Published:Updated:

ரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்! #HBDRajini

தார்மிக் லீ
ரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்! #HBDRajini
ரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்! #HBDRajini

ரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்! #HBDRajini

அன்புள்ள ரஜினிக்கு...

நான் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகன். இருந்தாலும், உங்களோட எல்லாப் படத்துக்குமே முதல் நாள் டிக்கெட் எடுக்க நிற்பேன். காரணம், `படத்துக்குப் படம் இவர்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கும், ஸ்டைலுக்கும் பஞ்சமே இருக்காது'ங்கிறதுதான். சின்னக் குழந்தையில இருந்து உங்களோட ஸ்டைலைப் பார்த்துதான் வளர்ந்தேன். அரும்பு மீசை எட்டிப் பார்க்குற வயசுலே `சிகரெட் புடிக்கணும்... அதுவும் ரஜினிகாந்த் மாதிரி ஸ்டைலா சிகரெட் புடிக்கணும்'னு ஒவ்வொரு நாளுமே கனவு கண்டிருக்கேன். நீங்க போடுற டிரெஸ், உங்க பாடி லாங்குவேஜ், உங்க வசனங்களோட உச்சரிப்புனு, உங்க தலைமுடிகூட ஸ்டைல் பண்ணும். பொதுவா கமல் ஒரு படத்துல நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரமாவே மாறி நடிப்பார். ஆனா, இது எதுவுமே உங்களுக்குத் தேவைப்படலையே ஏன்? ரஜினி மேக் - அப் போடுவது ரஜினியாகத் தெரிவதற்கு... ஆனால், கமல் மேக் - அப் போடுவது கமல் என்று தெரியாமல் இருப்பதற்கு... என்று ட்விட்டரில் படித்த ஞாபகம்.

உங்க ஸ்டைல் மூலமாவும், இயல்பான நடிப்பு மூலமாவும், கமலுக்கு இணையான தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டியிழுத்துட்டீங்க. இப்போ இருக்குற அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் அவங்களோட ரசிகனா இருக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும். முக்கியமா விஜய் ரசிகனா இருக்கிறவன், அஜித் ரசிகனா மாற மாட்டான். அஜித் ரசிகனா இருக்கிறவன், விஜய் ரசிகனா மாற மாட்டான். ஆனா, அந்தக் காலத்துல ஒரு பக்கம் கமலோட நடிப்பு ஈர்க்கும், மறு பக்கம் ரஜினியோட ஸ்டைல் ஈர்க்கும். `இவங்க ரெண்டு பேர்ல நான் யாரோட ஃபேனா இருக்கலாம்'ங்கிற குழப்பத்துலேயே உங்களோட பல படங்களைப் பார்த்திருக்கேன். 

நீங்க, கமல் ரெண்டு பேரும் பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கீங்க. அதுல கமல்தான் ஹீரோவா இருப்பார், ஆனா மக்களோட ஈர்ப்பும், கவனமும் உங்க பக்கம்தான் இருக்கும். பொதுவா, படத்தைப் பார்க்க வர்ற மக்களுக்கு இரு விதமான கண்ணோட்டம் இருக்கும். ஒண்ணு, கொடுத்த காசுக்கு பிரயோஜனப்படுற மாதிரி படம் என்டர்டெயின்மென்ட்டா இருக்கணும். ரெண்டாவது, படத்துல வர்ற நாய்க்குட்டிகூட நல்லா நடிக்கணும். நான் ரெண்டாவது ரகம். அதுதான் கமலை பிடிக்குறதுக்கும் காரணம். ரஜினி ரசிகனா இல்லாம இருக்கக் காரணம் அவர்கிட்ட நடிப்பே இருக்காதுங்கிறது இல்லை. கமலோட இவர் நடிச்ச எல்லாப் படத்துலேயும், நீங்க கொஞ்ச நேரம் வந்தாலும் ஒட்டுமொத்த அப்லாஸையும் நீங்களே அள்ளிகிட்டுப் போயிருவீங்க.

