Published:Updated:

''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி

''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி
''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி

''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி

'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் மூலம் தமிழில் காமெடி நடிகையாக அறிமுகமானவர், வித்யூலேகா ராமன். சென்னை, எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்.சி விஷூவல் கம்யூனிகேஷன் முடித்த கையோடு சினிமாவில் நுழைந்தார். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'வீரம்', 'ஜில்லா' எனப் பல படங்களில் நடித்தவர், தெலுங்குப் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். சமீபத்தில், தன் ட்விட்டர் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பல கோணங்களில் விமர்சனங்கள் வந்துள்ளன. இதுகுறித்து வித்யூலேகாவிடம் பேசியபோது... 

''திடீர் வைரலாகிட்டீங்க. 'ஹீரோயின் வாய்ப்புக்காகத்தான் இப்படியான படங்களைப் பதிவிட்டுள்ளார்' என்று சொல்லப்படுகிறதே...'' 

''நிச்சயமா இல்லே. இப்படி எடுத்துப் போட்டுத்தான் வாய்ப்புக் கேட்கணும்னு அவசியம் இல்லே. காமெடி ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், நானும் ஒரு இளம்பெண். ஏன் ஹீரோயின்கள் மட்டும்தான் இந்த மாதிரி மாடர்ன் மற்றும் கிளாமர் டிரஸ்ஸில் போஸ் கொடுக்கணுமா. நாங்க இப்படி டிரஸ் பண்ணக்கூடாதா. ஹீரோயின்களின் கிளாமர் படங்களை ரோடு ஓரங்களிலும், ஷோரூம்களின் முன்னாலும் பார்க்க முடியும். அந்த அழகு உண்மையில்லை. அந்த மாதிரி படங்களைப் பார்த்துட்டு, அதுதான் உண்மையான அழகுனு எல்லாரும் முடிவுப் பண்ணிக்கிறாங்க. அவ்வளவும் மேக்கப், ஃபோட்டோ எடிட்டிங். இதுதான் அழகுனு யாரும் முடிவு செய்ய முடியாது. என் புகைப்படத்தை சாதாரணமாகத்தான் போட்டேன். இந்தப் படம் போட்ட பிறகுதான் என் தன்னம்பிக்கை அதிகமாகி ரொம்ப சந்தோஷபட்டேன்.'' 

''இந்தப் படத்துக்கு விமர்சனங்கள் வந்துட்டே இருக்கே...'' 

''நீங்க சினிமாவில் பார்க்கும் காமெடி வித்யூலேகா வேற. நிஜத்தில் எப்பவும் மாடர்னாக, ஸ்டைலாகத்தான் டிரஸ் பண்ணுவேன். சின்ன வயசிலிருந்தே நான் இப்படித்தான். ஹீரோயின் சான்ஸூக்காக இப்படிச் செய்யலை. நிஜமா சொல்றேங்க... எனக்கு காமெடியாக நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. கிளாமராக நடிக்கிறதில் விருப்பம் கிடையாது. படங்களில் என்னை காமெடியாப் பார்த்து பழகிட்டதாலே இப்படி ஒரு படத்தைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்க. செந்தில், கவுண்டமணி படங்களைவெச்சு மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. இந்தக் கலாய்ப்பு, மீம்ஸூக்கு நான் அஞ்ச மாட்டேன். இப்போதெல்லாம் யார் என்ன செஞ்சாலும் தேடிவந்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறதையே சிலர் வேலையா வெச்சுட்டிருக்காங்க. அது அவங்க தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிடவும் போறதில்லை.'' 

''உங்கள் உருவத்தைக் கிண்டல் செய்வதாக நினைக்கிறீர்களா?'' 

''நிச்சயமாக! இன்றைய சமூகம் அந்தக் கண்ணோட்டத்தில்தான் பெண்களைப் பார்க்குது. இதையெல்லாம் உடைத்துதான் வெளியே வரணும். ஒரு பொண்ணு எந்த உருவத்தில், எந்த சைஸில், எந்த கலரில் இருந்தாலும் 'நான் அழகு'னு முடிவுப் பண்ணிக்க உரிமை இருக்கு. அந்தத் தன்னம்பிக்கை எனக்கு இருக்குனு காண்பிக்கவே இந்த போட்டோவைப் பதிவிட்டேன். எனக்குத் தெரியும் நான் ஒல்லிக்குச்சி கிடையாது. ஒரு மாடலும் கிடையாது. இந்த மாதிரி டிரெஸ் போட்டு ராம்ப் வாக் நடக்கலையே. பல பொண்ணுங்களுக்கு இந்த போட்டோ தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. பல பொண்ணுங்க எனக்கு மெசேஜ் போட்டு வாழ்த்தி இருக்காங்க. 'உங்க போட்டோ எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கு. இந்த மாதிரி டிரஸ் போட்டு கண்ணாடி முன்னாடி நிற்கும் தன்னம்பிக்கை வந்திருக்கு'னு சொல்லியிருக்காங்க.'' 

