Published:Updated:

"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்..." #Woodbits

"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்..." #Woodbits
"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்..." #Woodbits

`காலா'வுடன் போட்டிபோடும் படம் 

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரப்பரப்பாக நடந்துவருகின்றன. ஏப்ரல் 27- ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. அதே தேதியில் உலகமெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள மார்வல் ஸ்டுடியோஸின் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட சூப்பர்மேன், பேட்மேனைத் தவிர நாம் பார்த்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் இப்படத்தில் இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படமும் தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள 'காலா'வும் உலகளாவிய அளவில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இருந்தாலும், நம்ம வேங்கைமவன் 'காலா' ஒத்தையா நிப்பாரு!.

பாபி சிம்ஹாவின் வெப்சீரிஸ் 

தமிழ் ரசிகர்களுக்கிடையே வெப்சீரிஸ் கலாசாரம் பெருகி வருகிறது. யூ-டியூப், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என எல்லா வீடியோ வலைதளங்களின் தொடர்களையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதைப் புரிந்துகொண்ட திரை நட்சத்திரங்கள், மெள்ள மெள்ள வெப்சிரீஸ் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். 'ப்ரீத்' என்ற இந்தித் தொடரில் மாதவன் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழில் பாபி சிம்ஹா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இத்தொடரை ' `சவாரி' படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் எழுதி இயக்குகிறார். பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். 

நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படம் 

'வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி, 'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலியின் 'நான் ஈ' படம் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் கடந்த மூன்று வருடமாக ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நானி, சமீபத்தில் தயாரித்த 'ஆவ்' படமும் ஹிட் ஆனது. டோலிவுட்டின் 'நேச்சுரல் ஸ்டார்' என அழைக்கப்படும் இவரின் அடுத்தபடம்,  'கிருஷ்ணார்ஜுனா யுத்தம்'. காதல், காமெடி, ஆக்‌ஷன் என வழக்கமான நானி படங்களின் டெம்ப்ளேட்டில் ஃபிட் ஆகியிருக்கும் இத்திரைப்படம், டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடி அனுபமா பரமேஸ்ரன்.     

சல்மான் படத்தில் ஸ்டண்ட் செய்யும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் 

2008-ல் அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் சைஃப் அலிகான் நடித்து வெளிவந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'ரேஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதேகூட்டணியில் மீண்டும் வெளியான 'ரேஸ் 2' திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது, சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்க, பிரபல நடன இயக்குநர் 'ரேஸ் 3' இந்தத் தலைப்பின் 3-வது அத்தியாயமாக வெளிவருகிறது. இப்படத்திற்காக நாயகி பிரத்யேக சண்டைக் காட்சிகளுக்காக மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அனுராக் காஷ்யப் - அபிஷேக் கூட்டணி 

முன்னணி பாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தற்போது நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தியில் தொடர்ந்து படம் இயக்கிவரும் இவர், அடுத்து அபிஷேக் பச்சனை வைத்து 'மன்மர்ஸியான்' எனும் படத்தை இயக்கிவருகிறார். 'கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து படத்தில் நடிக்கிறேன்' என்று அபிஷேக் நெகிழ்வாய் ட்வீட் செய்ய, சூர்யா உள்பட அபிஷேக்கின் திரையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.    

பின் செல்ல