Published:Updated:

சக ஊழியர்களுக்காக கைவண்டி இழுத்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-7

சக ஊழியர்களுக்காக கைவண்டி இழுத்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-7
சக ஊழியர்களுக்காக கைவண்டி இழுத்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-7

’ஏழைப் பங்காளன்’ என்று சைவ சமயக் குரவருள் ஒருவரான மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றித் துதிப்பார். அந்தச் சொல்லுக்கு அடையாளமாக எம்.ஜி.ஆர் அமைந்ததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவர் ஏழைகளுக்குத் தானாகப் போய் உதவியதும், உதவி எனக் கேட்டு வந்தவருக்கு உடனே கொடுத்து உதவியதும் ஆகும். இரண்டு, அவர் ஏழை எளிய வர்க்கத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர்களின் துன்ப துயரங்களைப் படத்தில் பிரதிபலித்து, அவர்களில் ஒருவனாகத் தன்னை வெளிப்படுத்தியது ஆகும்.

கதாபாத்திரமும் காட்சிப்பாடலும்

தான் எந்தத் தொழிலாளி கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் அந்தத் தொழிலுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் வகையில் படத்தில் தொடக்கத்திலேயே ஒரு பாடலை அழைத்துத் தொழிலின் கஷ்ட நஷ்டங்களை விவரித்திருப்பவர் எம்.ஜி.ஆர். சில படங்களில் காட்சிகள் மூலமாகத் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுவார்.

பாட்டாளி பாத்திரப்படைப்பு

நாடோடி படத்தில் தெருப்பாடகனாக ஆயிரத்தில் ஒருவனில் நாட்டு மருத்துவராகப் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் பெயின்டர் மற்றும் கிணற்றில் தூர் வாருபவராக தனிப்பிறவியில் மெக்கானிக்காக, தேர்த்திருவிழா படத்தில் பரிசல் ஓட்டியாக, தொழிலாளி படத்தில் கைவண்டி இழுப்பவராக, பின்பு பஸ் கண்டக்டராக, படகோட்டி படத்தில் நாட்டுப் படகோட்டும் பரதவனாக, மீனவ நண்பனில் இயந்திரப் படகின் மீனவனாக மாட்டுக்கார வேலனில் மாடு மேய்ப்பவராக என் அண்ணனில் குதிரை வண்டிக்காரனாக எங்கள் தங்கத்தில் லாரி டிரைவாக விவசாயி படத்தில் படித்த விவசாயியாக ரிக்ஷாக்காரனில் ரிக்ஷா ஒட்டியாக எங்கவீட்டுப் பிள்ளையில் விவசாயியாக (ராமு) உழைக்கும் கரங்கள் படத்தில் ஊர் காக்கும் காவல்காரனாக நடித்திருப்பார்.

படித்தவராக எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் டாக்டராக தர்மம் தலைகாக்கும், புதியபூமி படங்களிலும் எஞ்சினீயராகக் கொடுத்து வைத்தவளிலும் வக்கீலாக நீதிக்குப் பின் பாசத்திலும் பத்திரிகை நிருபராக சந்திரோதயத்திலும் விளையாட்டு ஆசிரியர் மற்றும் கவிஞராக ஆனந்த ஜோதியிலும் முகராசி, காவல்காரன், பணத்தோட்டம், பரிசு, தெய்வத்தாய், தாய் சொல்லைத் தட்டாதே, என் கடமை, ரகசியப் போலீஸ் 115 போன்ற படங்களில் காவல்துறை அதிகாரி, சி.ஐ.டி படங்களில் காவல்துறை அதிகாரி, சி.ஐ.டி கதாபாத்திரங்களிலும் வன்னித்தாயில் மிலிட்டரி கமாண்டராகவும் நடித்திருப்பார்.

நாட்டு மருத்துவர்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அறிமுகக் காட்சியில் எம்.ஜி.ஆர் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடித்த மகிழ்ச்சியுடன் ‘வெற்றி வெற்றி’ என்று கூறுவார். பின்பு பாம்பு தீண்டிய ஒருவருக்கு விஷத்தை உறிஞ்சி எடுக்கும் காட்சியில் ஜெயலலிதாவுக்கு அவர்மீது அபிமானம் ஏற்படும். இறுதிக்கட்டத்தில் மனோகர்மீது விஷம் தோய்த்த கத்தியை நம்பியார் வீசியதும் உடல் நலம் பாதித்துவிடும். உடனே எம்.ஜி.ஆர் விஷத்தை அகற்றுவார். படம் முடியும்போது நாட்டை மனம் திருந்திய மன்னனிடமே ஒப்படைத்துவிட்டு மருத்துவத் தொழிலுக்கே திரும்பிவிடுவார். தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு இவ்வகையில் இவர் நியாயம் செய்திருப்பார்.

