Published:Updated:

"கேமரா இருந்தா கேமராமேன்; லேப்டாப் இருந்தா எடிட்டர்... இதான் எங்க ரகசியம்"! #MicSet

"கேமரா இருந்தா கேமராமேன்; லேப்டாப் இருந்தா எடிட்டர்... இதான் எங்க ரகசியம்"! #MicSet
"கேமரா இருந்தா கேமராமேன்; லேப்டாப் இருந்தா எடிட்டர்... இதான் எங்க ரகசியம்"! #MicSet

யூடியூப் சேனல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய யூடியூப் ஸ்டார்ஸ் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக செலிபிரட்டி அந்தஸ்தில் மிளிர்கிறார்கள். இளைஞர்கள், பெரியவர்களின்  மனதில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் இவர்களின் வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பும் முயற்சியுமே நிற்கிறது. அப்படி சமீபமாக ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் 'மைக்செட் ' யூடியூப் சேனல் டீமை சந்தித்துப் பேசினோம். 

`மைக்செட்' டீம் எப்படி உருவாச்சு?

"நாங்க எல்லாரும் பாண்டிச்சேரி.   ஆரம்பத்துல  தனித்தனியா ஷாட் பிலிம்ஸ், வீடியோஸ்னு நிறைய பண்ணிட்டு இருந்தோம். யாருக்குமே சரியான அங்கீகாரம் கிடைக்கல. ஆனால், எல்லாருக்கும் மீடியா மேல் இருந்த ஆர்வம் அதிகம். ஒருத்தர் நல்ல கேமராமேன், ஒருத்தர் நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர், ஒருத்தர் நல்ல எடிட்டர்.  இப்படி அவங்களுடைய இன்ட்ரஸ்ட் வைச்சு ஃபார்ம் பண்ணினது எங்க டீம். எல்லார்கிட்டயும் பெர்சனலா பேசி 'ப்ளாட் பார்ம் எக்ஸ்'னு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணிணோம். முதலில் பண்ணின வீடியோவே பிளாஸ்டிக் அரிசி பற்றியதுதான். ஆரம்பத்திலேயே கருத்து சொன்னதால அதுக்கு சரியான ரீச் கிடைக்கல.  சரி, காமெடியான தீம் ஜெனரேட் செய்யலாம்னு ஆரம்பிச்சதுதான் 'மைக்செட்'.

ஜூலை 2017ல் தான் மைக்செட் ஸ்டார்ட் செஞ்சோம். ஏற்கெனவே நிறைய வீடியோஸ் பண்ணியிருந்தாலும், எக்ஸாம் சோதனைகளுக்குப் பிறகுதான் லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமானாங்க" என இடைவிடாமல் பேசிமுடிக்கிறார் மைக்செட் டீம் கோ-ஆர்டினேட்டர் ஸ்ரீராம்.

அது என்ன சோதனைகள்? 

யூடியூப் காமெடி சேனல்னு சொன்னாலே பரிதாபங்கள், அலப்பறைகள், அட்ராசிட்டி இப்படி பெயர் வைக்கணுங்கிறது எழுதப்படாத நியதி. அப்படி வைச்சதுதான் 'சோதனைகள்'. இன்னைக்கு நாம கஷ்டப்படுற விஷயத்தை ரொம்ப நாள் கழிச்சு நினைச்சுப் பார்க்கும்போது சிரிப்பு வரும். சோதனைக்கான கண்டென்ட்டும் அப்படிதான் தயார் செய்றோம்.

``மைக்செட்டுடைய ஷூட்டிங் ஸ்பாட் எப்படி, சீரியஸா இருக்குமா?''

