Published:Updated:

’’எங்க... பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்..!’’ - ரசூல் பூக்குட்டி சவால் #VikatanExclusive

’’எங்க... பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்..!’’ - ரசூல் பூக்குட்டி சவால் #VikatanExclusive
’’எங்க... பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்..!’’ - ரசூல் பூக்குட்டி சவால் #VikatanExclusive

"படத்தின் இசை வெளியீட்டு விழா அப்போ ஷங்கர் சொன்னார், `அந்நியன்' படம் எடுத்தப்போ திருவையாறு நிகழ்ச்சிய லைவா படம் பிடிக்க நினைச்சாராம். ஆனா, சில சிக்கல்களால் அதைப் பண்ண முடியாம, அந்த நிகழ்ச்சி போலவே ஒன்ன ரீ-க்ரியேட் பண்ணி ஷூட் செய்திருந்தார். அந்த மாதிரி உலகம் முழுக்க பல நிகழ்வுகள் பல வருடங்களா, அதே அழகோடு, அதே நுட்பத்தோடு நடந்திட்டிருக்கு. ஆனா, நமக்குத் தெரியறதில்ல. நாம பதிவு செஞ்சோம்னா, இதைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். அந்த மாதிரியான முயற்சிதான் `ஒரு கதை சொல்லட்டுமா', தமிழ், மலையாளம், இந்தினு மூன்று மொழிகள்ல வெளியாகப் போகுது" என சவுண்ட் டிசைனர் டூ கதாநாயகன் புரமோஷன் பெற்ற உற்சாகத்திலிருந்தார் ரசூல் பூக்குட்டி. ஆனால், ஹீரோ சார் என சொன்னால் மட்டும் "நான் ஹீரோலாம் இல்ல மேன். ஆக்சிடென்டல் ஆக்டர்" என சிரிக்கிறார். 

"பூரம் நிகழ்வைப் பதிவு செய்யற யோசனைதான் `ஒரு கதை சொல்லட்டுமா' படமா உருவானதா?"

''ஆமா, ஆக்சுவலா இது தொடங்கினது நான் ஆஸ்கர் வாங்கின சமயத்தில். அப்போ நான் கொடுத்த பேட்டிகள்ல எல்லோருமே கேட்ட கேள்வி `உங்களுடைய லட்சியம் என்ன'. ஆஸ்கர் ஜெயிச்சாச்சு, அதை விட பெரிய லட்சியம் இருக்குமானு நான் சொல்லாம மழுப்பிட்டே இருந்தேன். ஆனா, ரெண்டு மூணு இடத்தில் மட்டும் வேற வழி இல்லாம, `திரிசூர் பூரம்' விழாவை ரெக்கார்டு பண்றதுதான் என்னுடைய லட்சியம்னு சொல்லிட்டேன். நிஜமாவே எனக்கு அது கனவா இருந்தது. ஆனா, அப்போ எனக்குத் தெரியாது அந்தப் பேட்டியைப் பார்த்திட்டு ஒருத்தர் வந்து என்னை அப்ரோச் பண்ணுவார்னு. அப்படி வந்தவர்தான் படத்துடைய தயாரிப்பாளர் ராஜீவ் பனகல். அவர் நிறைய பேர் மூலமா என்னைத் தொடர்புகொள்ள முயற்சி செஞ்சு, கடைசியா இந்தப் படத்தின் இயக்குநர் பிரசாத் மூலமா, வந்தார். அவர் இதைப் பண்றதில் ஆர்வமா இருக்கார்னு தெரிஞ்சது. அப்படித் தொடங்கினதுதான்.''

"ஆவணப்படமாக பதிவு செய்திருக்கீங்களா?"

