சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்த விபத்தில் பலியான ரசிகர்களின் வீட்டுக்குச் சென்ற நடிகர் கார்த்தி, கதறி அழுதார்.
‘கார்த்தி மக்கள் நல மன்றத்தின்’ திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜீவன்குமார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் காரில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தது. காரில் பயணித்த ஜீவன்குமார், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர். இதில், சிகிச்சைப் பலனின்றி ஜீவன்குமார், தினேஷ் ஆகியோர் பலியாகினர். இந்தத் தகவல் தெரிந்ததும் திருவண்ணாமலைக்குச் சென்றார் நடிகர் கார்த்தி. ஜீவன்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது நடிகர் கார்த்தி, கதறி அழுதுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 'பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும்' என்று நடிகர் கார்த்தி, தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். விபத்தில் பலியான ஜீவன்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.