`` `சீரியஸ்' இந்த வார்த்தையை ரொம்ப நாளாக டிக்ஷனரியில் தேடிட்டு இருக்கோம்; இன்னும் கிடைக்கல. ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இருக்காது. காலேஜ் பிரேக் டைமிங்கில் என்ன மனநிலையில் இருப்போமோ, அதே போலத்தான் டிஸ்கஷன் ஸ்பாட்டும் இருக்கும். அஞ்சுபேர் சேர்ந்து ஸ்கிரிப்ட் பண்ணுவோம். மீட்டிங் போட்டு கான்செப்ட், டயலாக்ஸ் எல்லாம் ஜெனரேட் பண்ணிட்டு இருப்போம். ஒரு வீடியோ கண்டிப்பா ஒரு மீட்டிங்கில் முடியாது.  'டேக் போணும் வாங்கடா'னு கேமராமேன் அந்தப் பக்கம் கத்திட்டு இருப்பான். ஒரு அஞ்சு நிமிஷம் பொறுடா,  ஸ்கிரிப்டை படிச்சுக்கிறேனு அவனை அலற விட்டுட்டு இருப்போம்.  ஹியூமர் அங்கயே ஸ்டார்ட் ஆயிடும். எங்களுடைய ப்ளூப்பர்ஸ் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் நிறைய ஐடியாஸ் கிடைக்கும். ஸ்கிரிப்ட் எழுதி பேசுறதைவிட பசங்களுடன் சாதாரணமா பேசிட்டு இருக்கும்போது அவ்வளவு ஜாலியா இருக்கும். ஒரு கவுன்ட்டரோ, தீமோ ஜெனரேட் ஆயிட்டே இருக்கும்" என கலகலக்கிறார்கள் மார்வின் மற்றும் பிரவீன்

``குறைந்த காலத்தில் இவ்வளவு ரீச் கொடுக்க என்ன காரணம்னு நினைக்கிறீங்க?'' 

``அதைத்தான்  நாங்களும் யோசிக்கிறோம். எப்படி 3,00,000 சப்ஸ்க்ரைபர்ஸ் வந்தாங்கனு இதுவரைக்கும் எங்களுக்குத் தெரியல.  ஆனால், இவ்வளவு ரீச் கொடுக்கும்னு சத்தியமா நெனச்சுப் பார்க்கலைங்க. மக்களுக்குத்தான் நன்றி சொல்லணும்" என தொடர்ந்து பேசுகிறார் , கோகுல்.

``நிறைய யூடியூப் சேனல்ஸ் போல் கிரீன்மேட் யூஸ் பண்ணாம ரியல் லொகேஷனில் ஷூட் பண்ணுவோம். இப்போ ஒரு கிளாஸ்ரூம் செட்டப் தேவைப்பட்டால் ஸ்கூல் அல்லது காலேஜில் பர்மிஷன் வாங்குவோம். அவங்க கொடுக்குற நேரத்துக்குள் ஷூட் செஞ்சு முடிக்கணும். பசங்க நல்லா நடிப்பதால் சீக்கிரமாக ஷூட்டிங் முடிச்சிருவோம். ஒரு சில சீனில் தானாக சிரிப்பு வந்துரும். அதை கண்ட்ரோல் செய்யதான் ரொம்ப கஷ்டப் படுவோம்." 

`` `மைக்செட்' டெக்னிக்கல் டீம் எப்படி?'' 

``எங்க டீமில் ஒரு விஸ்காம் ஸ்டூடண்ட்கூட கிடையாது. பத்து வீடியோஸ்கிட்ட டெக்னிக்கல் டீம்னு தனியா எதுவும் இல்லைங்க. கேமரா வைச்சிருக்கிறவன் கேமராமேன். நல்லா எழுதறவன் ஸ்கிரிப்ட் ரைட்டர் . டேய், நீ லேப்டாப் வைச்சிருக்கியா..... அப்போ நீ தான் எடிட்டர். இப்படி சேர்த்ததுதான் எங்க டெக்னிக்கல் டீம். எடிட்டரா கௌதம், ஒளிப்பதிவாளரா  குமார், மூர்த்தி,  விக்கி பண்றாங்க. இப்போ டீம் பெரிசாயிடுச்சு அதனால் கஸ்டமைஸ் பண்ணிக்கிட்டோம்."

``வீடியோவிற்கான கான்செப்ட் எப்படி தேர்ந்தெடுப்பீங்க?''

``ஸ்பெஷல் டேஸ், சீசன் இவற்றைப் பார்ப்போம். கமெண்ட் பாக்ஸில் கான்செப்ட் சொல்லுங்கனு ஆடியன்ஸ்கிட்ட கேட்போம்.  எங்க வீடியோஸ்ல அதிகமா லவ், ஃப்ரெண்ட்ஷிப்னு எவர்கிரீன் கண்டெண்ட்தான்.’’
மைக்செட் சேனலில் பொலிட்டிக்கல் சட்டையர் வீடியோஸ் பண்ண மாட்றீங்களே... பயப்படுறீங்களா குமாரு..? என்றதும் முதல் ஆளாகப் பேசுகிறார் ஸ்ரீராம்.

