் செல்லம். மிதுனின் அக்காவும் நானும் பயங்கர குளோஸ்.'' 

''உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா?'' 

''எனக்குச் சின்ன வயசிலிருந்து ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். ஃபேஸ்கட் பால் பிளேயரா இருந்திருக்கேன். மிதுன் விளையாடுறதைப் பார்த்துப் பார்த்து கிரிக்கெட்டும் பிடிச்சுப்போச்சு.'' 

''கல்யாணத்துக்கு மறுநாளே மிதுன் கிரிக்கெட் விளையாட போய்ட்டாராமே?'' 

''நீங்க வேற... அவர் கல்யாணத்துக்கு வருவாரானே சந்தேகமா இருந்துச்சு. ஏன்னா, அப்போ அவருக்கு மேட்ச் நடந்துட்டிருந்துச்சு. கல்யாணத்துக்கு மறுநாள் அவர் விளையாடப் போகட்டும்னு நானே அனுப்பிவெச்சேன்.'' 

''ஹனிமூன்..?'' 

''கல்யாணமாகி நாலு மாசத்துக்கு அப்புறம்தான் ஹனிமூனுக்கே போனோம். நாங்க தேர்ந்தெடுத்த இடம், மாலத்தீவு. ரொம்ப அழகான தீவு. அமைதியான இடத்துல நானும் அவரும் மட்டும் இருந்தது புது அனுபவமா இருந்துச்சு.'' 

''சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லையா?'' 

''எனக்கு ராடான் நிறுவனத்தைப் பார்த்துக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு. நடிக்கும் ஆசை எப்பவுமே வந்ததில்லை.'' 

''பொழுதுபோக்கு..?'' 

''நிறையப் படங்கள் பார்ப்பேன். என் நண்பர்கள்கூட ஷாப்பிங் போவேன்.''

அடுத்த கட்டுரைக்கு