''இது ஒரு முழுமையான படம். பூரம்தான் கான்செப்ட், அதோட சேர்த்து ஒரு கதையும் இருக்கும். படத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னால, என்னை தயார்படுத்திக்கவே பதினைந்து நாள்கள் ஆனது. 300க்கும் மேல இசைக்கலைஞர்கள், லட்சக்கணக்கில் மக்கள்னு, ஒரு கோவில்ல வாரம் முழுக்க நடக்கும் நிகழ்வு அது. அதை யாருமே பதிவு செய்யலைங்கறது ஆச்சர்யமா இருந்தது. டிவி, ரேடியோல லைவ் வரும். ஆனா, அங்க 300 இசைக்கலைஞர்களையும் ஸ்டீரியோ ட்ராக்ல கேட்டா அதை உணர முடியாது. 300 பேர் வாசிக்கறதும் தனித் தனியா ஒலிக்கணும். அதனாலதான் இதனுடைய சவுண்ட் பேர்ட்டனை முதல்ல வடிவமைச்சேன். ஆரோ 3டி, டால்பினு சில ஃபார்மெட்களை இணைச்சு 250 ட்ராக்ஸா பிரிச்சு ரெக்கார்டு பண்ணினேன். அதை அப்படி ரெக்கார்டு பண்றதுதான் நியாயமா இருக்கும். ஆனா, இதை சவுண்டா மட்டும் எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும். அப்போதான் பிரசாத் இதைப் படமாவே பதிவு பண்ணலாம்னு யோசனை சொன்னார், அப்படிதான் இது படமா தொடங்கியது.''

"சவுண்ட் டிசைனிங் ரொம்ப சமீபத்தில்தான் பரவலா பேசப்படுது. அப்போதே இந்தத் துறை மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?"

"எனக்கு சவுண்ட் டிசைனிங் மீதான கவனம் இருந்ததில்ல. என்னுடைய ஆசை எல்லாம் இயற்பியலாளர் ஆகணும்கிறதுதான். பி.ஏ இயற்பியல் படிச்சேன். ஒரு 'சூப்பர் கண்டக்டிவ் எலமென்ட்' கண்டுபிடிச்சு, இந்தியாவுக்காக நோபல் பரிசு வாங்கறதுதான் என்னுடைய கனவா இருந்தது. ஆனால், எம்.எஸ்.சி படிக்கறதுக்கு அட்மிஷன் கிடைக்கல. அதனால புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்ந்தேன். சவுண்ட் டிசைனிங்கிற்கும் ஃபிசிக்ஸுக்கும் நிறைய தொடர்பு இருக்கறதை என்னால உணர முடிந்தது. அங்க சேர்ந்ததும் சினிமா மீதான காதல் ஏற்பட்டுச்சு. நிறைய படங்கள் பார்த்தேன். அதில் ஒலியின் பங்கு என்னென்னு கவனிக்க ஆரம்பிச்சேன். ஏன், நம்ம படங்களுடைய ஒலி இவ்வளவு மோசமா இருக்குன்னு தோணுச்சு. ஏன்னா, ஹாலிவுட்ல வர்ற பி-கிரேட் படங்கள் கூட எடுத்துக்கோங்க, அதில் டெக்னிகலா உங்களால ஒரு குறையும் சொல்ல முடியாது. நம்ம சினிமாக்களில் லைவ் சவுண்ட் நாம பண்றதில்லைங்கறது மிகப் பெரிய குறையா தெரிஞ்சது. அதனால் என்னுடைய ஆரம்ப படத்திலிருந்து தொடங்கி எல்லாப் படங்களுக்குள்ளும் லைவ் சவுண்ட் ஏன் தேவைனு சொல்லி சேர்த்தேன்."

"உங்களுடைய ஆஸ்கர் வெற்றிக்குப் பிறகு சவுண்ட் டிசைனிங்ன்ற விஷயம் எல்லாரிடமும் போய் சேர்ந்தது, நிறைய படங்களில் `ஆஸ்கர் வின்னர் ரசூல் ஒலியமைப்பில்'னு விளம்பரம் பண்ற அளவு அது போனது. இப்படியான கவனம் பெற்றதை எப்படிப் பார்த்தீங்க?"