ஆங்கில மருத்துவர்

தர்மம் தலைகாக்கும் படத்தில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவசேவை செய்வார். அந்த தர்மமே அவர் தலையை (உயிரை) ஒரு விபத்திலிருந்து காப்பாற்றியதாக எம்.ஆர்.ராதா ஒரு வசனம் பேசியிருப்பார். குண்டு சுட்டபோதும் சிறுநீரகமாற்று சிகிச்சையின்போதும் இவர் பிழைத்து எழுந்ததற்கு இவர் செய்த தர்மமே காரணம் என்று பொதுமக்கள் நம்பினர்.

புதியபூமி படத்தில் மந்திரவாதி ஒருவரின் ஏமாற்று சிகிச்சையில் அவதிப்படும் மலை கிராமம் ஒன்றிற்குப் பகுத்தறிவுப் பகலவனாக டாக்டர் கதிரவன் வந்து மருத்துவசேவை ஆற்றுவார். இவரது முறைப் பெண் டாக்டர் ஷீலா இவருக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விடுவார். நகரத்திலேயே ஒரு மருத்துவமனை கட்டி அங்கு டாக்டராக இருப்பார்.

டாக்டர் படிப்பு பெறுவோர் தம் வாழ்க்கையை ஏழை எளியோருக்கு சேவை செய்யும் வகையில் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முன்மாதிரி பாத்திரமாக எம்.ஜி.ஆரின் பாத்திரப்படைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.

படகோட்டி

படகோட்டி படத்தில் அறிமுகப்பாடல் காட்சி கடலோடிகளின் துன்பத்தை பறை சாற்றுவதாக அமைந்திருக்கும்.

“தலைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்

தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக்

கண்ணீரில் குளிக்க வைத்தான்

பாடல் தற்கால துயரத்தை வெளிப்படுத்தும் அந்தப்படம் முழுக்க படகோட்டிகளுக்கு அவர்கள் மீனுக்கு நல்ல விலை கிடைக்கவும் வந்து கந்து வட்டிக்காரர் கொடுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயனடையவும் உழைக்கும் மாணிக்கமாக பாத்திரம் ஏற்று நடித்திருப்பார். படம் நெடுக படக்கோட்டிகளின் அவலமும் பாடுகளும் அவநம்பிக்கையும் தொடரும் இறுதியில் இரண்டு மீனவ குப்பங்களும் ஒன்று பட்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று தனிநபர் கொடுமையிலிருந்து விடுபடும்.

தொழிலாளி

தொழிலாளி படத்தில் படித்துப்பெற்ற எம்.ஜி.ஆர் வேலை எதுவும் கிடைக்காமல் கை வண்டியிழுக்கும்

தொழிலாளியாக வாழ்வார். பின்பு பேருந்து நடத்துநர் பணி கிடைக்கும் பேருந்தின் இருக்கைகள்

நிரம்பிவிட்டதால் நிறுத்தத்தில் நிற்கும் தன் தானியக்கூடப் பேருந்தில் ஏற்றமாட்டார். (அந்தக்காலத்தில்

பஸ்ஸுக்குள் ஸ்டாண்டிங் கிடையாது) தன் நேர்மையான உழைப்பால் முன்னேறி செக்கிங் இன்ஸ்பெக்டர்

ஆவார். அப்போது அதிக வேகத்தில் பேருந்தை ஓட்டி இன்னொரு பேருந்தை ‘ஓவர் டேக்’ செய்த

ஓட்டுநர் நம்பியாருக்கு எச்சரிக்கை கடிதம் அளிப்பார். பின்பு அந்த பஸ் நிறுவனத்தின் மேனேஜர் ஆவர்.

கதாநாயகி கே.ஆர். விஜயாவின் சிபாரிசும் இதற்கு முக்கியக் காரணம் ஆகும். அவரை ஒரு விபத்திலிருந்து எம்.ஜி.ஆர் காப்பாற்றியிருப்பார்.

இன்றைக்கு இந்த முன்னேற்றம் எளிதாகத் தோன்றலாம். 1960களில் அப்படியில்லை. கூலித்தொழிலாளி மேனேஜர் ஆவதெல்லாம் கனவிலும் கற்பனையிலும் மட்டுமே சாத்தியம். எனவே எம்.ஜி.ஆரது இந்தப் பாத்திரப்படைப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மேனேஜராக இருந்த எம்.ஜி.ஆரை முதலாளி வேலையை விட்டு நீக்கியதும் மீண்டும் எம்.ஜி.ஆர் கைவண்டி இழுத்து தன்னுடன் பணிபுரிந்து பழியேற்றப்பட்ட தொழிலாளிகளின் குடும்பங்களைக் காப்பாற்றி உதவுகிறார்.

குதிரை வண்டிக்காரன்

என் அண்ணன் படத்தில் எம்.ஜி.ஆர் குதிரை வண்டிக்காரனாகவும் ஜெயலலிதா புல்லுக்கட்டுக்காரியாகவும் நடித்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. இப்படத்தில் இருவரும் முருகன் கோவிலில் சாமிகும்பிடும் காட்சியும் இடம் பெற்றது.

