Published:Updated:

''என் நிறம்... அவமானம் அல்ல!’’ - 'அறம்' செம்மலர் அன்னம்

''என் நிறம்... அவமானம் அல்ல!’’ - 'அறம்' செம்மலர் அன்னம்
''என் நிறம்... அவமானம் அல்ல!’’ - 'அறம்' செம்மலர் அன்னம்

'களிர் மட்டும்' பட டீசரில் ''வீட்டு வேலை செய்றதுக்குச் சம்பளமா கொடுக்கிற'' என்கிற நீளமான வசனம் மூலமாக நம் கவனம் ஈர்த்தவர் செம்மலர் அன்னம். வீதி நாடகங்கள், தியேட்டர் பிளே, வெள்ளித்திரை, உதவி இயக்குநர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். '' என்னோட கறுமை நிறம்தாம் என்னோட பிளஸ்'' என்றவாறே பேசத் தொடங்குகிறார் செம்மலர். 

''என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். எனக்குச் சின்ன வயசுலருந்தே நடிக்கிறதுல ரொம்ப ஆசை. டிவியைப் பார்த்து டான்ஸ் ஆடி ஆடி டான்ஸ் மேலயும் ஆர்வம் வந்துடுச்சு. நடிப்பு மேல இருந்த ஆர்வத்தால விஸ்காம் தேர்வு செஞ்சு படிச்சேன். காலேஜ் டைம்ல என் கூட படிச்ச என்னுடைய நண்பரைக் காதலித்து திருமணம் செஞ்சுகிட்டேன். பள்ளி நாள்களில் கலை நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்கணும்னு ஆசை இருக்கும். ஆனா வாய்ப்பு அமையலை. அதனால கல்லூரி காலத்துல எல்லா கலை நிகழ்ச்சிலேயும் பங்கெடுக்க ஆரம்பிச்சேன்.  

அப்போதான் கலைஞர் தொலைக்காட்சியில் 'சகலகலாவல்லவன்'னு ஒரு போட்டி வெச்சாங்க. அது டான்ஸ், பாட்டுனு பல திறமைகளை உள்ளடக்கின போட்டி. ஆறு மாசத்துக்கு மேல நடந்த போட்டியில் வெற்றி பெற்று நாலு லட்சம் மதிப்புள்ள காரை பரிசா வாங்கினேன். அப்போதான் வெற்றிங்கிறது ரொம்ப தொலைவுல இல்ல... முயன்றால் அது நம்ம கைக்கு எட்டும்னு புரிஞ்சது. அதுகப்புறமா சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் உதவி இயக்குநரா வேலைப் பார்த்தேன். அப்போ இயக்குநர்கள் 'கறுப்பா கிராமத்து வாசனையோட ஒரு பொண்ணு வேணும்'னு சொல்லுவாங்க. நான் அப்படித்தானே இருக்கேன் என்னை ஏன் கூப்பிட மாட்டேங்கிறாங்கனு கொஞ்சம் ஏக்கமா இருக்கும்'' என்றவரிடம் 'அறம்' படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கேட்டேன்.

வெள்ளித்திரையில் முதன்முதலா 'அம்மணி' படத்துலதான் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. 'மகளிர் மட்டும்' படத்துல அந்த கேரக்டர்ல நடிச்சதும் என் முகம் பலருக்கும் தெரிய ஆரம்பிச்சது.  கோபி சார் அவர் எடுக்குற 'அறம்' படத்துல நடிக்கணும்னு கேட்டார். அவருடைய அன்புக்கிணங்க  நிருபரா,  நயன்தாராகிட்ட கேள்வி கேட்கிற மாதிரியான சீன்ல நடிச்சேன். அறம் சூட்டிங் போனப்ப கூலித் தொழிலாளியா நடிச்ச அத்தனை பேரும் நாட்டுப்புற கலைஞர்கள்னு தெரிஞ்சது. அவங்ககிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்'' என்றவர் விரைவில் தாயாகப் போகிறார்.

''ஆமா நான் ஏழு மாச கர்ப்பிணி. கர்ப்பமா இருக்கிறப்பதான் இப்ப பிரபலமா பேசப்பட்டிட்டு இருக்கிற ஜி.எஸ்.டி குறும்படத்துல நடிச்சேன். துரதிஷ்டவசமா நான் நடிச்ச சீன் தொழில்நுட்ப கோளாறால அழிஞ்சிடுச்சு. திரும்ப நடிச்சுக் கொடுங்கனு அவங்க கேட்டப்ப நான் வேற ஒரு படத்துல கமிட் ஆகியிருந்தேன். அதனால நடிக்க முடியலை. இப்ப இன்னொரு படத்துல ஏழு மாச கர்ப்பிணி கேரக்டர்ல நடிக்கப் போறேன். நிச்சயம் அழகா தாய்மை உணர்வை வெளிப்படுத்திருவேன். இப்பதான் பலருக்கு என்னோட முகம் பரிச்சயமாகிட்டிருக்கு. ஆனா என்னோட நிறத்தைக் காரணம் காட்டி பல படத்துல நான் நிராகரிக்கப்பட்டிருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட நிறம் எனக்கு அவமானமா இல்லை. நான் இந்தளவுக்கு இந்தத் துறையில போராடி மேல வர்றதுக்கு முயல்றதுக்குக் காரணம் என் கணவர்தான். நான் இருக்கேன். நீ நல்லா நடினு என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பார்'' என்று புன்னகைக்கிறார்