"சினிமாவில் இருப்பவர்களுக்கு அந்தத் துறையைப் பற்றி முன்னமே தெரியும். இருந்தாலும் சவுண்ட் டிசைனிங்குக்கான முக்கியத்துவத்தை விட அதிகமா இசைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம், இசைதான் விற்பனையாகும், சவுண்ட் டிசைனை மட்டும் தனியா விற்க முடியாது. எது விற்குமோ அது மேல கவனம் செலுத்துறதை குறைசொல்ல முடியாது. ஆனால், திரைப்பட உருவாக்கத்தில் ஒரு கருவியாக, சவுண்ட் டிசைனிங் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. சஞ்சய் லீலா பன்சாலியுடைய `ப்ளாக்' படத்தில் வேலை செய்த பிறகு என்னால் அதை உணர முடிந்தது. அதற்கு முன் சினிமால இருக்கவங்களே படத்துடைய பிரமாண்டமான கலை இயக்கத்தையும், ஒளிப்பதிவையும், காஸ்ட்யூமை மட்டும்தான் கவனிச்சாங்க. ப்ளாக் படத்துக்குப் பிறகு சவுண்ட் டிசைனிங்குக்கும் வாவ் சொல்ல ஆரம்பிச்சாங்க. அதுவும் படத்தின் தரத்தைக் கூட்டும்னு புரிஞ்சுகிட்டாங்க. ஆனால், பார்வையாளர்களுக்கு அதைப் பற்றி தெரிந்து கொள்ள `ஸ்லம்டாக் மில்லியனர்' ஆஸ்கர் வென்றது உதவியாக இருந்தது. இப்போ நிறைய இளைஞர்கள் சவுண்ட் பற்றி படிக்க ஆரம்பிச்சிருக்காங்க, துறைக்குள்ளும் வந்திருக்காங்க. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துகிட்டிருக்கு. நிறைய வளர்ச்சி காத்திட்டிருக்கு."

"படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எது சவுண்ட் டிசைன் எது மியூசிக்னு தெரியாது, ஒரு படத்துக்குப் பின்னால...." எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு, "இவங்க யாரு, ஷூட்டிங்ல இங்கயும் அங்கயும் ஓடிட்டிருக்காங்க, துப்பாக்கி மாதிரி ஏதோ பிடிச்சிட்டு நிக்கறாங்க, இவங்க என்னதான் வேலை பண்றாங்கனு தானே கேக்கறீங்க (சிரிக்கிறார்). ஒரு படத்தில் நீங்க என்ன கேட்கணும், எப்படிக் கேட்கணும், எப்படிக் கேட்டால் அந்தக் கதையோட ஓட்டம் நல்லாயிருக்கும்ங்கற வேலைதான் அது. ஒரு ஒளிப்பதிவாளர் படத்தில் ஆடியன்ஸ் எதைக் கவனிச்சுப் பார்க்கணும்னு யோசிச்சுப் பதிவு பண்றார்ல, அது போல ஆடியன்ஸ் எதைக் கவனிச்சுக் கேட்கணும்னு யோசிச்சுப் பதிவு பண்றது சவுண்ட் டிசைனருடைய வேலை. படத்தில் மட்டும் இல்ல, பாடல்களுக்கும் இருக்கு. ஒரு பாட்டு தியேட்டர்ல பாக்கறதுக்கும், மொபைல் ஹெட் செட்ல கேக்கறதுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கொடுக்கறது சவுண்ட் இன்ஜினீயர்தான்"

"நார்மலா ரெக்கார்டு பண்ற படங்கள்ல ஓகே. `கோச்சடையான்' மாதிரி மோஷன் கேப்சர் படங்களில் உங்க ரெஃபரன்ஸ் என்ன, சவுண்டிங்கில் என்ன மாதிரி வேலைகள் இருக்கும்?"

" `கோச்சடையான்'ல பெரிய சவால் இருந்தது. படத்தில் நடிச்சவங்க எல்லாருமே நிஜம். ஆனா, நீங்க ஸ்க்ரீன்ல பார்க்கும் வடிவம் வேற விதத்தில் இருக்கும். அதை சவுண்ட் மட்டும்தான் நேச்சுரலானதா காட்டும். அதுக்காக உதய்பூர், ராஜஸ்தான் மாதிரியான இடங்களுக்குப் போனேன். அங்கு இருக்கும் அரண்மனைகள், தர்பார் ஹால் மாதிரியான இடங்களுக்குப் போய் அங்கிருக்கும் சப்தம் எப்படியானது, பேசும் போதோ, ஏதாவது ஒலி வரும் போதோ எப்படி அந்தச் சூழலில் ரிசீவ் ஆகுதுனு ரெக்கார்டு பண்ணோம். வார் சீக்வன்ஸுக்கு எல்லாம் நிஜமாவே ஆட்களை வரவழைச்சு, தேவைப்படும் ஒலிகளை லைவா ரெக்கார்டு பண்ணினோம். ஆனா, அந்தச் சவாலை எல்லாம் தாண்டி மக்களுக்கு அது ஒரு கார்டூன் படமாதான் தெரிஞ்சது. `பாகுபலி' போல பிரமாண்டமா எடுத்திருந்தா, நிச்சயம் பெரிய ஹிட்டாகியிருந்திருக்கும். ஏன்னா, படத்தின் கதை அவ்வளவு நல்லாயிருந்தது. கோச்சடையானுடைய வார் சீக்வன்ஸ் பாகுபலிக்கு எந்த விதத்திலும் குறைஞ்சதில்ல,எங்க பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்.  அவ்வளவு அழகா எடுத்திருந்தாங்க."