''காமெடி நடிகைகள் என்றாலே உருவத்திலும் நடையிலும் சிரிக்கவைப்பதுபோல இருந்தால்தான் ரசிக்கிறார்களா?'' 

''காலம் காலமாக அப்படித்தானே இருக்கு. அதனால்தான் பெண் காமெடி ஆர்ட்டிஸ்ட் குறைவாக இருக்காங்க. அழகாக இருப்பவர்களை காமெடி நடிகைகளாக நடிக்கவைப்பதில்லை. உடல் பருமன், கறுப்பு நிறம் போன்ற ஏதோ ஒண்ணு இருக்கணும்னு முடிவு பண்றாங்க. முன்பெல்லாம், காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக காமெடி நடிகைகளும் இருந்தாங்க. இப்போ அதுவும் குறைஞ்சுபோச்சு.'' 

''உங்களுக்குத் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு வரலையா?'' 

''தமிழ்ப் படங்களில் ஸ்கிரிப்ட் எழுதும்போது, பெரும்பாலும் பெண் காமெடி நடிகைகளை மனதில்வைத்து எழுதறதில்லே. ஹீரோ, ஹீரோயின், காமெடியன் அதைத்தான் பார்க்கிறாங்க. அதில் காமெடி நடிகைகள் இடம்பெறுவதில்லை. சூரி, சதீஸ் போன்றவர்கள் அவர்களுக்கான ஜோடியைப் போடுவதில்லை. முன்பு, சந்தானத்தின் ஜோடியாக என்னைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவரும் ஹீரோவாகிட்டதால் எனக்குத் தமிழிலில் காமெடிக்கான ரோல் கிடைக்கிறதில்லே. தெலுங்கில் அப்படியில்லை. கோவை சரளா மேடத்துக்குப் பிறகு அந்த இடத்தை நான் நிரப்பிவருவதாகச் சொல்றாங்க. ஆந்திர மாநிலத்தின் சிறந்த காமெடி நடிகைக்கான 2015, 16, 17 நந்தி விருதுகள் எனக்குக் கிடைச்சிருக்கு. சந்திரபாபு நாயுடு அவர்கள் கையால் வாங்கப்போறேன். தெலுங்கில் நிறையப் படங்களில் கமிட் ஆகியிருக்கேன்.'' 

''நடிகை சமந்தா உங்களுக்கு அட்வைஸ் பண்ணாங்களாமே?'' 

''ஆமாம்! முன்னாடி என்னைப் பார்க்கும்போது, 'உங்களுக்கு நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ் இருக்கு. இன்னும் அதை இம்ப்ரூவ் பண்ணுங்க'னு சொன்னாங்க. அவங்க என் நலம்விரும்பி. அவங்க நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன்.'' 

''இப்போது வெளியிட்டிருக்கும் படங்கள் பற்றி வீட்டில் என்ன சொன்னாங்க?'' 

''ரொம்ப டீசன்டாக எடுத்த போட்டோதான் எனச் சொன்னாங்க. அப்பாவுக்குத்தான் முதல்ல காண்பிச்சேன். பாராட்டினார். அம்மாவும் பாராட்டினாங்க. இப்போ எங்களை மாதிரியானவங்களுக்கு பிளஸ் சைஸ் மாடல் என்கிற டிரஸ் கிடைக்குது. இந்த ஆண்டின் பெரிய ட்ரெண்டாகி இருக்கு. பிளஸ் சைஸ் மாடலிங்காகவே டிரஸ் தைக்கிறாங்க. அவ்வளவு அழகாக மாடலிங் பண்ணி போட்டோ ஷூட் பண்ணியிருக்காங்க. லண்டனிலிருந்து இரண்டு போட்டோகிராஃபர்கள் மற்றும் மேக்கப் வுமன் வந்தாங்க. சும்மா மீட் பண்ணோம். 'வித்யூ, எனக்காக ஒரு போட்டோஷூட் பண்ண முடியுமா'னு கேட்டாங்க. அவங்க ஐடியாதான் இந்தப் போட்டோ. அவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். போட்டோ ரொம்ப அழகாக வந்திருக்கு. இன்னும் நிறையப் படங்கள் இருக்கு. சீக்கிரமே போஸ்ட் பண்ணுவேன்.'' 

அடுத்த கட்டுரைக்கு