முதல் அறிமுகப் பாட்டிலேயே அவர் குதிரை வண்டி ஓட்டுவது லாங் ஷாட்டில் ரோப் வைத்தும் பிற காட்சிகள் ஸ்டூடியோவுக்குள் குளோஸ்அப் ஷாட்கள் வைத்தும் அந்தப் பாட்டைப் படமாக்கியிருப்பார்கள். புல்லுக்கட்டு விற்கும் பெண்களும் எம்.ஜி.ஆர் நடத்தும் போலி சல்லாபக் காட்சிகளில் குதிரைவண்டிக்காரனைப் போல இயல்பாக நடித்திருப்பார். ஜெயலலிதாவுக்கு ஆத்திரமூட்டுவதற்காக இந்த விளையாட்டை நிகழ்த்துவார்.

ரிக்ஷாக்காரன்

இந்தப்படத்தில் ஆரம்பக்காட்சியில் ரிக்ஷா பந்தயத்தில் முதல்பரிசு பெறுவார். ஒரு நாள் உண்மையிலேயே பிற்பகல் வேலையில் எம்.ஜி.ஆர் கோடம்பாக்கம் சாலையில் ரிக்ஷா ஓட்டிவிட்டு ஸ்டுடியோவுக்குத் திரும்பியிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் அவரைத் தேடி அலையும்போது அவர் வெளியே இருந்து ரிக்ஷா ஓட்டியபடி உள்ளே வந்தார்.

1964 இல் எம்.ஜி.ஆர் மழையில் நனைகிறார்களே என்று ரிக்ஷாக்காரர்களுக்கு ரெயின்கோட் இலவசமாக வழங்கினார். சத்யா ஸ்டூடியோவில் ஏராளமான டெய்லர்களை வாடகைக்கு அழைத்து வந்து ரெயின்கோட்கள் தைத்து, அவற்றை அண்ணா அவர்களின் திருக்கரத்தால் வழங்கினார். அன்று முதல் ரிக்ஷாக்காரர்கள் எம்.ஜி.ஆர்மீது தனி அன்பு வைத்திருந்தனர். 1971இல் ரிக்ஷாக்காரன் படம் வெளிவந்தபோது அதை வெற்றிவிழா படமாக உயர்த்தினார்.

ரிக்ஷாக்காரன் படத்திலும் எம்.ஜி.ஆர் படித்துப் பட்டம் வாங்கியவர் பட்டாளத்தில் பணிபுரிந்தவர் பின்பு ரிக்ஷா ஓட்டுவார். ரிக்ஷா ஓட்டுதலையும் கட்டண விவரத்தையும் வரன்முறைப்படுத்தி இத்தொழிலுக்கு ஒரு கௌரவம் அளித்திருப்பார். “ஏ ரிக்ஷா” என்று அழைப்பதைக் கூடக் கண்டிருத்திருப்பார்.

ரிக்ஷாவில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் சண்டை போடும் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் சங்கர் அமைத்திருப்பார். இக்காட்சியில் எம்.ஜி.ஆர் சிலம்பு சுற்றியபடியே ரிக்ஷாவில் சுற்றி சுற்றி வந்து சண்டைபோட்டு தன் ‘பேசஞ்சரான’ மஞ்சுளாவைக் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவது புதுமையான சண்டைக் காட்சியாக அமைந்து ரசிகர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது.

மற்ற சில தொழிலாளி கதாபாத்திரங்கள்

தேர்த்திருவிழாவில் பரிசல் ஓட்டிகளாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வந்து ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவர். மோதலில் தொடங்கிய பழக்கம் காதலில் நிறைவுறும் துள்ளல் பாடலும் பரிசலில் குழுநடனமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

முதல் காட்சியில் பெயர் போடும்போதே மாட்டின் பெருமையைப் பாடி மாட்டுக்காரனாக நடித்திருப்பார். மாட்டுக்காரவேலனில் மாட்டுக்காரன்தான் ஹீரோ தெருப்பாடகனாக (நாடோடி) வரும் எம்.ஜி.ஆர் நாட்டின் சிறப்பு குறித்த பாடல்களை சரோஜாதேவிக்குச் சொல்லிக்கொடுத்து பாடச் சொல்வார்.

நல்லநேரம் படத்தில் “நம்ம ஆடுற ஆட்டமும் பாடுற பாட்டும் நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும்” என்று பாடிய கருத்தை ‘நாடோடியிலும் செயல்படுத்தியிருப்பார்.

தனிப்பிறவியில் லேத் பட்டறையில் தொழிலாளியாக வரும் எம்.ஜி.ஆர் “உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே” பாட்டு மூலமாக உழைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தியிருப்பார். ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவார்.