Published:Updated:

"அவரோட ஒரு போட்டோகூட எடுக்கலைனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு!" - எடிட்டர் அனில் மல்நாட் மறைவு குறித்து இயக்குநர் ஸ்டான்லி

"அவரோட ஒரு போட்டோகூட எடுக்கலைனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு!" - எடிட்டர் அனில் மல்நாட் மறைவு குறித்து இயக்குநர் ஸ்டான்லி
"அவரோட ஒரு போட்டோகூட எடுக்கலைனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு!" - எடிட்டர் அனில் மல்நாட் மறைவு குறித்து இயக்குநர் ஸ்டான்லி

"அவரோட ஒரு போட்டோகூட எடுக்கலைனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு!" - எடிட்டர் அனில் மல்நாட் மறைவு குறித்து இயக்குநர் ஸ்டான்லி

"நான் இதுவரை இயக்கியது, நான்கு படங்கள். எல்லாப் படங்களிலும் என்னுடன் அனில் மல்நாட் வொர்க் பண்ணியிருக்கார். அவரை முதல் முதலில் பார்த்த ஞாபகத்தை என் நினைவுகளிலிருந்து அழிக்கமுடியாது'' - எடிட்டர் அனில் மல்நாட் மறைவு குறித்த வருத்தத்தைப் பதிவுசெய்து பேசத் தொடங்குகிறார், இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி.

எடிட்டர் பிரிவில் இந்திய அரசால் முதல் முறையாக தேசிய விருது வாங்கியவர், அனில் மல்நாட். கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான படங்களுக்கு எடிட்டிங் செய்திருக்கிறார். இதில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பெரும்பாலான இந்திய சினிமாக்கள் அடங்கும். இன்று அதிகாலை உடல்நிலை குறைவால் மரணமடைந்துள்ளார், அனில் மல்நாட். இவரது நினைவலைகளைப் பற்றி இயக்குநர் ஸ்டான்லி நம்மிடம் பகிர்ந்துகொண்டவை. 

”அப்போது, என் முதல் படத்தைக்கூட நான் இயக்கியிருக்கவில்லை. `ஏப்ரல் மாதத்தில்' படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆபீஸ் ரிசப்ஷனில் ஒருவர் ரொம்ப நேரமாக வந்து உட்கார்ந்திருந்தார். அவர் யாரைப் பார்க்க வந்திருக்கிறார்னு எனக்குத் தெரியலை. அவரை யார்னு அங்கிருந்த யாருமே விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் நான் அவரைக் கிராஸ் பண்ணிப் போனேன், அவரைப் பார்த்தேன். `ரொம்ப நேரமா இந்த மனுஷன் இங்கே உட்கார்ந்திருக்காறே'னு ஆபீஸ் பாயைக் கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னேன். அப்போது அவர், தன்னை `எடிட்டர் அனில் மல்நாட்'னு ஆபீஸ் பாயிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதை ஆபீஸ் பாய் என்னிடம் சொன்னவுடனேயே, உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லுனு பதறிப்போய் சொன்னேன். ஏன்னா, அனில் மல்நாட் பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தெலுங்கு, இந்தி என நிறைய படங்களுக்கு எடிட்டராக இருந்திருக்கிறார். தமிழில் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய `கிழக்கு வாசல்' படத்துக்கு அனில் மல்நாட்தான் எடிட்டர். ஆனால், அவரை நான் நேரில் பார்த்ததில்லை. அதனால்தான், என்னால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்னு தெரிந்தவுடனே ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா, அப்போதே அவர் 100 படங்களுக்கு மேல் எடிட்டராக வேலை பார்த்து, தேசியவிருதும் வாங்கியிருந்தார். 