``கேலி செய்யற அளவுக்கு ஒரு அரசியல்வாதி இருக்காருனா அவரை தேர்ந்தெடுத்த நாமதான் அஜாக்கிரதையாய் இருந்திருக்கோம். அரசியல்வாதிகளை கலாய்ப்பதைவிட, அதற்கு இடம் கொடுத்த  மக்களின்  தவறுகளை சுட்டிக் காட்டுவதுதான் சரியா இருக்கும்" என்கிறார்.

``உங்கள் டீமில் ஆக்டர்ஸ் மட்டும் ஏன் மாறிட்டே இருங்காங்க? 

``தொடக்க வீடியோஸில் ஆள் கிடைக்காமல் சொந்தகாரப் பொண்ணை நடிக்க வைச்சிட்டு இருந்தோம். நடிக்குறதுக்கு ஆள் கிடைக்கணும்னு போகாத கோயில் இல்லை, பார்க்காத பொண்ணு இல்லை. கெஞ்சிக் கெஞ்சி கேமரா முன்னால் அவங்களைக் கொண்டு வருவதே பெரிய விஷயமாய் இருக்கும். கிடைக்கிற பொண்ணுங்களால் டீமில் கடைசிவரை  டிராவல் பண்ண முடியல. ஆனால், இப்போ நடிப்பதற்கு நிறைய பேர் ஆர்வமா வராங்க. வீ ஆர் ஹேப்பி நவ்."

``சோஷியல் மெசேஜை மைக்செட்டிடம் எதிர்பார்க்கலாமா?''

``நிச்சயமாக. எங்களுடைய எதிர்கால திட்டத்தில் அதுவும் இருக்கு. பெண்கள் தினத்துக்கு 'ஒய் விமன்' னு (Why women) வீடியோ பண்ணிணோம். மற்ற வீடியோஸுக்கு ஒன் மில்லியன் வியூஸ் போயிட்டு இருக்கும். ஆனால், சோஷியல் விஷயங்களுக்கு அவ்வளவு ரீச் கிடைக்காதது வருத்தமா இருக்கு. சமீபமா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி  வீடியோ ஒண்ணு பண்ணியிருக்கோம். ரெஸ்பான்ஸுக்காக வெயிட்டிங்."

``மறக்க முடியாத கமெண்ட்ஸ்?''

``நல்ல வீடியோ ப்ரோ. நல்லா நடிக்ககிறீங்கனு நிறைய பாசிடிவ் கமென்ட்ஸ் வரும்’’ என்ற மார்வினை இடைமறித்து, ’பெர்சனலா 'ஐ லவ் யூ' கூட வரும். இல்லையாடா..!?’ என்கிறார் சேஷாத்ரி. ’’டேய் சேஷா,  இதுமட்டும் கேட்குதாடா உனக்கு...’’ என கலாய்த்து விட்டு தொடர்ந்தார் மார்வின். "நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்தால் அதுக்கு ஒரு லைக்கைப் போட்டுட்டு, ஸ்க்ரோல் பண்ணிட்டு போயிட்டு இருப்போம்.  திரும்ப வந்து பார்த்தா கமென்ட் பாக்ஸில் அவங்களுக்கு உள்ள அடிச்சிட்டு இருப்பாங்க"

`எல்லோருக்கும் அடுத்த இலக்கு சினிமா தானே...’ என்றால் கோரஸாக ஆமோதிக்கிறார்கள். ``ஸ்ரீக்கு மூணு படங்களில் வாய்ப்பு வந்துருக்கு. மே மாதத்தில் இருந்து ஷூட் ஆரம்பிக்குது. தனித்தனியாய் வாய்ப்புகள் வந்தாலும் எங்க டீமுக்கு ஒரு ஆசை இருக்கு. தயாரிப்பாளர் கிடைச்சா செமயான ஹாரர் காமெடி படம் ஒண்ணு பண்ணணும். ஆர்வமுள்ள தயாரிப்பாளர்கள் எங்களை அணுகவும்" என்ற ஒட்டு மொத்த மைக்செட் குழுவுக்கும் ஒரு வாழ்த்தைப் போட்டுவிட்டு நகர்ந்தோம்.