இன்பாக்ஸ்

• யு.டி.வி. சி.இ.ஓ. சித்தார்த் ராயுடனான காதல்பற்றி மனம் திறந்து இருக்கிறார் வித்யாபாலன். ''சித்தார்த் ராய் என் வாழ்வில் முக்கியமான நபர். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்!'' என்று பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார் வித்யா. சீக்கிரமே விவாஹம் ப்ராப்திரஸ்து!

• 'சைலன்ட்டா வேலை பார்ப்போம். சவுண்டா ஜெயிப்போம்!’ என்று தனது ஃபேஸ்புக்கில் பஞ்ச் அடித்திருக்கிறார் சிம்பு. '' 'ஒஸ்தி’ படம் என்னைப் பத்தித் தப்பா பேசுறவங்க வாயை அடைக்கும். நான் நடிச்சதிலேயே மாஸ் படம் ஒஸ்தி. எனக்கு நீங்கள்லாம் இருக்கீங்க. அந்தக் கவலைதான் மத்தவங்களுக்கு!'' என்று இன்னமும் டெரர் கூட்டுகிறார். இதுக்குப் பேருதான் சைலன்ட்டா?
• 'டைட்டானிக்’ ஹீரோ லியானார்டோ டி காப்ரியோ நகைக் கடைக்குத் தன் அம்மாவுடன் சென்றிருக்கிறார். ரசிகைகளின் அன்புப் பிடியில் இருந்து தப்பிக்க வித்தியாசமான டெரர் கெட்டப்பில் சென்ற லியோவைப் பார்த்த கடைக்காரர் அரண்டு மிரண்டு போலீஸுக்குத் தகவல் சொல்ல முயன்றிருக்கிறார். விஷயம் தெரிந்த லியோ உடனே தன் வேடத்தைக் கலைக்கவும்தான் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு இருக்கிறார் நகைக் கடைக் காரர். சினிமால மட்டும் மேக்கப் போடுங்கப்பா!

• ஆறு குழந்தைகளின் அம்மாவான ஏஞ்சலினா ஜோலி சட்டச் சிக்கல்கள் காரணமாக, புதிதாகக் குழந்தைகள் தத்து எடுப்பதை நிறுத்திவிட்டார். இப்போது, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகத் தனது நகைகள் அனைத்தையும் ஏலம் விடப்போவதாக அறிவித்து இருக் கிறார். இனி, புன்னகையே பொன்னகை!
• ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எந்த நேரமும் ரஜினியும் கமலும் வரலாம் என்ற செய்தியால் பரபரப்பாக இருக்கிறது, '3’ பட யூனிட். இரண்டு பேரும் மகள்களின் இயக்கத்தை, நடிப்பை நேரில் பார்க்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்களாம். ரெண்டு பேருமே கில்'லேடி’கள்தானே!

##~## |
• இப்போது ஐஸ்வர்யா ராயை வர்ணிப்பது என்றால், 'செவன்ட்டி கே.ஜி. தாஜ்மகால்’ என்றுதான் எழுத வேண்டும். சமீபத்தில் சித்தி விநாயகர் கோயிலுக்கு வந்த ஐஸ், அடையாளம் தெரியாத அளவு வெயிட் போட்டு இருப்பதாகப் பரபரக்கின்றன மும்பை மீடியாக்கள். அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில் பச்சன் குடும்ப வாரிசின் டெலிவரி இருக்குமாம். பாப்பா போட்டோவுக்கு பாப்பராஸிகள் பறப்பாங்களே!
• கார்த்திகாவைத் தொடர்ந்து ராதாவின் இன்னொரு மகள் துளசியும் சினிமாவுக்கு ரெடி. மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்திக்கின் மகன் கௌதம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் துளசிதான் ஹீரோயின். சீனியர் ஜோடியின் வாரிசுகள் ஜோடிகளாக அறிமுகமாவது அநேகமாக இப்போதுதான். அலைகள் ஓய்வதில்லையா... அலை பாயுதேவா?
• ''என் ஆட்டத் திறனில் எந்தக் குறையும் இல்லை. இளம் வீரர்களுக்கு இணையாக என்னால் விளையாட முடியும்!'' என்று கெஞ்சு கிற நிலைக்கு வந்துவிட்டார் இங்கிலாந்து கால் பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம். ''அடுத்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிவிட்டு ஓய்வுபெற்றுவிடுகிறேன். ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள்!'' என்று தேர்வாளர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக் கிறார் பெக்காம். பந்தாடுறாங்களோ?!

• 'மிஸ்டர் பீன்’ தொடரில் இருந்து ஓய்வுபெறுகிறார் நடிகர் ரோவன் அட்கின்ஸன். உலகம் முழுக்கக் குட்டீஸ்களின் காமெடி கதாநாயக னான அட்கின்ஸன், ''மிஸ்டர் பீன் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும். ஆனால், எனக்கு 56 வயதாகிவிட்டது. இனிமேலும், நான் மிஸ்டர் பீனாக நடிப்பதில் நியாயம் இல்லை!'' என்று அறிவித்து இருக்கிறார். ஆனா, இங்கேலாம் 56-லதான் காலேஜ்ல சேருவாங்க ஹீரோஸ்!