"இப்போ எல்லாத் தரப்பு மக்களும் சவுண்டை கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்களா?"

"அந்தக் கவனம் பெரிய அளவில் ஆரம்பம் ஆகியிருக்கு. ஆனா, இப்போ பிரச்னையா இருக்கறது தியேட்டர்களின் தரம். சவுண்டுக்கான AES (Audio Engineers Society) கொடுக்கும் ஐ.எஸ்.ஓ தரம் ஒண்ணு இருக்கு. அதை இந்தியாவில் மிகச் சில இடங்களில் மட்டும்தான் கடைபிடிக்கறாங்க. அது இல்லாததால, நான் டிசைன் பண்ண சவுண்டுக்கும், நீங்க தியேட்டரில் பார்க்கும் போது இருக்கும் சவுண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏற்படுது. 2.0வில் சவுண்ட் பொறுத்தவரை ஒரு எக்ஸ்பரிமென்ட் பண்ணியிருக்கோம். அதை நீங்க முழுமையா உணரனும்னா தியேட்டரின் சவுண்டிங் தரம் முறையானதா இருக்கணும். அதுக்கான பேச்சு வார்த்தைகளும் போயிட்டிருக்கு, சீக்கிரம் அந்த வசதிகளும் வந்திடும்னு நினைக்கறேன்." 

"2.0 பற்றி..." என ஆரம்பித்ததும் "ஷ்ஷ்ஷ்.... அது இப்போதான் வேலைகள் நடந்திட்டிருக்கு. அதற்கான சவுண்ட் டிசைன் வேலைகளை ஒரு மாசம் முன்னாலதான் தொடங்கியிருக்கேன். டப்பிங் வேலைகள் ஆறுமாதமா நடந்திட்டிருக்கு. ஜனவரிக்கு வந்திடும்னு நினைக்கறேன். ஏன்னா, நிறைய விஷுவல் எஃபக்ட்ஸ் வேலைகள் பல நாடுகளில் நடந்திட்டிருக்கு, அதெல்லாம் வரவேண்டியிருக்கு. நிறைய எதிர்பார்ப்பு இருக்கு, தலைவரைப் பார்க்க. பொறுத்திருந்து பார்ப்போம்."

"சவுண்ட் டிசைனிங்கை பற்றி கற்றுக்கொள்ள விரும்பறவங்களுக்கு, அதைக் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சிகள் பண்றீங்களா?"

"இப்போ நிறைய இன்ஸ்டிட்யூட்ஸ் வந்திடுச்சு. கல்வி வியாபாரமாகவும் மாறிடுச்சு, நிறைய பேர் அதைப் படிக்கவும் செய்யறாங்க. நான் வாரத்துக்கு நாலு பேரையாவது மீட் பண்ணிட்டிருக்கேன். அவங்க ஒரு விஷயத்தைக் கூட கத்துக்கலைங்கறதையும் தெரிஞ்சுக்கறேன். அது ரொம்ப வருத்தத்தைக் கொடுக்குது. சவுண்ட் டிசைன் பண்ணனுமா, அது வெறும் சாஃப்ட் வேர் கத்துக்கற வேலை இல்ல, வெறும் ரெக்கார்டு பண்ற வேலை இல்ல, சினிமாவை ஒரு கலை வடிவமாகக் கத்துக்கணும், புரிஞ்சுக்கணும். எப்படிப் பண்றதுன்னு வழி காட்டலாம். ஆனா நீங்க நீங்களா இருந்தா மட்டும்தான் எதையும் கற்றுக்க முடியும். சவுண்டும் அப்படித்தான்."