ஏன்... எனக்கே நீங்க சேர்ந்து நடிச்ச படங்கள்ல, கமலைத் தாண்டி உங்க மேலதான் ஈர்ப்பு அதிகம். ‘இந்தப் படத்துல ரிஸ்க் எடுத்து நடிக்கணும்'னு நீங்க ஒரு படத்துலகூட பண்ணதே கிடையாது. நீங்க கையில எடுக்குற ஸ்க்ரிப்ட்டும் ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். ஆனா, படம் தாறுமாறா இருக்கும், உலகமே உங்களோட படத்தைக் கொண்டாடும். அதுக்குக் காரணம் உங்க ஸ்டைல், அலட்டல் இல்லாத நடிப்பு. தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு ட்ரெண்ட்டைக் கொண்டு வந்ததே நீங்கதான். சினிமாவுக்கு வெறும் நடிப்பு மட்டும் தேவையில்லை. ஸ்டைல் மட்டுமே போதும்னு நீங்க போட்ட விதை... இன்னிக்கு தமிழ்நாடு மட்டுமில்ல, உலகம் முழுக்க உங்களது ரசிகர்கள் மரமா வளர்ந்திருக்காங்க. என்னதான் நான் கமலோட ரசிகனா இருந்தாலும், நாங்க காப்பியடிக்க நினைச்ச ஸ்டைலும், ஹேர் ஸ்டைலும் உங்களுடையதுதான். ‘தளபதி’ படத்துல மம்முட்டி கதாபாத்திரத்துல கமல் நடிச்சுருந்தால் எப்படி இருந்துருக்கும்ங்கிற ஏக்கம், அந்தப் படத்தை பாக்குற ஒவ்வொரு முறையும் ஏற்படும்.

சினிமாவில் நுழையும் முன்பும் சரி, நுழைந்த பின்பும் சரி, ஒவ்வொரு நடிகனுக்கும், கஷ்டப்பட்டு நடிச்சு ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கணும்ங்கிற கனவு கண்டிப்பா இருக்கும். கமல் எடுத்து நடிக்காத கதைக்களமே இல்லை, பண்ற ஸ்டன்டும் டூப் போடாம பண்ணுவார். கமல், அவர் நடிச்ச படங்களை, அழுது வடிஞ்சும் பார்க்க வைப்பார், வயிறு வலிக்க சிரிச்சும் பார்க்க வைப்பார். ஆனா, உங்க படத்தைப் பொறுத்தவரை, ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களாதான் இருக்கும். அப்புறமும் எப்படி எண்ணற்ற ரசிகர்கள் உங்க மேல இவ்வளவு க்ரேஸா இருக்காங்க. கமலோட வெறித்தனமான ரசிகனுக்கும் உங்களை இவ்வளவு பிடிக்கக் காரணம் என்ன? ஏன்னா, உங்களோட ஒவ்வொரு படத்துலேயும் ஏதோ ஒரு ஈர்ப்புள்ள விஷயத்தை பார்த்துட்டே இருக்கலாம்.

உங்க படத்தோட ஸ்டைல் ஒரே மாதிரி இருந்தாலும், அதுல நீங்க வெளிக்காட்டுற ஸ்டைல் ஏராளம். தமிழ் சினிமாவுல, ஒட்டுமொத்த கேங்ஸ்டர் படத்துக்குமே காட்ஃபாதரா இருக்குறது நீங்க நடிச்ச ‘பாட்ஷா’ படம்தான். அதுல நடிப்பே கண்ணுக்குத் தெரியாது. மாஸ் சீன்லேயும் சரி, ரொமான்ஸ் சீன்லேயும் சரி, உங்களோட ஸ்டைல், நீங்க பேசும் பன்ச் டயலாக்குகள், சண்டைக் காட்சிகள் மட்டும்தான் படம் முழுக்க நின்னு பேசும். நடிப்புங்கிறது கடல், அதை வெளிக்காட்ட ஒவ்வொரு நடிகனுக்கும் நிறையவே ஸ்கோப் இருக்கும். அதுக்கு ஓர் உதாரணம் கமல்ஹாசன். ஆனா, நடிப்புக்குப் பதிலா நீங்க கையில எடுத்த விஷயம் ஸ்டைல். தமிழ் சினிமாவின் ‘சூப்பர்ஸ்டார்’ங்கிற பட்டத்தைக் கொடுக்குற ஸ்டைல். 

தமிழ் சினிமாவுல அடுத்த சூப்பர் ஸ்டார் யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனா, நாங்க பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரே சூப்பர் ஸ்டார், அன்றும், இன்றும், என்றும்... நீங்க மட்டும்தான். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துருங்க. உங்க ரெண்டு பேரையும் மறுபடியும் திரையில பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கோம். பிறந்தநாள் வாழ்த்துகள்! 

இப்படிக்கு 

உங்கள் உத்தம வில்லன்.

அடுத்த கட்டுரைக்கு