உள்ளே வந்த அனில் மல்நாட், என்னிடம் அவர் கொண்டு வந்திருந்த ரெஸ்யூமை நீட்டினார். `என்ன சார் நீங்க ரெஸ்யூம் தர்றீங்க. எவ்வளவு பெரிய எடிட்டர் நீங்க'னு கேட்டேன். `இல்லை, நான் எந்தப் புது இயக்குநரைப் போய் பார்த்தாலும், அவர்களிடம் என் ரெஸ்யூமைத் தருவேன்'னு சொன்னார். இது எனக்கு ஆச்சர்யத்தையும், அவர் மீது மிகுந்த மரியாதையும் ஏற்படுத்துச்சு. இப்போ எல்லாம் ஒருவர் வாய்ப்பைக்கூட எஸ்.எம்.எஸ் பண்ணித்தான் கேட்குறாங்க. ஆனால், இவர் என்னைப் பார்க்க பொறுமையாகக் காத்திருந்து வாய்ப்பு கேட்டார். அவர் வொர்க் பண்ண படங்களைப் பற்றியெல்லாம் என்னிடம் சொன்னார். 'சார், இப்படியெல்லாம் சொல்லாதீங்க சார். உங்களை இதுவரைக்கும் சந்தித்ததே இல்லை. அதனால்தான், முகம் தெரியாமல் இருந்துட்டேன்'னு சொன்னேன். ரொம்ப நேரம் அவரிடம் ஸாரி கேட்டேன். அவர் இதைப் பெரிசாவே எடுத்துக்கலை. உடனே, என்னுடைய முதல் படத்தில் அவரை எடிட்டராகக் கமிட் பண்ணினேன். அவருடைய வொர்க் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போயிருச்சு. ஒரு டைரக்டர் என்ன எதிர்ப்பார்க்கிறாறோ, அதை அவ்வளவு சரியாகச் செய்து கொடுப்பார். அவரை மாதிரி ஒரு எடிட்டர் கிடைச்சா, இயக்குநர் எடிட்டிங்கில் முழுநேரமும் உட்காரணும்னு அவசியமே இல்லை. இயக்குநரின் ரசனை தெரிஞ்சிருச்சுனா, அதுக்குத் தகுந்தமாதிரி வேலை பார்த்துக் கொடுத்துடுவார். 

எனக்குத் தெரிஞ்சவரை, அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்னு நினைக்குறேன். ஆனா, சென்னையில் அவர் செட்டிலாகிவிட்டார். ஶ்ரீகர் பிரசாத்திடம் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறார். எப்போதாவது எனக்கு போன் பண்ணுவார். `ஏதாவது படங்கள் இருந்தால் சொல்லுங்க, ஒண்ணா வொர்க் பண்ணுவோம்'னு சொல்வார். `கண்டிப்பா, நான் படம் எடுத்தால் உங்களைதான் எடிட்டராக கமிட் பண்ணுவேன்'னு சொல்வேன்.

காலத்துக்கு ஏத்தமாதிரி தன்னுடைய எடிட்டிங் ஸ்டைலை அவர் மாத்திக்கிட்டார். பழைய சாஃப்ட்வேரில்தான் அவங்கெல்லாம் எடிட்டிங் பண்ணாங்க. அதுக்குப் பிறகு காலம் மாறும்போது நியூ வெர்ஷன் சாஃப்ட்வேர் வந்தவுடனே அதிலேயும் எடிட்டிங் செய்ய ஆரம்பிச்சார். என்னுடைய `ஏப்ரல் மாதத்தில்', `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', `மெர்க்குரிப் பூக்கள்', `கிழக்குக் கடற்கரை சாலை' படங்களில் எல்லாம் நியூ வெர்ஷன் எடிட்டிங் பண்ணார், மல்நாட். பெரிய பெரிய எடிட்டர்கள் எல்லாம்கூட நவீன எடிட்டிங் பழகாமல் காணாமல் போயிட்டாங்க. ஆனா, இவர் சூழலுக்கு ஏத்தமாதிரி வேலையில் தன்னையும் மாற்றிக்கொண்டார். அவருடன் ஒரு போட்டோகூட நான் எடுக்கவில்லை. அதை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். அவர் இறந்துவிட்டார் என்று கேட்கும்போது பேரதிர்ச்சியாக இருக்கிறது" என்கிறார், எஸ்.எஸ்.ஸ்டான்லி.  

தேசியவிருது பெற்ற எடிட்டர் ஒருவருக்கு, அவரைப் பற்றிய விக்கிபீடியா பக்கமோ, இணையதளங்களில் புகைப்படமோகூட இல்லை என்பது, பெரும் வருத்தத்திற்குரிய செய்தி. எடிட்டர் அனில் மல்நாட் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!.

அடுத்த கட்டுரைக்கு